ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 12, 2022

யாம் கொடுக்கும் உபதேசங்களை விளைய வைத்தால் தான் உங்களுக்கு ஞானம் கிடைக்கும்

பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் தவறுகளையும் நாம் நுகர்ந்தறிந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தூய்மையாக்கிக் கொண்டே வந்தால் மன பலம் பெற்று... விவேகத்துடன் நடந்து கொள்ளும் தன்மையும்... நம் வாழ்க்கையை அமைதி கொண்ட வாழ்க்கையாகவும் அமையச் செய்யும்.

பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து “என்றுமே ஏகாந்த நிலையாக” மகிழ்ச்சியுடன் வாழும் அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் குடும்பத்தில் ஏகக்காலத்தில் இதைப் பயன்படுத்திப் பழகுங்கள்.
1.குடும்பத்தில் கோபமோ குரோதமோ வராதபடி
2.அருள் உணர்வுகளைப் பெற்றுச் சிந்தித்து செயல்படும் திறனாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் எடுக்கப்படும் போது நமக்குள் வரும் வெறுப்பையும் வேதனையும் சமப்படுத்திச் சிந்திக்கும் தன்மை கிடைக்கின்றது. அப்போது நமது உணர்ச்சிகள் “விவேகத்துடன்” நடந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

இதை எல்லாம் மனதில் வைத்து யாம் கொடுத்த உபதேசங்களை நூல் வடிவில் வந்ததை அனைவரும் திரும்பத் திரும்பப் படித்து அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதுவே “மிகப்பெரிய தியானம்” ஆகின்றது.

வாழ்க்கையில் வரும் இடையூறுகளை அகற்றிடும் சக்தி பெற்று மற்றவரை நல்வழிப்படுத்தும் அருள் ஞானிகளாகவும் நாம் மாற முடியும்.

ஆனால்...
1.பிறரிடம் நாம் சொல்லிச் செயல்படுத்தும் நிலை ஆகாது... முடியாது..
2.பிறருக்கு நல்ல புத்திகளைச் சொன்னால் அதை அவர்களால் ஏற்க முடியாது
3.ஏனென்றால் அது இயங்காது.

இவ்வளவு தூரம் இங்கே உபதேசிக்கிறோம் என்றாலும்
1.இந்த உணர்வுகளைப் பதிவாக்கித் தனக்குள் வளர்த்து
2.உங்கள் உடலிலே விளைந்தால் தான் அந்த ஞானமே வரும்.

சொல்லும் பொழுது... கேட்கும் போது... நன்றாகத்தான் இருக்கும். ஆக உங்கள் உடலுக்குள் விளையச் செய்து அந்த உயர்ந்த கருத்துக்களை என்றுமே நீங்கள் வளர்த்தல் வேண்டும்.

அது வரவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் அதிகமாகச் சேர்த்து வளர்த்தல் வேண்டும். அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளையும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் பற்றதாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

எந்த நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் பற்றுடனே நாம் வாழ்ந்திட வேண்டும்.

1.ஒரு காரியத்தைச் செய்யச் சென்றாலும்
2.வெளியில் சென்றாலும்
3.உறங்கச் சென்றாலும்
4.உணவு உட்கொண்டாலும்
5.ஒருவரிடம் பேசுவதாக இருந்தாலும் கூட
6.அதற்கு முன் ஒரு நொடி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு... அந்த வலுவைக் கூட்டிக் கொண்டு
7.நாம் சொல்லக்கூடியது அவருக்கு நல்லதாக வேண்டும் நல்லதாக அமைய வேண்டும்
8.என் சொல்லை அவர் மதித்து நடத்த வேண்டும்
9.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று
10.எதற்குமே இப்படி ஒரு தொடர்பு வைத்துக் கொண்டால்
11.அருள் உணர்வுகள் உங்களுக்கு அந்த ஞானத்துடன் விவேகத்துடன் வரத் தொடங்கும்.
12.எதிர்ப்புகளைத் தணிக்கும்... எதிரிகள் உணர்வு வராதபடி தடுக்கும்
13.கோபத்தை வளர விடாதபடி அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்காது தடுக்கும்.

இதை எல்லாம் மனதில் வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சீராகத் தியானத்தில் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.