ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2022

துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன்

இன்று கோடிச் செல்வங்களை நாம் வைத்திருந்தாலும் அழகான உடலாக வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் பண்பால் பரிவால் கேட்டறிந்த உணர்வுகள் உடலுக்குள் கடும் நோயாக மாறும் பொழுது “நம் அழகான உடல் நிற்கின்றதா...?”

ஆடை அலங்காரங்களை எல்லாம் செய்து பிறரை மகிழச் செய்யும் நிலை நமக்கு இருந்தாலும்
1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் என்ன ஆகிறது...?
2.நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது அழகான ஆடையை மேலே போட்டால் என்ன சொல்வீர்கள்...?

நல்ல ஆடைகளைப் பார்த்தால் வெறுப்பு தான் வரும்.

மீறி யாராவது கொடுத்தால் என்னைக் கேலி செய்கின்றீர்களா...? நான் நோயாக இருக்கும் போது இப்படிச் செய்கின்றீர்களே...! என்று வெறுக்கும் தன்மை தான் வரும்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் போது ஒரு நல்ல ஆடையைக் காண்பித்து இது எப்படி இருக்கிறது பாருங்கள்...! என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்...?

காட்டுவர்கள் மீது ஏரிந்து விழுவோம்... எந்த நேரத்தில் எதைச் செய்கிறார்கள் பார்...! என்று. ஆகவே அதை அப்போது ஒதுக்குகின்றோம் அல்லவா...!

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய ஆடம்பர நிலை பெற்றிருந்தாலும்
1.அருள் ஒளி என்ற நிலையை நாம் பெருக்கி
2.அருளைப் பெறும் ஆசையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இருளை நீக்கும் அந்த வலிமை பெற்று நமது வாழ்க்கையில் பேரருளைப் பெறும் அருள் சக்தியாக நாம் வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் முழுமை பெறுதல் வேண்டும்.

உங்களை எங்கே அழைத்துச் செல்கின்றேன்...? துருவ நட்சத்திரத்திற்கே இப்போது அழைத்துச் செல்கின்றேன்...!

நம் பிரபஞ்சத்தின் இயக்கம் 2000 சூரியக் குடும்பத்தில் இணைந்து வாழும் தன்மை பெற்றது.
1.அதைக் கண்டுணர்ந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்கு உணர்த்தப்படும் போது
2.உங்கள் நினைவாற்றல் அந்த 2000 சூரியக் குடும்பங்கள் வாழும் எல்லைகளுக்கே செல்லுகின்றது
3.அதன் உணர்வின் தன்மையைப் பெருக்கி பிறவில்லா நிலையை அடையும் நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஆகவே உங்கள் ஆழ்ந்த சிந்தனையைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அறியாது வந்த இருளை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கணவன் மனைவி எங்கள் இரு உயிரும் ஒன்றாக வேண்டும். வசிஷ்டர் அருந்ததி போல நாங்கள் ஒன்றி வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து சாவித்திரி போன்று தீமைகள் புகாது இரு உயிரும் ஒன்றிட வேண்டும் என்று கணவன மனைவி இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஆகவே உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
2.பேரின்பப் பெரு வாழ்வு வாழக்கூடிய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

தியானிக்கும் முறைகளை வழி காட்டினோம்... துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் பதிவு செய்தோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்துடன் இணைத்து “ஆழ்ந்த நித்திரைக்கு முன் நீங்கள் கொண்டு வந்தால்” என்றும் ஏகாந்த உணர்ச்சி கொண்டு உங்கள் உடலுக்குள் உண்மையின் உணர்வை அது உணர்த்தும்... பேரருளைப் பெருக்கும்... பேரொளியாக மாறுவீர்கள்.