ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2023

கஷ்டத்தையோ துன்பத்தையோ “எம்மிடம் சொல்லக் கூடாது…” என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

நீங்கள் குறையை நினைக்க வேண்டாம்
1.அது நிறைவு பெற வேண்டும் என்று எம்மிடம் கேளுங்கள்.
2.அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைக்கும் என்று நான் (ஞானகுரு) பதிவு செய்யும் பொழுது
3.அதன் வழி நீங்கள் நினைவுபடுத்தினால் உங்கள் எண்ணம் அவ்வப்பொழுது உங்களுக்கு அதை நிறைவேற்றிக் கொடுக்கும்.

பல முறை நான் இதைச் சொல்லிவிட்டேன்.

உதாரணமாக கஷ்டமாக ஒருவர் வந்து சொல்கின்றார்… அதைப் பார்த்தால் உங்களுக்குள் பதிவாகின்றது. உங்களுக்கும் அப்போது கஷ்டமாக இருக்கின்றது.

அது போல்…
1.ஆயிரம் பேர் என்னிடம் வந்து கஷ்டமாகச் சொன்னால் அத்தனையும் நான் கேட்க வேண்டி இருக்கின்றது.
2.கஷ்டம் நஷ்டம் என்று சொல்வதை நான் மாற்றிக் கொள்வதற்குக் குறைந்தது நான்கு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரை ஆகின்றது
3.அந்த அருள் சக்திகளை எடுத்துத் தான் நானும் துடைக்க வேண்டும்.

உயர்ந்த சக்திகளை நான் எடுத்தாலும் கூட என்ன ஆகிறது…?

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாலைக் குடித்தால் மயக்கம் வருகின்றது அல்லது மரணம் அடைய நேருகின்றது.

அந்த ஒரு துளி விஷத்தை மாற்ற ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்ற வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பாலுக்கே அது வீரிய சத்து கிடைக்கின்றது.

அதே மாதிரித் தான் உங்களுக்கு வாக்கினைக் கொடுக்கின்றேன். அது நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று சொன்னாலும் அது சமயம் நீங்கள் கஷ்டத்தைச் சொல்லிக் கேட்கக் கூடாது… கஷ்டத்தையே சொல்லக் கூடாது.

தயவு செய்து இதை எல்லாம் சிறுகச் சிறுக மாற்றிக் கொண்டே வாருங்கள்…!

எனக்கு நல்லது நடக்க வேண்டும்; குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்; குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும்; என்னைப் பார்ப்பவர்களுக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படித்தான் நினைக்க வேண்டும்.

அப்படி நினைக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.அந்த அலைகளைத் தியானத்தில் யாம் அனுப்பும் பொழுது
2.உங்களுக்கு அது கிடைக்கின்றது… நிச்சயம்…!

ஆனால் கஷ்டம் என்று சொல்லி விட்டீர்கள் என்றால் அது தான் எனக்குள் பதிவாகிறது. அந்தக் கஷ்டத்தை நான் துடைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதற்கப்புறம் நான் நல்ல வாக்கை அனுப்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்…?

ஆக…
1.சுத்தமாக அதைத் துடைத்து என்னைப் பாதுகாப்பதற்குத் தான் நான் தியானம் செய்ய வேண்டி இருக்கும்
2.அப்புறம்தான் உங்களுக்கு நல்ல வாக்கினைக் கொடுக்க வேண்டி வரும்.

ஏனென்றால் நீங்கள் கஷ்டத்தைச் சொல்கிறீர்கள்… அதை எல்லாம் கேட்டுக் கொண்டு உங்களுக்கு உடனடியாக நான் வாக்கு சொல்ல முடியாது கஷ்டத்தைத் தூய்மைப்படுத்திய பின்பு தான் வாக்குக் கொடுக்க முடியும்…!

நீங்கள் சொல்லும் கஷ்டமெல்லாம் இந்த உணர்வோடு கலந்து விட்டால் அந்த உணர்வோடு வாக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்…?
1.முதலில் என்னைச் சுத்தப்படுத்த வேண்டி இருக்கின்றது
2.அது தூய்மையான பின்பு தெளிந்த மனதுடன் தான் வாக்கு கொடுக்க முடியும்… அப்பொழுது அது வேலை செய்யும்.

ஏனென்றால் வாக்குக் கொடுக்கிறோம் என்றால் அது சாதாரணமானது அல்ல…! எத்தனையோ சிரமங்கள் பட்டு நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் அதைக் கொடுக்கின்றோம்… உபதேசத்தையும் கேட்க வைக்கின்றோம்

ஆனால் நீங்கள் நன்றாக வேண்டும் என்று தான் கேட்க வேண்டும் நல்லதைக் கேட்டுப் பழகுங்கள். குடும்பத்தில் அனைவருக்கும் ஞானம் கிடைக்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்று கேளுங்கள்.

ஆனால் பக்தி மார்க்கத்தில் தெய்வத்திடம் முறையிடுவது போன்று அல்லது கோவில் பூசாரியிடம் சொல்வது போன்று “எல்லாவற்றையும் சாமி (ஞானகுரு) பார்த்துக் கொள்வார்…! என்றால் அப்படி அல்ல…”

உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை நீங்கள் தான் எண்ணி எடுத்து அந்த நல்லதை வளர்த்துக் கொள்ள வேண்டும்…!

திட்டியவனை மீண்டும் எண்ணும் பொழுது அவன் மீது எப்படிக் கோபம் வருகின்றதோ… இடைஞ்சல் செய்தவனைப் பதிவு செய்து விட்டால் அவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எப்படி எரிச்சல் ஆகின்றதோ… அதே போல்
1.குருநாதர் கொடுத்த மிக மிகச் சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்
3.அதை வைத்துத் தீமைகளை நீங்கள் அடக்கிப் பழக வேண்டும்

அந்த ஞானிகளுடைய உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும். உங்கள் பேச்சால் மூச்சால் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய சக்தி பெற்றவர்களாக நீங்கள் மாற வேண்டும்.

மெய் ஞான உணர்வுகள் வளர வேண்டும்.. அருள் ஞானம் நீங்கள் பெற வேண்டும்… அந்த அறிவு உங்களுக்குள் வளர வேண்டும்.
1.இந்த வாழ்க்கை என்ற கடலில் இருந்து இருள்கள் மறைந்து
2.அந்த மெய்ப்பொருளுடன் ஒன்றி வாழும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும்.

எமது ஆசிகள்…!