ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 18, 2023

“நாம் நினைத்தது நடக்க வேண்டும்…” என்ற ஆசையில் தான் விரதம் இருக்கின்றோம்…!

48 நாள் விரதம் இருக்கின்றேன்… என்று வைத்துக் கொள்வோம். வயிறு சுண்டச் சுண்டப் பசியோடு இருக்கும் நேரத்தில் யாராவது கூடக் கொஞ்சம் பேசினால் “இந்த நேரத்தில் வந்து கழுத்தறுக்கின்றான் பார்…” என்று சங்கடம் வரும்.

வீட்டு வேலைக்கு என்று வந்தவர்கள் யாராவது… சிறிது பேசினாலும் அவர்கள் பேசப் பேச எரிச்சல் கூடிக் கொண்டே வரும். அப்போது எதை விரதம் இருக்கின்றோம்…?
1.கெட்டதை நினைக்கக் கூடாது என்பதற்குத் தான் ஞானிகள் விரதத்தைக் காட்டினார்கள்,
2.ஆனால் அப்படிச் செய்கின்றோமா…? இல்லை…!

என் சொல் சுவை மிக்கதாக இருக்க வேண்டும். என் பேச்செல்லாம் இனிமையாக வர வேண்டும்… எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புகளாக வர வேண்டும் இன்றைய தினம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

பிள்ளைகளோ மற்றவர்கள் கோபித்தாலும் எனக்குள் நல்ல பண்புகள் வர வேண்டும்… தெளிவான சொல்களை நான் சொல்ல வேண்டும்… என்று கேட்டதை நீக்கிவிட்டு நல்லது வரவேண்டும் என்று இப்படித்தான் விரதம் இருக்கச் சொன்னார்கள்.

அறுசுவையாகப் படைத்துவிட்டு இங்கே உணவை உட்கொள்ளாதபடி பட்டினியாக இருந்து நாம் என்ன செய்கின்றோம்…?

செய்து வைத்த பதார்த்தத்தைப் பையன் தொட்டு விட்டால் “நாசமாகப் போகிறவனே… சாமிக்கு வைத்த்தை ஏண்டா தொட்டாய்…?” என்று நாசமாகப் போகும் உணர்வு தான் அந்த நேரத்தில் வருகின்றது.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க நடக்க அன்று பூராமே ஒரே சோர்வாகத் தான் இருக்கும். விரதம் முடிந்ததும் சாப்பிடவும் முடியாது… நெஞ்சைக் கரிக்கும்.

உடல் சோர்வடையும் பொழுது நினைவுகள் எல்லாம் எப்படி வரும்…? சமைத்து முடித்து விட்டுச் சும்மா உட்காரலாம் என்று உட்கார்ந்தால் போதும்…!
1.அந்தப் பாவிப் பயல் அப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்கின்றான்
2.நாளை என்ன செய்வானோ…? என்ன ஆகின்றானோ…? என்று இது எல்லாவற்றையும் கவர்ந்து இழுத்துக் கொண்டு வரும்.

அப்பொழுது நம்முடைய விரதம் என்னாகின்றது…! எதை நாம் விரதமாக இருக்கின்றோம்…?
1.நல்லதைக் கெடுப்பதற்குத் தான் அன்று விரதம் இருக்கின்றோம்.
2.நல்லதை வளர்ப்பதற்கு நாம் விரதம் இருக்கின்றோமா…?

ஞானிகள் சொன்னதை நாம் தலைகீழாக மாற்றி வைத்திருக்கின்றோம். நல்லதை நாம் எண்ணி விரதம் இருக்கவில்லை…!

“சஷ்டி விரதம்” என்று சொல்கின்றார்கள். சஷ்டி என்றால் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா - ஏழாவது அறிவு…! நமது ஆறாவது அறிவு நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

அது போல் அந்த ஏழு நாட்களிலும் கெட்டதையே நினைக்காதபடி எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை நாம் சமைத்தோம் என்றால் இது சஷ்டி விரதம்.

வியாபாரத்தில் என்னிடம் பொருள் வாங்கிச் செல்பவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அவர்களும் தொழில் வளம் பெற வேண்டும்… என் குழந்தைகள் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும்… ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… என்று
1.எங்கே பேசினாலும்… யாரிடம் எதைச் சொன்னாலும் இந்த உயர்ந்த மூச்சை எடுத்து அங்கே பரப்பி.
2.அதை நாம் கவர்ந்தால் அது நமக்குச் சொந்தமாகின்றது.

ஆனால் விரதம் அன்று பச்சைத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று மிளகைப் போட்டுத் தண்ணீரைக் குடித்துச் சோர்வடைந்திருப்பார்கள். உடலுக்குள் எந்த ஆக்கிரமிப்பு கொண்டு அது வேதனை ஊட்டியதோ அந்த உணர்வு அறியாமலே “விசுக்…விசுக்…” என்று இழுக்கும்.

மாம்பழத்தை ருசியாகச் சாப்பிட்டுப் பழகியிருப்போம். சந்தர்ப்பம் நாம் ஒரு இடத்திற்குச் செல்கின்றோம். மாம்பழத்தைப் பார்க்கின்றோம்… வாங்க முடியவில்லை என்றாலும் அதை எண்ணினாலே உமிழ் நீர் ஊறுகின்றது. நினைத்த உடனேயே உமிழ் நீர் ஊறும்.

அதே சமயத்தில் நமக்கு வேண்டிய ஒரு பொருளைத் தேடி ரோட்டிலே நடந்து செல்கிறோம். எங்கும் கிடைக்கவில்லை என்றால் எரிச்சல் ஆகின்றது. அந்த நினைவுகள் நமக்குள் உமிழ் நீர் ஊறாதபடி வறட்சியாகும்… நாக்கிலே…!
1.இது எல்லாம் நாம் சுவாசிப்பதிலே இருக்கின்றது
2.நாம் எதை நினைக்கின்றோமோ உடனே அது இழுத்துச் சுவாசத்திற்கு வரும்
3.சுற்றிப் போட்டவுடன் ஆட்டோமேட்டிக்காக… கம்ப்யூட்டர் இயக்குவது போன்று வேலை செய்யும்.

இன்று சூப்பர் கம்ப்யூட்டர் என்று வைத்திருக்கின்றார்கள்… அதை வைத்து இயந்திரத்தை இயக்குகின்றனர். அதிலே சிறிதளவு குறை ஏற்பட்டால் அது உடனே சரி செய்கின்றது அல்லது நிறுத்தி விடுகின்றது. மிகப் பெரிய இயந்திரத்தையும் அதை வைத்து இயக்குகின்றார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனைப் போன்று இயங்கக்கூடிய இயந்திர மனிதனையும் உருவாக்கி விட்டார்கள்.

சிலிகன் என்ற நிலைகளில் பேசக்கூடிய பேச்சை நாடாக்களில் பதிவு செய்து அங்கே இயக்கப்படும் பொழுது அந்த இயந்திர மனிதன் அதை சீராக செயல்படுத்துகின்றது.

1.இனென்ன வேலை செய்ய வேண்டும்
2.இதை இப்படி நிறுத்த வேண்டும்
3.இதை இப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்
4.இந்த வேலைகளை இப்படிச் செய் என்றால்
5.அந்தந்த ஒலிக்குத் தகுந்த மாதிரி அழுத்தமாகி ஒலி அதிர்வுகளைக் கொடுத்து இயக்குகின்றார்கள்
6.அந்த பொம்மை (ROBO) செய்து வருகிறது.
7.பதிவின் மூலம் இடப்படும் ஆணைகளுக்கொப்ப அந்த உணர்வலைகள் கொண்டு மெக்கானிக்கலாக இயங்குகிறது.

அது போன்றுதான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் இயங்குகிறோம் என்றால் இயற்கையில் விளைவித்த நிலைகள் காற்றிலே எத்தனையோ அலைகள் உண்டு. நினைத்தால் போதும்… இயக்குகிறது… இயங்குகிறது.

ஏனென்றால் கோடிக்கணக்கான குணங்களை இழுத்து ஒவ்வொரு சரீரத்திலும் உணவுடன் எடுத்து வளர்ந்து அது எல்லாம் உணர்வின் இயக்கச் சக்தியாக இருக்கின்றோம்…!

இருந்தாலும் கெட்டதையே திரும்பத் திரும்ப நினைத்தோம் என்றால் கெட்டதைத் தான் செய்து தீர்வோம். ஏனென்றால் நமக்குள் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

கம்ப்யூட்டரில் நாடாக்களில் பதிவு செய்தது இயக்குவது போன்று இயக்கி விடுகின்றது. அதாவது கம்ப்யூட்டர் ஆணையிட்டு இயக்குவது போன்று தான்
1.எதை நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோமோ அந்த வேலையைத்தான் செய்வோம்.
2.தவிர நாம் பார்த்து அதை எல்லாம் கட்டுப்படுத்தி விடுவேன்… நான் நிறுத்தி விடுவேன் என்று செயல்பட்டால் அது நடக்காது.

இயந்திர மனிதனைக் கண்டுபிடித்தவன் ஆணையிடும் உணர்வுகளில் சிறிது மாற்றமானால் போதும். அது அவனையே அடித்துக் கொன்றுவிடும். விஞ்ஞானிக்கும் இது தெரியும். மூச்சலைகள் தவறினால் அது இயக்கமாகி அவனை அடித்துக் கொன்று விடுகின்றது.

அது போன்று தான்… நாமும் நல்ல மனதோடு இருக்கின்றோம் பிடிக்காத சம்பவமோ பிடிக்காதவர்கள் வந்தாலோ அல்லது எதிர்பார்க்காதபடி ஏதாவது நடந்தால் உடனே என்ன செய்கிறோம்…?

1.மனைவி நாம் சொன்னபடி கேட்டிருக்காது..
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பாகி அந்தக் கோபத்திலே… செல்லமாக வளர்த்த பிள்ளையாக இருந்தாலும் அடித்து நொறுக்கி விடுவோம்
2.ஒரு நல்ல உயர்ந்த பொருளாக வாங்கி வைத்திருந்தாலும் கூட கோபத்திலே நொறுக்கி விடுகின்றோம்.

இயந்திர மனிதனின் (ROBO) ஆணைகள் சிறிது மாறி விட்டால் அது எப்படின் அடித்து நொறுக்குகிறதோ… அந்த இயந்திர மனிதன் இயங்குவது போன்று நாமும் இயந்திரமாகத்தான் இருக்கின்றோம். மனிதனுடைய நிலைகள் (நல்ல சிந்தனைகள்) இருப்பதில்லை.

விஞ்ஞானி இதையெல்லாம் இன்று காட்டுகின்றான்… நிரூபிக்கின்றான். ஆனால் அன்றைக்கு மெய் ஞானி இதைத் தெளிவாக உணர்த்திச் சென்றான்.

வாழ்க்கையில் இருளான நிலைகள் வந்தால் அதை மாற்றிக் கொள்வதற்கு கோயிலைக் கட்டி வைத்தான்…!
1.நீ எடுத்துக் கொண்ட குணம் உனக்குள் இந்த வேலையைச் செய்கிறது.
2.ஆகவே நீ உயர்ந்த குணங்களை எடுத்துக் கொள்… இந்தத் தெய்வ குணங்களை வளர்த்துக் கொள்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்
4.அது உன்னை நல்வழியில் நடத்தும்… தீமைகளை அகற்றும்…! என்று தெளிவாகக் காட்டினான்..

ஆனால் நாம் ஆலயத்திற்கு சென்று அவ்வாறு எண்ணுகின்றோமா…?

குறைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் தான் அங்கே சொல்லி வேதனைகளை மட்டும் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஞானிகள் உருவாக்கிய ஆலயங்கள் எல்லாமே நம்மைப் புனிதப்படுத்தக்கூடிய இடங்கள். அதை நாம் புரிந்து நடக்க வேண்டும்.

குருநாதர் எனக்கு எப்படி இந்த உண்மைகளை உணர்த்தி… என்னைத் தெளிவுபடுத்தி எனக்கு இந்த உயர்ந்த உணர்வுகளை ஊட்டினாரோ… அதே வழியில் தான் உங்களையும் தெளிவுபடுத்தி உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்கின்றோம் (ஞானகுரு).