ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2023

அடுத்தவர்களைப் பார்த்து இரக்கப்பட வேண்டுமா… கூடாதா…? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

மனிதனாக வர வேண்டும் என்றால் 1008 குணங்கள் வேண்டும். அந்த 1008 நல்ல குணங்கள் தான் நம்முடைய உடலை உருவாக்கியது.

அத்தகைய நல்ல மனதுடன் ரோட்டிலே செல்லும் பொழுது ஒரு பையன் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். அதை உற்று நோக்கி அவன் வேதனைப்படுவதைக் காணுகின்றோம்.

அவன் படும் வேதனையை நுகர்ந்து எனக்குள் சேர்த்த உடன் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி என் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.முதலில் கீழே விழுந்து விட்டானே என்று இரக்க உணர்வு கொண்டு காப்பாற்றி விடுகின்றேன்
2.ஆனால் ஆகாரத்துடன் கலந்த அந்த வேதனை உணர்வுகள் என் உடலில் சத்தாக மாறி விடுகின்றது.

இன்று நான் அவனைக் காப்பாற்றி விட்டேன். அடுத்த நாள் அந்தச் சாப்பாட்டுடன் கலந்த வேதனை உணர்வுகள் ஒரு விதமான அலசலாக மாறுகின்றது.

அதே சமயத்தில் பலவீனமான மனம் கொண்டவர்கள் அவன் அடிபட்டு மிகவும் காயமாகி விட்டான் என்பதைப் பார்த்தவுடனே பதட்டமும் வேதனையும் வந்து விடுகிறது.

அந்த இரண்டும் சேர்ந்து உயிருக்குள் பட்டு அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி சிறு குடலில் கலந்த உடனே
1.அடிபட்டவனைப் பார்த்தவுடன் உடல் பதறுகின்ற மாதிரி…
2.அந்தப் பதட்டத்தில் உடலை எப்படிக் குலுக்கியதோ
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தையும் இவ்வாறு குடல் பகுதியில் குலுக்கி அலசி விட்டு விடுகிறது.
4.ஆகாரத்தை ஜீரணிக்காதபடி பட..பட… என்று அந்த விஷம் (வேதனை) வயிற்றாளையாகப் போக ஆரம்பிக்கும்.
5.நல்ல சத்தாகச் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மாதிரி ஆகிவிடும்.

உழைத்து நன்றாகச் சாப்பிட வேண்டும்… டாக்டர் சிபாரிசு செய்தார் என்று உடல் ஆரோக்கியத்திற்காக நாம் சாப்பிட்டாலும் இங்கே பயத்தின் துடிப்பு வேகமாக இருக்கப்படும் பொழுது இப்படி ஆகின்றது.

பயத்தால் துடிப்பும் வேதனையும் இரண்டையும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் உடல் நடுக்கம். அதிலே வடித்துக் கொண்ட இந்தச் சத்து ஆகாரத்திற்குள் இணைந்த பின்
1.சிறு குடல் மூன்றரை கஜம் இருக்கும்… அது கோர்த்து… இழுத்து… மூடி.. அப்படியே பிழியும்.
2.பாம்பு தவளையை விழுங்குவது போன்று அது சுருக்கி இறுக்கி அந்தச் சத்தை எப்படி ஜீரணிக்கின்றதோ
3.அதே போல் சிறுகுடல் இழுத்து நெருக்கி சத்தைப் பிழிய முற்படும் போது அதை ஜீரணிக்க விடாதபடி (முடியாதபடி) விட்டு விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

பாச உணர்வு கொண்டு அங்கே கீழே விழுந்தவனைப் பார்க்கின்றோம். பாச உணர்வுகள் கொண்டு வரும் போது பயம் எனக்குள் துடிப்பாகி அது எனக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது. பயமாகி வயிற்றாளை போகின்றது.

நான் சத்தாகச் சாப்பிட்டேன் என்றால் என்ன சொல்வது…?

பயமான சக்திகள் அதிகமாக கூடிவிட்டால் “டப்…” என்று ஒரு சாமான் கீழே விழுந்தால் நாம் உடனே துள்ளி விடுவோம். ஏதாவது படித்துக் கொண்டிருக்கும் போது “சறுக்…” என்ற சத்தம் கேட்டால் போதும் கவனம் அங்கே போகும்… படிப்பு வராது.

ஒரு நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று சொன்னால் வேதனையும் பயமும் கலந்த உணர்வுகள் தூண்டியவுடனே
1.பொருளை எடுக்கக்கூடிய கவனம்… ஞாபக சக்தி எல்லாமே இழந்து விடும்…
2.பயத்தின் துடிப்பிலேயே போய்க் கொண்டிருக்கும்… இரக்கம் உள்ளவர்களுக்கு இவ்வாறு ஆகின்றது.

இதை நாம் எவ்வாறு சுத்தப்படுத்துவது…?

ஆனால் ஒரு முரடன் கீழே விழுந்து அடிபட்டவனைப் பார்த்தால் என்ன செய்வான்…?
பாசமும் இரக்கமும் கொண்டு செயல்படும் பொழுது அடிபட்டதைப் பார்த்து வயிற்றாளை போக வைக்கிறது. “ஓ… ம்…” அந்த உணர்வின் சக்தி என் உடலுக்குள் சென்று வினையாகச் செயல்படும் சக்தியாக வருகின்றது.

ஆனால் போக்கிரி அடிபட்டதைக் கவனித்தவுடன்
1.”அவனுக்கெல்லாம் இப்படித்தான் வேண்டும்…!” என்று கொடூரமான நிலைகளில் பேசி அதைப் பார்த்து ரசித்துக் கொண்டு செல்வான்.
2.அவனுடைய உணர்வு வேதனையை நுகரும் தன்மையே இல்லை
3.அசுரத்தனமான நிலைகள் கொண்டு பிறர் இம்சைப்படுவதைக் கண்டு ரசிப்பதும் பிறரை இம்சிப்பதும் தான் அவனுக்கு அது வழக்கம்.
4.அந்த உணர்வை இவனுக்குள் எடுத்துக் கொள்வதில்லை… அதை ரசிக்கின்றான்.

உதாரணமாக ஒரு கொள்ளை அடிக்கிறவன் வீட்டிற்குள் வந்தால் பணத்தை எடுத்துச் செல்கின்றான். ஆனால் என்னை நீ காட்டிக் கொடுத்து விடுவாய் என்று சொல்லி வீட்டில் உள்ளவரையும் அடித்துக் கொல்லத்தான் பார்க்கின்றான்.

பணத்தையும் எடுத்துச் செல்கிறான்… ஆளைக் கொல்லவும் செய்கிறான். அவனுக்கு அந்த இரக்கம் இருக்கின்றதா… வருகின்றதா…? இல்லை. ஆகையினால் அந்த உணர்வின் தன்மையை அவன் நுகராதபடி ரசித்துக் கொண்டே செல்கிறான்.

இதே பழக்கத்திற்கு இவன் சென்றான் என்றால் அங்கிருந்து ஒரு பஸ் வேகமாக வருகிறது என்றால் “என் மீது ஏற்றி விடுவானா…? பார்ப்போம்…!” என்று முரட்டுத்தனமாகத் தான் நிற்பான்.

சில பேரரை நீங்கள் பார்க்கலாம் புத்தி கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தால் அந்தக் குணம் உள்ளவர்கள் நடுரோட்டில் போய்க் கொண்டே இருப்பார்கள். எதையும் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

காரோ பஸ் வந்தாலும் கூட சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டை விட்டு இறங்க மாட்டார்கள். அப்படி இறங்காதவர்கள் எப்படிப்பட்ட புத்தியில் இருக்கின்றார்கள் என்றால்
1.இரக்கமும் நல்ல புத்தியும் இருக்காது.
2.இறங்க மாட்டார்கள்… நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள்
3.அவர் வீட்டிலும் கொஞ்சம் கூட இரக்கம் இருக்காது… எதை எடுத்தாலும் எதிர்த்துச் செயல்பட்டு கொண்டிருப்பார்கள்.

ஆனால் இன்று ஒரு முறை தப்பித்தாலும் “என்னைக் கண்டு எல்லோரும் பயந்துவிட்டார்கள்… பார்…!” என்று அவன் நினைப்பான்.

ஆனால் அடுத்தாற்போல் இன்னொருவன் இதே போன்று வேகமாக கண்ட்ரோல் இல்லாத வரும் பொழுது அந்த உணர்வு கொண்டே இந்தப் போக்கிரி அடிபட்டுச் சாவான்.

1.பாசத்தாலும் விஷம் வந்து வேதனையாகி உடல் நலம் கெடுகின்றது
2.முரட்டுத்தனமாகச் சென்றாலும் இப்படி ஆகிவிடுகிறது.

காரணம்… நான் எதைக் கொடுக்கின்றேனோ உயிர் அதை இயக்கி விடுகின்றது… அதை அப்படியே சிருஷ்டித்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

குருநாதர் காட்டி வழியில் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அருள் உணர்வினைப் பெற வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்.
1.அதை வளர்த்துக் கொண்டால் உயிர் அதுவாகவே நம்மை ஆக்கிவிடும்
2.அருள் உணர்வுகளை உயிர் சிருஷ்டித்து நம்மை அருள் ஞானிகளாக உயிர் நம்மை உருவாக்கி விடும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது…!