குருநாதர் என்னைக் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல கஷ்டங்களைச் செயற்கையாக ஏற்படுத்தித் தான் உண்மைகளை உணரும்படி செய்தார்.
ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் அமர்ந்து இந்த உபதேசங்களைக் கேட்கின்றீர்கள்.
1.எந்த அளவிற்கு இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்குகின்றீர்களோ
2.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து வாழ்வதற்கு இது உதவும்.
ஒரு பச்சிலையைக் காட்டி… “இந்தப் பச்சிலை பேசுமாடா…!” என்பார் குருநாதர்.
அது எப்படி சாமி பேசும்…? என்பேன். அவர் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றார். பச்சிலை எப்படி சாமி பேசும்…! என்று நான் கேட்கின்றேன்.
“பச்சிலை தான் பேசுகிறது…” என்பார்.
நான் பேசாது என்பேன். இரண்டு பேருக்கும் “சண்டை” வரும்.
காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின்…
1.பச்சிலை தான் பேசும் என்பதை நீ தெரிந்து கொள்ளும் வரை
2.“உன்னை விடமாட்டேன்” என்பார் குருநாதர்.
அப்போது நான் என்ன செய்ய முடியும்…! அவர் ஒவ்வொரு பச்சிலையாகக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்வார். பல பச்சிலைகளை முகர்ந்த பின் கடைசியிலே என்ன செய்தார்…?
எனக்குத் தெரியாமலே ஒரு விஷமான செடியைக் கையில் கொடுத்து அதை என்னை நுகரும்படி செய்தார்.
மயக்கம் வருகின்றது… அம்மா… அப்பா…! என்று சொல்கின்றேன்.
இப்பொழுது யாருடா பேசுகிறது…? என்று கேட்கின்றார்.
என் உடலில் “நோய் பேசுகிறது…” என்று சொன்னேன்.
நோய் எப்படிடா வந்தது…? இந்த பச்சிலை தானே காரணம் என்று சொல்கிறார் குருநாதர்.
சில பச்சிலைகளை நுகரும் பொழுது எனக்கு உற்சாகம் வந்தது… ஜம்… என்று இருக்கின்றது.
காட்டிற்குள் அங்கே சாப்பாடு ஒன்றும் கிடையாது. ஒரு லிட்டர் அரிசி; ஒரு டப்பா; மோரில் ஊறப் போட்ட கத்திரிக்காய்; மோரில் ஊறப் போட்ட மிளகாய்… (உப்பு கலந்தது) இதை வைத்துத் தான் இரண்டு மாதம் நாங்கள் இரண்டு பேரும் காட்டிலே காலம் தள்ளினோம்.
இரண்டு கட்டையை வைத்துத் தீயை மூட்டி மேலே பாத்திரத்தை வைத்து நீரை அதிகமாக ஊற்றி அரிசியைப் போட்டுக் கஞ்சி மாதிரிக் காய்ச்ச வேண்டும். அதிலே மிளகாயையும் கத்திரிக்காயையும் ஒரு துண்டு போட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். இது தான் அங்கே சாப்பாடு.
ஆனால் குருநாதர் பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கும்படி சொன்னார். நுகர்ந்து உடலுக்குள் மாற்றங்களாகும் போதுதான் எனக்குத் தெரிய வருகின்றது.
பச்சிலை பேசுமாடா என்று கேட்டுக் கேட்டுச் சில விஷமான பச்சிலைகளை நுகரும்படி செய்ததும் எனக்கு மயக்கம் வந்து விட்டது. எம்மா… எப்பா…! எம்மா… எப்பா…! என்று கத்தத் தொடங்கினேன்.
என்னடா செய்கிறது…? என்று குருநாதர் கேட்டார்.
சாமி… எதையும் சாப்பிட முடியவில்லை.. தலை வலி வருகின்றது எப்படியோ மயக்கமாக இருக்கிறது…! என்று சொன்னேன்.
இதை எல்லாம் பேசுவது யாருடா…? என்று கேட்டார்.
“நான் தான் பேசுகிறேன்…” என்று சொன்னேன்.
உன்னை பேச வைப்பது எது…? அது யாருடா…! நீ நுகர்ந்த பச்சிலை தான் இவ்வாறு பேச வைக்கின்றது என்றார்.
பச்சிலைகளுக்கு மணம் உண்டு.
1.தன் மணத்தால் மற்றொரு செடியின் மணத்தை அருகில் விடாது தள்ளி விடுகின்றது
2.இப்பொழுது நீ நுகர்ந்த பச்சிலையின் உணர்வுகள் உன் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்த பின்
3.இந்த வேலையை எல்லாம் செய்கின்றது… நல்லதை வர விடாதபடி தடுக்கின்றது…!
நீ எம்மா… எப்பா… என்று அலறுகிறாய் என்றால் அப்பொழுது எது பேசுகின்றது…?
உயிரணு எப்படி ஆனதோ இதைப் போன்று அந்தப் பச்சிலை உருவாகி குறித்த காலம் வந்து உனக்குள் இவ்வாறு செய்கின்றது. “பச்சிலை தான் பேசுகிறது…” என்பதை இவ்வாறு உணர்த்துகின்றார்.
உயிர் தோன்றிய பின் வளர்ச்சியில் மனித உடல் பெற்ற பின் உணர்ச்சிக்கொப்ப எண்ணமும் அதற்குத்தக்க செயலும் வந்தது. ஆனால் விஷமான செடிகளின் மணத்தை நுகர்ந்த ஐந்தாறு நாட்களுக்குள் உனக்கு இப்படி ஆகிவிட்டது. எம்மா… எப்பா… என்று வேதனைப்படுகின்றாய்…!
உங்களிடம் இப்பொழுது நான் சொல்கின்றேன் ஆனால் நான் காட்டிற்குள் சிரமப்பட்டு… இன்னல்பட்டு… வேதனைப்பட்டுத் தான் அதையெல்லாம் அறிந்து கொண்டேன்.
விஷமான செடிகளின் மணங்களை நுகரும்படி செய்து கை கால் குடைச்சல்களை ஏற்படுத்தித் தான் குருநாதர் தெரிய வைத்தார்.
ஒரு மாதம் இரண்டு மாதம் இவ்வாறு சுற்றிய பின் ஒவ்வொரு குணங்களுக்கும் நீ நுகர்ந்தது என்ன செய்கின்றது…/
1.இந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.அந்த அணுக்களுக்குள் என்ன இயக்கங்கள் ஏற்படுகின்றது…?
3.அதை மீண்டும் சரி செய்வது எப்படி…?
அதைத் தெரிய வைப்பதற்காக வேண்டி வேறு சில பச்சிலைகளை நுகரும்படி செய்தார். அதை நுகர்ந்த பின்பு “அப்பாடா…!” என்று சொல்கிறேன். உடல் நன்றாக ஆகின்றது.
உன் உடல் இப்பொழுது எவ்வாறு நன்றாக ஆனது…? என்று அதை எல்லாம் அனுபவபூர்வமாகத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.
நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிய வைப்பதற்குத் தான் இதை எல்லாம் செய்தார்.