ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2023

இருதயத்தையும் சிறுநீரகத்தையும் நுரையீரலையும் காக்க வேண்டியதன் அவசியம்

நம்முடைய வாழ்க்கையில் அடிக்கடி வேதனை வேதனை என்ற உணர்வுகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருந்தால் அந்த வேதனை என்பதே நஞ்சு தான்.

1.இருதய வால்வுகள் வேதனை கலந்த அந்த இரத்தத்தை ஈர்க்கப்படும் பொழுது
2.அதற்குள் பட்ட உடனே “பித்தத் தடிப்பு” ஏற்படுவது போன்று ஆகிவிடுகிறது.

ஒரு விஷப்பூச்சியோ எறும்போ கொசுவோ நம்மைக் கடித்து விட்டால் அந்த இடத்திலே வீக்கம் ஆவது போன்று வேதனை கலந்த இரத்தமாக உருமாறிய பின் இருதயத்தில் உள்ள பிஸ்டன் இரத்தங்களை இழுத்துப் பாய்ச்சப்படும் பொழுது அந்த வால்வுகளில் வீக்கம் ஏற்பட்டு விடுகின்றது.
1.வால்வு இருக்கும் பாகங்களில் அதிகமான வீக்கம் ஏற்பட்டால் மூச்சுத் திணறலும்
2.வலி தாங்காதபடி வேதனைப்படும் நிலையும் வந்துவிடுகிறது.

அங்கு மட்டும் அல்ல. சிறிதளவு இரத்தத்தை எடுத்து வந்தாலும் அதைச் சுத்தப்படுத்தும் கிட்னியிலும் அந்த நஞ்சு கலந்த பின் சுத்தப்படுத்தும் திறன் இழந்து விடுகின்றது.

விஷம்பட்ட இடங்களில் எல்லாம் அந்தந்த உறுப்புகளையும் செயலற்றதாக்கிச் சுத்தப்படுத்தும் செயலும் இழந்து விடுகின்றது. கிட்னி சரியாகச் செயல்படவில்லை என்றால் நம் உடலிலே இரத்தங்களைச் சுத்தப்படுத்தும் செயல்கள் இழந்து விடுகின்றது.

உப்புச் சத்தையும் சர்க்கரைச் சத்தையும் பிரிக்கும் நிலையோ… சமப்படுத்தும் நிலை இல்லாது போய் விடுகின்றது. உப்புச்சத்தைச் சீராகப் பிரிக்கவில்லை என்றால் என்ன நடக்கிறது…?

உப்பை ஒரு துணியில் கட்டி வைத்தோம் என்றால் அது நீராக மாறி ஒரு விதமான பசவுகள் ஏற்பட்டு விடுகின்றது.

அது போன்று
1.இந்த இரத்தங்களுடன் உப்புச் சத்து மாறும் பொழுது
2.நுரையீரலில் சுவாசப் பைகளில் உள்ள செல்கள் அனைத்திலும் நீர்கள் உறைந்து விடும்.

நல்ல இரத்தங்களை அது இயக்க விடாது அதனுடன் இணைக்கப்படும் பொழுது இருதயத்தின் வால்வுகள் சரியாக இயங்காத போது நுரையீரல் மற்ற அனைத்துமே உப்புச் சத்து நிரம்பி விடுகின்றது.

1.பின் சுவாசம் எடுக்க முடியாதபடி மூச்சுத் திணறலும் திகட்டலும் வரும்.
2.அதே சமயத்தில் தன்னுடைய எண்ணங்கள் வரப்படும் பொழுது “ஒரு பித்துப் பிடித்தவனைப் போன்று” அவனை ஆட்டிப் படைத்துவிடும்.

ஒரு விஷம் தீண்டி விட்டால் அதிகமான விஷம் ஆகும்பொழுது உடல் உறுப்புகள் எப்படிச் செயலற்றதாக மாறுகின்றதோ இதைப் போன்று தான் மற்றவர்கள் செயலைக் கண்ணுற்றுப் பார்த்து வேதனைப்படும் பொழுது ஊழ் வினையாக நமக்குள் பதிவாகி விடுகின்றது.

பின் அதன் தொடர் வரிசையான நிலைகள் எண்ணங்கள் வரும் பொழுது வேதனையையே மீண்டும் மீண்டும் சுவாசிக்க நேருகின்றது. அதனால் உடல் உறுப்புகள் பாழாகின்றது.

நிலத்திலே ஒரு வித்தை ஊன்றி விட்டால் அது செடியாக மாறி வளர்ச்சியில் தன் இனமான வித்தை உருவாக்குவது போன்று நமது வாழ்க்கையில் நல்ல குணங்கள் கொண்டிருக்கப்படும் போது நற்செயலாக ஆரோக்கிய நிலையாக விளைகிறது.

ஆனால் நல்ல குணங்கள் கொண்டு பிறருடைய செயல்களைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பு வேதனை கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் என்ற இத்தகைய உணர்வுகளைத் தூண்டச் செய்து விடுகிறது.
1.அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எதைப் பதிவு செய்கின்றோமோ
2.அது ஊழ்வினையாக வித்துக்களாக மாறிக் கொண்ட இருக்கிறது.

ஒரு நிலத்திற்குள் பல விதமான வித்துக்களைப் போட்டால் அந்தந்த வித்து அதன் சத்தை அது கவர்ந்து அதனுடைய பலனைக் கொடுப்பது போன்று இந்த வாழ்க்கையில் நமக்குள் தீய வினைகள் அதிகமாகச் சேர்ந்து நோயாகி இந்த உடலை நலியச் செய்து விடுகின்றது. அதை நாம் நீக்க வேண்டும்

அதற்குத்தான் “ஆத்ம சக்தி” என்ற ஆயுதமாக உங்களுக்குக் கொடுத்துள்ளோம். அதன் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வப்பொழுது சேர்த்து தீய வினைகள் உடலுக்குள் விளையாதபடி
2.தீமையற்ற வாழ்க்கையாக மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியாக
3.அருள் ஒளி பெறும் சந்தர்ப்பமாக உருவாக்கிக் கொடுக்கின்றோம்.