ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2023

நான் சொல்லிக் கொடுத்த சக்தி உனக்கல்ல… எல்லோருக்காக…! என்றார் குருநாதர்

குருநாதர் எனக்குச் சொன்னது… ஒவ்வொரு உயிரும் கடவுள்… அவன் வீற்றிருக்கக் கூடிய ஆலயம் தான் அந்த மனித உடல்.
1.அங்கிருக்கும் ஈசனை வேண்டி… நல்ல உணர்வின் தன்மை அங்கே பெற வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்.
2.நான் உனக்குச் சொல்லிக் கொடுத்து… நீ கற்றுணர்ந்த சக்தி உனக்கல்ல.
3.எடுத்துக் கொண்ட அந்தச் சக்தி எல்லோருக்குள்ளும் விளைய வேண்டும் என்று அந்த ஈசனுக்கு நீ படை.
4.அந்த உணர்வின் சக்தி அங்கே விளைந்து மகிழ்ந்திடும் மூச்சின் தன்மையாக வெளி வரப்படும் போது
5.அதை நீ சுவாசித்தால் உனக்குள் இருளைப் போக்க அவன் உதவுவான்.

ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் கூட அவனுக்கு நல்லதாக வேண்டும் என்ற மூச்சுகளை நாம் விட்டால் நல்லதாகும். அந்த ஒளியான உணர்வுகளைச் சேர்த்து அடுத்தவர்களுக்குக் கொடுக்கப்படும் போது நம்முடைய எல்லை (ஒளி நிலை) அதுவாகின்றது.

ஆகவே
1.எல்லோரும் மெய் ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று நீ செயல்படுத்து…. மெய் உணர்வைப் பதிவு செய்
2.அந்த உணர்வின் வித்தை வளர்க்கும் பக்குவத்தை எல்லோருக்கும் ஊட்டு
3.அறியாது சேர்ந்த துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று நீ செயல்படுத்து.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி…! ஏனென்றால் எதைக் கொடுக்கினாறோமோ சிருஷ்டிப்பது அவன் தான்…! உயிரே அதைப் படைக்கின்றது.

எண்ணியதை எண்ணச் செய்வதும் அதை இயக்கச் செய்வதும் அதைப் படைப்பதும் உயிரே. தன் உயிரைப் போன்றே எல்லோரையும் நீ மதி அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உனக்குள் தோன்றும்.

ஒருவன் திட்டுகிறான் என்றால்…
1.இப்படிப் பண்ணுகிறானே பாவி…!
2.இருக்கட்டும் நான் பார்க்கின்றேன்…! என்று சொன்னால்…
3.இங்கே உடலுக்குள் அதே உணர்வுகள் “இரு நான் பார்க்கிறேன்…” என்று வந்து விடுகின்றது
4.நமது உயிர் அவ்வாறு அதைப் படைத்து விடுகின்றது.

இதைத்தான் குருநாதர் எனக்குச் சொன்னார் அதைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.

உதாரணமாக நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் காரம் அளவோடு இருந்தால் அது சுவையாக உள்ளே செல்லும். ஆனால் அந்தக் காரத்தை தனித்து உட்கொண்டால் ஆ…! என்று அலறுகின்றோம். வாயில் ஊறும் உமிழ் நீர் எங்கே போனது என்றே தெரியாது. அதிகக் காரம் ஆனால் விக்கலாக வருகின்றது.

அந்த நேரத்தில் மடக்கு… மடக்கு… என்று உடனே நீரைக் குடிக்க வேண்டி இருக்கின்றது. அப்போது தான் அதைத் தணிக்க முடியும்.

ஆனால் ஒரு வழுவழுப்பான பொருள்களில் அளவோடு காரத்தை இணைத்தால் எங்கேயோ இருக்கக்கூடிய உமிழ் நீர்கள் மொத்தமாக விறு விறு என்று உற்பத்தியாகி வேகமாக அந்த உணவை ரசித்துச் சாப்பிடும்படி செய்கின்றது.

இதைப் போல்
1.மனிதனுக்குக் கோபம் தேவைதான்… அதை அளவுடன் கட்டுப்படுத்தும் நிலை வேண்டும்
2.சஞ்சலம் நமக்குள் ஒரு உணர்வின் தன்மையைச் சிந்திக்கச் செய்கின்றது.
3.ஆனால் அளவுடன் இருக்கச் செய்து அதை வளர விடாதபடி சஞ்சலத்தை நீக்கும் முயற்சி தேவை.

இவ்வாறு ஒவ்வொரு உணர்வின் தன்மையும் உணர்ந்து அதிலே நல்லதை வளர்த்துக் கொள்வதற்கு
1.நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அந்த மகா ஞானிகளின் ஆற்றல் மிகுந்த சக்தியை
2.ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்குத் தான்
3.குருநாதர் பல அனுபவங்களைக் கொடுத்து எம்மைத் தெளிவாக்கித் தெளிம்படி செய்தார்’

அதனின் அடிப்படையிலே தான் உங்களுக்கும் குரு வழியில் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.