ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2022

நாம் இன்று எந்த உலகில் வாழ்கின்றோம்

நாம் இன்று எந்த உலகில் வாழ்கின்றோம்…!

1.மெய் உலகில் வாழ்கின்றோமா...?
2.பொய் (மாய) உலகில் வாழ்கின்றோமா...? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

மெய் என்றால் “உயிர்…” அந்த உலகை அடைய வேண்டும். நம் உடலெல்லாம் பொய் உலகம். அதைப் பொய் என்றுதான் சொல்ல முடியும்.

ஏனென்றால் இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். அடுத்தாற்போல் பார்த்தால் சுருங்கிப் போய்விடுகின்றது. சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கின்றது...? வேறு ஒரு உடலை உருவாக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே நாம் பொய் உலகில் நாம் வாழ்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் அடிக்கடி சொல்வார். “ஏண்டா... பொய் உலகத்திற்குப் போகின்றாய்...? “மெய் உலகிற்குப் போடா...” என்பார்.

மெய் உலகம் என்றால் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?
1.உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணரச் செய்கின்றான்... உணரும் வழியில் வாழச் செய்கின்றான்.
2.ஆனால் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்டவன் நீ... எந்த உலகிற்குச் செல்கின்றாய்…?” என்று
3.சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் உணர்த்திக் கேட்பார்.

சிக்கலான நிலைகள் வரும்போது நான் என்ன செய்வேன்…?

“என்ன வாழ்க்கை...? போ...! மனைவியை நோயிலிருந்து மீட்டிக் கொடுத்தார் குருநாதர். ஆனால் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் இப்படியெல்லாம் கடுமையான தொல்லைகள் கொடுக்கிறார் என்று சொல்லி “ரொம்பவும் கஷ்டம் வரும் பொழுதெல்லாம்” என் நினைவுகள் இப்படி வரும்.

எங்கேயாவது உடலை விட்டுப் போய்விடலாம்... “தற்கொலை செய்து கொள்ளலாம்...” என்று சொல்லி இரண்டு மூன்று தடவை முயற்சி செய்தேன்.

அப்பொழுதுதான் குருநாதர் சிரிக்கின்றார்.

இந்த உலகை... என்ன என்று அறிந்தாய். உன் உயிரை... யார் என்றும் அறிந்தாய்… இந்த உடலின் நிலையையும்... அறிந்தாய். “மீண்டும் ஏண்டா பொய் உலகிற்குப் போகின்றாய்…?”

ஆக மொத்தம் இந்த வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நீ எண்ணுகின்றாய். நீ தற்கொலை செய்து கொண்டால் இந்த உணர்வுகள் கேட்டவன் உணர்வுக்குள் தான் செல்லும்.

அவன் உடலுக்குள் பேயாகப் போய் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய். இந்த உணர்வின் தன்மை வந்தால் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவாய்…?

பிறிதொன்றைக் கொன்று தின்னும் இந்த உணர்வின் தன்மை தான் உனக்குள் வரும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ “பொய் உலகிற்கல்லவா போகின்றாய்…”

உயிரென்ற நிலை வரும் பொழுது பரிணாம வளர்ச்சியில் ஆறாவது அறிவால் தெரிந்து கொள்ளும் நிலைகளில் கார்த்திகேயா என்று “தெரிந்து கொண்டேன்...” என்ற நிலைகளில் என்று வந்தாய்.

இன்று மறுபடியும் ஏன் பொய் உலகிற்குச் செல்கிறாய்…? என்று அந்த இடத்தில் வைத்து விளக்கங்களைக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் பல தொல்லைகளைக் கொடுப்பார்.

நம் சகஜ வாழ்க்கையில் வியாபாரமோ மற்ற தொழிலோ எல்லாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் போது சந்தோஷமாக இருப்போம்.

அப்படிச் சந்தோஷமாக இருக்கும் பொழுது... “அதிலே சிறிது குறை வந்துவிட்டால்...” போதும். “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் நம் மனது இருண்டுவிடும்.

இதைப் போன்று இந்த உடலைக் காக்க எத்தனையோ வகைகளில் இன்று சிரமப்படுகின்றோம். அதைச் செய்வோம்.. இதைப் பேசுவோம்.. சண்டையிடுவோம். எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்.

ஆனால் “ஒரு சொல்” தாங்கவில்லை… என்று சொல்லிவிட்டு “என்ன வாழ்க்கை” என்று தற்கொலை செய்யப் போவோம்... “ஒரு சொல்லுக்காக…”

அப்பொழுது “இந்த உடலுக்காக” நாம் எதை எண்ணினோமோ அதை வளர்த்து விடுகின்றது. இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் “அதன் வழியே நீ செய்...” என்றுதான் அந்த உணர்ச்சிகளை இயக்கி ஆளுகின்றது நம் உயிர்.

அதன் வழி சென்றபின் இந்த உடலை முழுமையாக நாம் வளர்ச்சியற்ற நிலைகளில் குறைக்கப்படும் பொழுது குறை உணர்வு கொண்ட விஷமான உயிரினங்களாக உயிர் நம்மை மாற்றிவிடுகின்றது என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

மெய் உலகம் என்பது உயிர். இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்றதுதான் துருவ நட்சத்திரம். ஆகவே அந்த மெய்யை நீ அடைய வேண்டும்.

“மெய்... மெய்யாக வரும் உன் உணர்வுகள்” மெய்யை உணர்த்தும் உணர்வுகள் பெறும்போது “நீ எப்படி இருக்க வேண்டும்” என்பதனை உணர்த்துவார் குருநாதர்.

ஆகவே… கடவுளின் அவதாரம் பத்து – “கல்கி” என்ற நிலையில் நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் குரு வழியில் அழியாத நிலைகள் பெற வேண்டும்.