ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 28, 2022

அமாவாசை அன்று செய்யக் கூடாதது...

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மந்திரம் சொல்லும் பழக்கம் இன்றுள்ள பெரும் பகுதியான மக்களிடம் உள்ளது.
1.இறந்த பின் அந்த உடலைக் கருக்கி விட்டாலும்
2.உடலில் இருந்து வெளியேறிய உயிரான்மா இந்தக் காற்று மண்டலத்தில் தான் இருக்கும்.

“ஐந்தாம் படை…” என்று சொல்வார்கள். நாட்டுக்கு நாடு ஒவ்வொரு அரசனுக்கும் அது இருக்கும். எங்கெங்கே என்ன இருக்கின்றது…? என்று இறந்தவர்களைப் பற்றிய முழு விவரங்களை அரசனுக்குச் சொல்வார்கள்.

அதனின் செயல்கள் இன்றும் குடுகுடுப்புக்காரன் என்ற பெயரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் நடந்து செல்லும் போது பாதம் பட்ட நிலைகளில் வீட்டு வாசல்படியில் இருக்கக்கூடிய மணலை எடுத்துக் கொள்வார்கள்.

நல்லது செய்வதாக… ஜோதிடம் சொல்வது மாதிரி நம் வீட்டிற்கே வந்து தலை முடியையும் பழைய துணியையும் கேட்டு வாங்கிச் செல்வார்கள்.

குடுகுடுப்புக்காரர்கள் என்று சொல்வதெல்லாம் அரசர்களுக்கு ஐந்தாம் படை வேலை செய்தவர்கள் தான். அன்றைய அரசன் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மக்கள் மத்தியில் வந்து இந்த மூன்று பொருள்களை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த முன்னோர்களுக்கு நாம் இங்கே என்ன செய்கின்றோம்...?

சுட்ட சாம்பலை எடுத்துக் கரைத்து விடுகின்றோம். அமாவாசை அன்று அவர்களுக்கு உணவு படைத்து அவர்கள் அணிந்த துணிகளை எல்லாம் வைத்து அழைப்போம்.

அதே சமயத்தில் அமாவாசை அன்று பித்ருக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களை எழுதி வைத்துள்ளார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

அமாவாசை அன்று சூரியனுடைய ஒளிக்கதிர்கள் அதிகமாக நமக்குக் கிடைப்பதில்லை. ஏன்…?

பூமியைச் சேர்த்துச் சுழன்று கொண்டிருக்கும் சந்திரன் சூரியனுடைய ஒளிக் கதிர்களைக் கவர்ந்து ரசம் பூசிய கண்ணாடி போல் எல்லா நாளும் நமக்குப் பரப்பிக் கொண்டு இருக்கின்றது. அதாவது பூமியின் இயக்க உணர்வுக்கு உதவி செய்கிறது சந்திரன்.

ஆனால் சந்திரனை பூமி முழுமையாக மறைக்கப்படும் போது
1.சூரியனுடைய ஒளிக்கதிர்கள் வராதபடி அது பூரண அமாவாசை ஆகின்றது.
2.அதனால் சந்திரன் மூலம் சூரியனின் ஒளிக்கதிர்கள் நமக்குச் சரியாகக் கிடைப்பதில்லை (பூமியிலிருக்கும் எல்லாவற்றுக்கும் இதே நிலை தான்)
3.அன்று கனமான சுவாசமாக நமக்கு இருப்பதன் காரணமே இது தான்

ஆகையினால் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் இங்கே சுழன்று கொண்டிருக்கப்படும் போது அமாவாசை அன்று வழக்கமாகக் கிடைக்கும் அலைகள் அவர்களுக்கும் கிடைப்பதில்லை.

அமாவாசை அன்று நாம் சாப்பாடு போட்டுத் துணிமணிகளை எல்லாம் வைத்து முன்னோர்களைக் கூப்பிடுவோம்.

ஆனால் அரசன் என்ன செய்வான்...?

அதற்கென்று ஒரு ஆளை நியமித்திருப்பான்.
1.வாழும் போது நாம் எந்தெந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்தோமோ
2.அந்த விவரங்களை எல்லாம் அவன் அரசனிடம் சொல்வான்.

அதன் பிரகாரம் கோவில்களோ மற்ற இடங்களிலோ “மந்திரங்களைச் சொல்லி” யாகங்களை வளர்ப்பார்கள். மந்திர ஒலிகளை வைத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நம் முன்னோர்களின் ஆன்மாக்களைக் இழுத்து கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

அதாவது
1.நாம் இங்கே உணவையும் அவர்களின் துணியையும் வைத்துக் கூப்பிடும் போது
2.அவர்கள் அங்கே இழுத்துக் கவர்ந்து கொள்வார்கள்.

ஆக மொத்தம் உடலுடன் இருக்கப்படும் பொழுது அரசனுக்கு அடிமை. இறந்த பின்னும் ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி விடுவான்… நம் ஆன்மாவும் அவனுக்கு அடிமை தான். கைவல்யப்படுத்திய ஆன்மாக்களை எதிரி நாட்டின் மீது ஏவிப் பில்லி சூனியங்களுக்குப் பயன்படுத்துவான்.

அரசர்களுக்குள் போர் முறை வரப்படும் பொழுது பக்தியின் தன்மை கொண்டு இறந்தார்கள் என்றால் எதிரிகளை வீழ்த்தும் உணர்வுடனே மடிகின்றனர்.
1.அந்த ஆன்மாக்களையும் கவர்ந்து கொண்டு எதிரிகளை வீழ்த்த ஏவல் செய்வான்.
2.இதைப் போன்று தான் மாற்று அரசனும் செய்வான்.
3.மனித உடலிலிருந்து எடுத்துத் தான் அன்று இந்த வேலைகளைச் செய்வார்கள்.
4.அன்றைய அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இது தான்.

தனுர் வேதம் கற்றுக் கொண்டவர் தான் போர்முறை நடத்த முடியும் என்று இதைத் தான் மகாபாரதத்தில் சொல்லியிருப்பார்கள்.

தனுர் வேதம் என்றால் ஒரு மனிதனுக்குள் மந்திரங்களைச் சொல்லிப் பதிவு செய்து அதன் பின் அதே பதிவை வைத்து மீண்டும் இறந்த பின் அந்த ஆன்மாவைக் கவர்ந்து ஏவத் தெரிய வேண்டும்.

அப்படி ஏவத் தெரிந்தவன் எவனோ அவன் தான் அந்த நாட்டையும் மற்றதையும் பாதுகாக்க முடியும் என்று அரசு நியதிகள் அன்று உண்டு.

ஒரு மனிதனுக்குள் மந்திர ஒலியினைப் பதிவாகி அந்தப் பதிவை மீண்டும் எடுத்துக் கொள்ளத் தெரிய வேண்டும். அதை வைத்துத் தான் அன்று பல நிலைகளைச் செயல்படுத்தினார்கள்.

எளிதில் ஆன்மாக்களைக் கவர்வதற்குத் தான் அமாவாசை என்று அந்த இருண்ட நாளை அன்று அரசன் தேர்ந்தெடுத்தான்
1.அன்று அரசன் எதைக் காட்டினோ அதே வழியில் தான் நாமும் செயல்படுகிறோம்.
2.அரசனால் காட்டப்பட்ட சாஸ்திர விதிகளில் இப்படிச் சிக்கி
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்யாதபடி
4.ஐதீகம் என்ற முறைகளில் மாதத்தில் ஒரு நாளும் வருடத்தில் ஒரு நாளும் ஒரு சாங்கியத்தைச் செய்து விட்டு
5.அதனுடன் திருப்தி அடைந்து கொள்கிறோம்

அதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும். சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சப்தரிஷி மண்டல ஒளி அலைகளை முதலில் நமக்குள் வலு கூட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்தப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து “நேரே…” அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்...!

இவ்வாறு “தினசரி” நாம் எண்ணுதல் வேண்டும்.