மனிதர்கள் நாம் வாழ்வது சிறிது காலம் தான். நாம் தேடிய செல்வங்களும் “என்றும்” நம்முடன் இருந்ததில்லை.
செல்வம் தேடி வைத்திருக்கும் குடும்பங்களை எல்லாம் பார்த்தால்… கோடிக் கணக்கில் பணம் இருக்கும்…! ஆனால் குடும்பத்தில் எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று பார்த்தால் தெரியும்… நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
செல்வம் இருக்கும்… வேதனையிலிருந்து மீள முடியாத நிலை தான் அங்கே இருக்கும். துயரத்தின் உணர்வுகள் எல்லை கடந்து இருக்கும்.
1.செல்வம் எது இருப்பினும் அதுவே எதிரியாக மாறுகின்றது.
2.செல்வத்தின் நிலை சிந்தனைகளைக் குறைக்கச் செய்கின்றது… செயல்களை மாற்றுகின்றது…
3.செல்வம் இருந்தாலும் தன்னை மதிக்கவில்லை என்றால் வேதனை தான் வரும்.
வேதனை என்றாலே விஷம். ஆகவே சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. உடலில் உள்ள அணுக்களில் விஷத்தன்மை பரவி நோயாக மாறுகின்றது.
செல்வத்தைப் பார்க்க வேண்டியதுதான்… ஆனால் “ஆசையோ விடாது…” அதையே ஒவ்வொரு நிமிடமும் நினைத்து நரக வேதனையைத் தான் அது உருவாக்குமே தவிர நல்லது செய்யாது.
ஆகவே செல்வம் இருந்தாலும் அருள் செல்வம் (ஞான சக்தி) என்ற நிலை இருந்தால் தான் செல்வத்தைப் பாதுகாக்கும் தன்மையாக வரும். நம் உடலில் அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்க முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.
நம் உயிர் ஈசன்… நம் உடல் சிவம்…! ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தெந்த உயர்ந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் நல் வினைகளாக உடலுக்குள் உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாக அது நம்மை இயக்குகிறது… அதுவே நம்மை வழி நடத்தும். ஆகவே நல்வினைகளையே நமக்குள் சேர்த்தல் வேண்டும்.
எத்தகைய தீமைகள் வந்தாலும் வயல்களில் களைகளை எப்படி நீக்கிக் கொண்டே இருக்கின்றோமோ அதைப்போல
1.உடலில் வரும் தீமை என்ற நிலைகளை
2.அவ்வப்போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவைகளை நீக்குதல் வேண்டும்.
தீமைகளை நீக்கும் அருள் சக்திகளைப் பெறுவதே அழியாச் செல்வம்.