ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2023

ஓ…ம் ஓ…ம் என்று சொல்கின்றோம்… ஏன்…? எதற்கு…?

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

கோவிலுக்குச் செல்கின்றோம்… ஒவ்வொரு கோவிலிலும்… முன்னாடி “ஓ…ம்” போட்டு வைத்திருக்கின்றார்கள். நாம் கோவிலுக்குச் சென்றால் சாமி கும்பிடுகின்றோம்…! ஏன் கும்பிடுகிறோம்…? எப்படிக் கும்பிடுகின்றோம்…? கும்பிடுவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கின்றது…? இதை யாரும் தெளிவாக நமக்குச் சொல்லவில்லை.

1.கஷ்டம் வந்தது என்றால் “அந்தத் தெய்வத்திடம் உன் குறைகளை எல்லாம் சொல்லிக் கேள்…”
2.மனம் உருகி நீ அழுது முறையிடும் பொழுது “தெய்வம் உனக்கு உதவி செய்யும்…” என்று தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

இப்போது நாம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம் ஈஸ்வரா என்றால் “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்…” அங்கிருந்து அவன் சிருஷ்டிக்கின்றான்…! என்று தான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் அந்த ஈஸ்வரன் யார்…?

ஓ…ம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… ஜீவன் உள்ளது…! என்று இப்படித்தான் எல்லோரும் வாதிடுகின்றார்கள்.

உதாரணமாக ரோட்டில் செல்கின்றோம். ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். நாம் பாசமாக இருக்கின்றோம் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது
1.நம் கண் அவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வுகள் அவன் வெளிப்படுத்துவதைக் கண் இழுக்கிறது
3.இழுத்துச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு நமக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… அடிபட்டு அவன் உடலில் வேதனையாகின்றது வேதனை தாங்காது அவன் அழுகின்றான். அவன் வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய “வெப்ப காந்தங்கள்” அது தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

“வேதனைப்படுகின்றானே…” என்று அவனைப் பார்த்தவுடனே அதே உணர்வலைகளை நம் கண் இழுத்து உணர்த்துகிறது.

உதாரணமாக இப்பொழுது நான் (ஞானகுரு) பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால்
1.இந்த மைக் நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுத்துக் கவருகின்றது
2.அதே போன்று தான் அந்த அடிபட்ட பையன் வேதனையான உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.நம் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கிறது… கண் அதைப் பார்க்கின்றது.
4.அந்த அலை பட்டாலும் கண் கருவிழி அதைக் படமாக்குகின்றது.
5.கண்ணில் இருக்கக்கூடிய காந்தம் அதை இழுக்கின்றது… இழுத்தவுடன் நாம் சுவாசிக்கின்றோம்.

நல்ல குணம் கொண்டு ரோட்டில் செல்கின்றோம் அப்பொழுது பையன் கீழே விழுகின்றான் பார்த்ததும் வேதனையான நிகழ்ச்சிகள் தெரிகின்றது.

அந்தச் சப்தத்தைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து நாம் நுகரும்பொழுது நமக்குத் தெரிய வைக்கிறது.
1.சுவாசித்தவுடன் அந்த வேதனையான உணர்வு உயிரில் பட்டு
2.அது ஜீவன் பெறுகின்றது. அதற்குப் பெயர் தான் “ஓ…”

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடியிலே நெருப்பை வைத்தால் கொதித்து… “ததாபுதா…!” என்று சப்தம் இடுகின்றது. தண்ணீர் தான்… ஆனால் அது சப்தம் போடுகின்றது.

காரணம்
1.கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியில் படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் பட்டவுடன்
2.அதை இழுத்து இந்தச் சப்தத்தைப் போடுகின்றது… இது இயற்கை…!

இங்கே எப்படிச் சப்தமிடுகின்றதோ இது போன்றுதான் அந்த உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே
1.அந்தப் பையன் வேதனைப்பட்டது… காந்த அலைகளால் கவரப்பட்டது
2.இங்கே பிரணவமாகி நமக்குள் ஜீவன் பெறுகின்றது.
3.நமக்கும் உடலில் வேதனையான உணர்ச்சிகளைத் தூண்டி உணர்த்துகின்றது.

அவன் அடிபட்டு வேதனையை “ஆ…!” என்று அலறி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றான். ஆனால் இந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது

நாம் கண்ணிலே பார்த்தாலும் அதை இழுத்துக் கவர்ந்து உயிரிலே பட்டபின் ஜீவன் பெற்று நமக்கும் அந்த வேதனையைத் தூண்டி “அடிபட்டு விட்டனே…!” என்று அவனைக் காப்பாற்றும்படி செய்கின்றது.

பாச உணர்வால் நாம் காப்பாற்றுவதற்குச் செயல்பட்டாலும் அவன் பட்ட வேதனை உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இது ஓ…!

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெருப்பைக் கூட்டி நீரைப் உற்றி அதில் எந்தச் சரக்கைப் போட்டு வேக வைக்கின்றமோ அது கொதித்து அந்த வாசனைகள் நீருடன் கலக்கிறது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது. பொருளை வேக வைத்தால் கரைந்து மற்றதோடு இணைகின்றது. இது போன்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வுகளைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.அந்த உணர்வுகள் அது பிரிந்து விடுகிறது.
3.வேதனையின் சத்து உமிழ் நீராக மாறி ண்ஹம் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.

இது “ஓ…ம்” அதாவது
1.கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சக்தி உயிரிலே பட்ட பின் ஜீவனாகி
2.உடலுடன் சேர்த்து இரண்டறக் கலக்கப்படும் பொழுது ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய…
3.அவருடைய வேதனை நமக்குள் வந்த பின் அந்தச் சக்தி… சிவமாக… உடலாக… மாறி விடுகின்றது
4.சக்தியாக நம் உடலில் சேர்ந்து இயக்க ஆரம்பிக்கின்றது.

ஆக நாம் சுவாசித்ததை உயிர் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது… உடலுடன் ஐக்கியமாகி விடுகின்றது. ஓ… என்பது பிரணவம் ம்… உடலுக்குள் சேர்த்து பிரம்மமாகி விடுகின்றது.

வேதனையை உருவாக்கும் சக்தியாக உடலுக்குள் விளைந்து… அது உயிருடன் சேர்ந்து விட்டால் நம்மை அறியாமலே அடுத்து வேதனைப்படும்படி செய்யும்.
1.எதை எடுத்தாலும் வேதனை… எதை எடுத்தாலும் வேதனை… என்று
2.அந்த வேதனையான உணர்வுகள் உடல் முழுவதும் படர்ந்து அதையே பேச வைக்கும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை… நம்மை நாம் அறிவதற்குத் தான் ஓ…ம் என்று அதைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

நாம் சுவாசிப்பது (சக்தி) உயிரிலே பட்ட பின் அது ஜீவன் பெற்று நம் உடலாக சிவமாக எவ்வாறு மாறுகிறது…? சிவத்திற்குள் சக்தியாக மீண்டும் எப்படி இயக்குகிறது…? அதனதன் செயலாக இயக்குவதை ஓ…ம் ஓ…ம் என்று எல்லா இடங்களிலும் போட்டு உணர்த்தி உள்ளார்கள் ஞானிகள்.