நமது குரு அவருடைய வாழ் நாளில் பல நஞ்சான உணர்வுகளை நீக்கி ஒரு பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார். ஆனால் மக்கள் பித்துப் பிடித்த நிலையில் தான் இந்த உலகிலே வாழுகின்றனர். அதிலிருந்து அவர்கள் அகல வேண்டும் என்ற நிலையைத் தான் எனக்கு குருநாதர் சொன்னார்.
ஏன் சாமி...? பைத்தியம் பிடித்த மாதிரி போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள்...! என்று நான் அவரிடம் கேட்டேன்.
நீ தான்டா கேட்டாய்...! வேறு யாரும் கேட்கவில்லை...!
1.பைத்தியம் என்று சொல்லுகின்றாய்... என்னிடமே நீ அதைக் கேட்கின்றாய்
2.என் செயலை நீ அறிய விரும்புகின்றாய்
3.நீ நாளடைவில் அறிந்து கொள்வாய்
4.அதைப் போன்று நீ செயல்படு...! என்று காட்டினார்.
உலக மக்கள் தான் நுகர்ந்த உணர்வின் ஆசைகள் கொண்டு பித்தரைப் போன்று தான் வாழ்கின்றனரே தவிர தனக்குள் இருளை நீக்கிடும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.
தீமைகள் எனக்குள் வராதபடி பித்தனாக நான் இருக்கின்றேன்...!
1.தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக நான் இருக்கப்படும் போது எனது உயிர் ஒளியின் சரீரம் பெறுகின்றது
2.ஒளி பெறும் சரீரத்தை அதனின் உண்மை ரகசியத்தை நீ அறிந்து கொள்...
3.என்னுடன் இணைந்து வா...! என்றார்.
தாவர இனங்களின் மணங்கள் எப்படி இயங்குகின்றது...? தாவர இனம் பேசுமா...! என்று குருநாதர் என்னிடம் கேட்டார்.
பேசாது...! என்று நான் சொன்னேன்.
அப்போது காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்களின் உணர்வின் சத்தை நுகரும்படி செய்து அனுபவமாகக் காட்டினார்.
1.தாவரங்களின் மணமே நம் எண்ணங்களாக வருவதும்... நம்மை இயக்கச் செய்வதும்
2.அது தான் நம்மைப் பேச வைக்கின்றதே தவிர... நாம் அல்ல...!
எந்த உணர்வின் சத்து நம்முள் உண்டோ... அதனின் உணர்வின் மணங்கள் நமக்குள் எப்படி உண்டோ அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்கிக் காட்டுவது உயிருடைய வேலை. அந்த உணர்வின் தன்மை உடல் ஆக்குவதே உயிரின் வேலை.
1.உணர்வின் தன்மை எது அதிகமோ
2.அதன் வழி தான் நம்முடைய இயக்கமும்... அடுத்த உடல் வாழ்க்கையும் என்று குரு தெளிவாக்கினார்.
காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அலைந்து உண்மையின் உணர்வுகள் அறிந்ததை... பல காலம் பல தொல்லைகளுக்கு மத்தியில் அவர் ஊட்டிய உணர்வின் தன்மைகளை அறிந்து கொண்டோம்.
அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குரு சொன்னார். ஏன் அதைச் சொன்னார்...?
ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணி... அந்த உடலை உயிர் தான் உருவாக்கியது என்ற நிலையில் அதை ஆலயமாக மதித்து
1.ஒவ்வொரு மனிதனையும் கடவுளாக மதித்தால்
2.அவர்கள் செய்யும் குறைகள் உன்னைச் சாடாது என்றார் குரு.
அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்று உணர்வினை நீ எடுத்தால் இந்த உணர்வலைகள் காற்றலைகளில் பரவுகின்றது. நம் பூமியிலே பரமாத்மாவிலே படர்கின்றது.
அவர்கள் குறைகளை எண்ணாதபடி அவர்கள் நல்ல மனம் நிறைவு பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால்
1.நமது உயிரான கடவுளுக்கும் சேவை செய்கின்றோம்
2.இந்த உடலான ஆலயத்திற்குள் அசுத்தத்தை நீக்கிடும் சக்தி பெறுகின்றோம்
3.நல்ல உணர்வைக் காக்கும் தன்மை பெறுகின்றோம்.
ஆகவே பேரருள் என்ற உணர்வுகளைச் சேர்த்துப் பழகி ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று “ஆலயங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்று... ஒவ்வொரு உயிருக்கும் அதை நீ செய்ய வேண்டும்...!” என்று எனக்கு உபதேசித்தருளினார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).