ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2020

ஒவ்வொரு நாளும் நமக்குள் நல்ல உணர்வுகளின் வளர்ச்சி கூடுகிறதா என்று பார்க்கின்றோமா...?


ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். நோயாளிகளைப் பார்த்திருப்போம்... சண்டை போட்டவர்களையும் பார்த்திருப்போம்.

நோயுற்ற உணர்வுகளையும் சண்டை போட்ட உணர்வுகளையும்  நுகர்ந்து அதை நம் உடலுக்குள் உருவாக்குகின்றோம்... அதாவது சதா சிவமாக்கிக் கொண்டே இருக்கின்றது நமது உயிர். (சிவம் என்றால் உடல்)

ஆனால் இதை மாற்றுவதற்கு நாம் எதைச் சிவமாக்க வேண்டும்...? அந்த அருள் ஞானியின் உணர்வைச் சிவமாக்க வேண்டும். இதைப் பழகுதல் வேண்டும்.

காலையில் விழித்தவுடனே “ஈஸ்வரா...!’ என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் வலுப் பெறச் செய்ய வேண்டும்.

 என்னடா...! சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்பச் சொல்கின்றார் என்று நினைக்க வேண்டியதில்லை. யாம் சொல்வதைத் திருப்பிக் கேட்டு என்ன சொன்னேன்...? என்று கேட்டால் தலையைச் சொறிவீர்கள்.

ஆனால் நான் திரும்பச் சொன்னால்... அப்போது சொன்னதைத் தான் இப்பொழுதும் சொல்கின்றார்... திரும்பச் சொல்வதுதான் இவருக்கு (ஞானகுரு) வேலை போலிருக்கிறது என்று எண்ணுவீர்கள்...!

இராமயாணத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் வருடம் தோறும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதிலே எதாவது மாற்றிச் சொல்கின்றார்களா...? இல்லையே...!

இராமாயணத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்...
1.அந்த ஞானிகளின் உணர்வின் தன்மையைத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான்
2.உங்கள் உடலில் அந்த அணுக்களின் பெருக்கமாகின்றது.

பல உணர்வுகளில் நீங்கள் இருக்கும் பொழுது ஒரு இரண்டு தடவை சொன்னால் இது மறைந்துவிடும். ஏனென்றால் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்...?

அவன் அப்படிச் செய்தான்...! இவன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்க்கின்றான்...! இங்கே உடம்புக்குச் சரியில்லை...! என்று
1.எத்தனையோ வேதனைப்படும் உணர்வை ஒரு நாளைக்கு நூறு தடவை சொல்கின்றீர்கள்
2.நல்லது செய்வதை ஒரு தடவை அல்லது இரண்டு தடவை சொன்னால் பற்றாதே... இது அழிந்துவிடுமே...!
3.அப்போது எங்கிருந்து மாற்றுவது...?

ஒரு அழுக்குத் தண்ணீருக்குள் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்றத் தான் அது தெளிவாகிக் கொண்டே வருகின்றது

அதைப் போன்று தான் நீங்கள் எத்தனையோ சங்கட உணர்வுகள் கொண்டிருக்கும்போது...
1.மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வை
2.உங்களுக்குள் செலுத்தச் செலுத்தத் தான்...
3.அந்த உணர்வை வலுப்பெற கூடிய நிலையே வருகின்றது.
4.வலுப்பெறச் செய்ய வேண்டுமென்று தான் இதை உங்களிடம் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அடுத்தாற் போல் என்ன செய்ய வேண்டும்...?

இந்த வாழ்க்கையில் யாரை யாரை எல்லாம் நாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
1.என்னிடம் “கஷ்டம்...” என்று சொன்ன அந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பக்  கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும்
3.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இதை நாம் எண்ணிப் பழக வேண்டும்

அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணினால் “அந்த நலம் பெறும் சக்தி” என்னிடம் இது வந்துவிடுகின்றது. அந்த உணர்வு எனக்குள் என்னோடு சேர்த்துதான் வாழுகின்றது.

அவர்கள் நல்லாக வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் எனக்குள் நல்லதாகின்றது.

அதே போல வேதனைப்படுவோரைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அந்த வேதனை எல்லாம் நீங்கி ஒன்று சேர்த்து வாழும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி எல்லோரும் செய்ய வேண்டும்...!