மூதாதையரின் உணர்வுகளை அதிகமாகப் பதிவாக்கி வைத்திருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் அதிகமானால்... உடலை விட்டு அவர்கள் சென்ற பின் இந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்.
எந்தெந்த நோய்களை அவர் பெற்றார்களோ அந்த நோய்களும் நமக்குள் உருவாக்கப்பட்டு நமக்குள் வேதனை வெறுப்பு என்ற நிலையே வரும்.
இப்படி... இதற்கு முன் நாம் செய்யத் தவறிய உணர்வுகள் மூதாதையரின் உயிரான்மா அந்த உயிரணுக்கள் அனைத்தும் நம் உடலில் உண்டு.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் வலுவாக எடுத்துக் கொண்ட பின்
2.அவருடைய (முன்னோர்) உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதன் துணை கொண்டு
3.அந்தச் சூட்சம சரீரங்களைச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையச் செய்ய முடியும்.
இந்த உடலில் எத்தனை கடுமையாக நோயினால் வேதனைப்பட்டனரோ அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் செலுத்தும் பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்தில் ஊடுருவி அங்கே நிலை கொள்ளும்.
பின் இந்த உடல் பெற்ற நஞ்சுகள் அனைத்தையும் அங்கே கரைத்து விட்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மூதாதையரின் உயிரான்மாக்கள் வாழத் தொடங்கும்.
இப்படி அவர்கள் வளர்ந்தால் அடுத்து அவர்களுக்குப் பிறவி இல்லை. மனிதன் ஒருவன் தான் இதை செய்ய முடியும்.
நம் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெற்ற நிலைகள் கரைந்து விட்டால் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
1.துருவ நட்சத்திரம் விஷத்தை முறிக்கும் உணர்வை ஒளியாகக் கொடுக்கும்
2.அந்த உணர்வலைகளை உணவாக எடுத்து வாழும் சக்தி பெறுகின்றார்கள்
சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் எக்காலத்திலும் அழியாது.
1.அகண்ட அண்டத்தில் உள்ள எத்தனையோ சூரியக் குடும்பங்களும் அழியலாம்
2.ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் அழிவதே இல்லை.
நமது பிரபஞ்சத்தில் இருப்பது போல ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் மனிதர்கள் வாழ்ந்து முழுமை அடைந்த பின் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அமைந்துள்ளார்கள்.
1.சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும்
2.அந்த ஒளிச் சரீரம் பெற்ற உயிராத்மாக்கள் என்றுமே அழியாது.
3.உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின்
4.மனிதன் ஒருவன் தான் இந்த அழியாத நிலை பெற முடியும்.
தீமைகளை நீக்கிப் பேரின்பம் என்ற நிலைகளில் என்றைக்குமே பேரானந்த நிலையில் வாழ முடியும். ஆகவே உணர்வை ஒளியாக மாற்றுவது தான் மனிதனின் கடைசி நிலை.
அதைத்தான் இராமேஸ்வரம் என்றும்... பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வு கோடிக்கரை என்றும்... மனிதனுக்குப் பின் தீமைகளை நீக்கியது தனுஷ்கோடி என்றும் காட்டினார்கள்.
நமது வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி அவ்வப்பொழுது அதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெறச் செய்து இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே மனிதனின் கடைசி நிலை.
இதையெல்லாம் மக்களுக்கு உணர்த்துவதற்குத் தான் காவியத் தொகுப்புகளாக அமைத்து அந்த உண்மைகளை நாம் பெறும்படி செய்தனர் ஞானிகள்.