தீமையைக் கண்டுணர்ந்தால் அடுத்த நிமிடமே ஆத்ம சக்தி செய்து கொண்டால் இதற்குப் பெயர் “நரசிம்ம அவதாரம்…” அந்த ஞானிகள் உணர்வுகளை இவ்வாறு சேர்த்துக் கொண்டே வந்தால் தான்
1.உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றாலும்
2.வேறு எந்த ஒரு உடலின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி உயிரான்மா ஒளியின் சரீரம் பெறும்… இது உறுதி.
இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு நஞ்சு கலக்காது நாம் செயல்படுவதே யாம் சொல்லும் ஆத்ம சுத்தியின் நோக்கம்.
வாழ்க்கையில் வேதனை தாக்கப்படும் பொழுதெல்லாம்… ஆத்ம சுத்தியைக் கூடக் கொஞ்ச நேரம் செய்து அதைச் சுத்தப்படுத்திக் கொண்டால் நஞ்சினைப் பிளந்து அருள் உணர்வினை வளர்த்துக் கொள்ள முடியும்.
அருள் உணர்வுகள் விளைந்து உடலில் இருந்து வெளியேறும் போது
1.அது ஒளியின் உணர்வுகளாகக் கல்கியின் அவதாரமாக உயிர் பெறுகின்றது
2.நம் உடலின் உணர்வுகள் அதனுடன் இணைகின்றது
3.என்றும் அழியாத சரீரமாக மகிழ்ச்சி கொண்ட உணர்வுகள் உயிருடன் ஒன்றிப் பெரு வீடு பெரு நிலை அடைய முடியும்.
இது தான் “சகஜ மார்க்கம்” என்று ஞானிகள் சொன்னார்கள்.
சகஜ மார்க்கம் என்றால் வாழ்க்கையில் எப்பொழுது துன்பங்கள் வருகின்றதோ… அந்த நேரத்தில் எல்லாம் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் நிலையாக “உன்னை நீ தகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான்…!”
அதற்குத் தான் “விநாயகர் தத்துவம்” என்று கொடுத்தார்கள். அந்த ஞானி காட்டிய உணர்வைத் தனக்குள் வளர்த்து ஒவ்வொரு நிமிடமும் சதுர்த்தி…! தீய வினைகளை தனக்குள் வளராது அதை நிறுத்தி மெய் ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்ப்பிக்கும் நிலையே “விநாயகர் சதுர்த்தி” என்பது.
இதையெல்லாம் நீங்கள் அவசியம் பழகிக் கொள்ள வேண்டும்.
மெய் ஞானிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வளர்ந்து… உலகில் படர்ந்துள்ள இருள் சூழ்ந்த நஞ்சான உணர்வுகளை நீக்கிட உங்கள் மூச்சலைகள் பயன்பட வேண்டும்.
ஆகவே அந்த ஆற்றல்கள் உங்களில் விளைய வேண்டும்… உங்களுக்கு அது கிடைக்க வேண்டும்… என்று சதா நான் தியானிக்கின்றேன். நீங்களும் இதே போன்று
1.மகரிஷிகளின் அருள் ஒளியை நான் பெறுவேன்
2.என்னை அறியாத வந்த இருளை நீக்குவேன்
3.மெய்ப் பொருளைக் காணுவேன்… மெய் வழியில் செல்வேன்
4.மெய் உணர்வுடன் என் வாழ்க்கையை வழி நடத்துவேன்
5.வாழ்க்கையில் வரும் இருள்கள் நீங்கி நோயற்ற வாழ்க்கையாகவும் மெய் உணர்வினைப் பெறும் பாக்கியமாகவும் அடைவேன்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறுவேன் என்று இதனைச் சபதம் ஏற்று
7.இதன் அடிப்படையில் உணர்வுகளைச் செயல்படுத்தி நினைவினை இயக்கிப் பாருங்கள்..!
ஒரு வீடு கட்ட நாம் பிளான் செய்து அதை நினைவில் கொண்டு அதே வேலையாக இருந்து அந்த வீட்டை எப்படிக் கட்டி முடிக்கின்றோமோ… புதிதாக வேலைக்குச் சேர வேண்டும் என்றால் பல இடங்களுக்குச் சென்று பல பேரை நாம் சந்தித்து அந்த வேலையை வாங்கி நாம் அங்கே சென்று எப்படி அமர்கின்றமோ… அதே போன்றுதான்
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறுவேன்
2ஒவ்வொரு நொடியிலும் மகரிஷியின் அருள் சக்திகளைப் பெற்று அறியாது வரும் இருளை நீக்குவேன்
3.மெய் உணர்வுகளை வளர்த்து ஒளியின் சரீரமாக இந்தச் சரீரத்தை ஆக்குவேன் என்ற உறுதி கொள்ளுங்கள்
அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு). குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.