நம் உடல் பல கோடி உணர்வுகள் சேர்த்துக் கோடிக்கரையாக வந்தது. மனித உடலின் தன்மை உருவானது - இது சிவ தனுசு.
ஆனால் வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அந்தத் தீமைகள் உட்புகாது துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைச் சேர்த்துச் சேர்த்து அதைத் தணித்தல் வேண்டும்.
1.இப்படித் தணித்துக் கொண்டு வந்தோம் என்றால் அது வலுப்பெறுகின்றது...
2.விஷ்ணு தனுசுவாக மாறுகின்றது.
ஒவ்வொன்றிலும் அழுக்கை நீக்கும் நிலைகளாக... நம் வாழ்க்கையில் எத்தனை விதமான உணர்வை எடுத்துக் கொண்டுள்ளமோ அது அனைத்திலும் அருள் உணர்வுகள் சேர்க்கப்பட்டுத் தீமைகளை அகற்றிடும் தன்மையாக வரும் போது தனுசுக்கோடி..!
ஆகவே உயிர் என்ற நிலைகள் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் கோடி உணர்வு உணர்வுகளையும் உயிருடன் ஒன்றிடும் போது ஒன்று...! அது தான் தனுசுக்கோடி என்று கூறுகின்றனர்.
அதாவது... நமது வாழ்க்கையில் வரும் துன்பங்கள்... சங்கடங்கள்... சலிப்புகள்... வெறுப்புகள்... பாசத்தால் கவர்ந்த பல விஷத் தன்மையான உணர்வுகள்... இவைகளை நமக்குள் விடாதபடி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தணித்திடும் உணர்வின் தன்மையாக வரும் பொழுது “கோடி ஆகின்றது...”
2.பகைமை இல்லாத நிலையில் “ஒன்றாகின்றது...”
அதனால்தான் இராமேஸ்வரத்தில் இராமன் தனது நிலைகள் கொண்டு மணலைக் (தன் மனதை) குவித்துப் பூஜித்தான் தனுசுக்கோடி... இராமலிங்கம்...! என்று காட்டியுள்ளார்கள்.
ஆகையினால் இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன் நாம் எதை எல்லாம் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்...?
ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை ஒளியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வரப்படும் போது அதன் வழி அங்கே அழைத்துச் செல்கிறது. அடுத்து நாம் “பிறவி இல்லை” என்ற நிலையை அடைகின்றோம்.
எந்த நிலை ஆனாலும் இதன் உணர்வின் வழிப்படி நாம் செயல்படுவதே மனிதனின் கடைசி நிலை. அதை அடையச் செய்வதற்காகத் தான் அருள் வாக்காக இப்பொழுது கொடுத்துப் பதிவாக்கினோம். துருவ நட்சத்திரத்துடன் இணையும்படி செய்கின்றோம்.
குருநாதர் எனக்கு எப்படி அந்த அரும்பெரும் சக்தியைக் கொடுத்தாரோ அதே போன்று உங்களை அந்த்த் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக ஆக்குகின்றோம். பிறவி இல்லா நிலை அடைய உங்களுக்குள் அந்த அருள் சக்தியைப் பதிக்கின்றோம்.
குருநாதர் எனக்கு எப்படி உபதேசித்தாரோ உங்களுக்குள் அந்த உணர்வின் ஞானத்தைப் பதித்து இந்த காற்றுக்குள் பரவி வரும் அருள் ஞானிகளின் உணர்வை நுகரச் சொல்கிறோம்.
உங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றி மெய் ஞானத்தின் உணர்வைப் பெற... அருள் உணர்வுகளைப் பெற... உங்களுக்குப் பிரார்த்திக்கிறேன்.
1.எனது புருவ மத்தியை எண்ணி ஈஸ்வரா... என்று எண்ணி இருங்கள்
2.உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள்
3.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது உங்கள் உயிரை நினைத்து கண்களில் (கண்களைத் திறந்து) என் புருவ மத்தியை எண்ணுங்கள்
4.குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்நேரம் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அணைப்பிலே சென்றேன்
5.அதன் உணர்வை எனக்குள் கவர்கின்றேன்
6.எனது புருவ மத்தியில் நீங்கள் எண்ணும் பொழுது “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செல்கின்றோம்...”
கடலிலே நீந்தும் பொழுது நீந்திக் கரை சேர்ந்த ஒருவரைப் பின்பற்றிச் சென்றால் அதன் வழி நாமும் கரை சேரலாம். இதைப் போன்று
1.பிறவிக் கடலில் நீந்திச் சென்று ஒளியான நமது குருவின் உணர்வு கொண்டு
2.அவர் காட்டிய அருள் வழியில் நீங்கள் என்னை உற்றுப் பார்க்கும் பொழுது அதை நீங்கள் காணலாம்.
அகஸ்தியன் துருவனாகி... துருவ நட்சத்திரமாக ஆன அதனின்று வெளி வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.
குருநாதர் காட்டி அருள் வழியில்...
1.என்னுடைய நினைவுகள் கண்ணின் நினைவு உயிரின் நினைவும் நட்சத்திரத்தின் பால் செல்கின்றது
2.நீங்களும் இப்பொழுது என் உயிரைப் புருவ மத்தியில் எண்ணிப் பாருங்கள்
3.பார்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
இப்பொழுது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியைப் பெரும் தகுதி பெறுகின்றீர்கள்...
1.அருள் உணர்வுகளைக் கூட்டியது
2.அருள் உணர்ச்சிகளை ஈர்த்தது...!
ஆகவே அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்தும் நேரத்தில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைக் கவர்ந்து உங்களுக்குள் உருவாக்குங்கள்.