ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2020

காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு விளையச் செய்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை ஊட்டுகின்றோம்... பயன்படுத்துங்கள்


நீங்கள் எல்லாம் காட்டிற்குச் சென்று தவமிருந்து மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவது என்றால் முடியாது.

ஈஸ்வரபட்டர் என்னை (ஞானகுரு) வீட்டிலிருந்து அழைத்துச் சென்று காடு மேடெல்லாம் அழையச் செய்தார். என் குடும்பத்தாரையும் கஷ்டப்படுத்தினார். இயற்கையின் உண்மைகளை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காக அத்தனையும் செய்தார்.

என்னுடைய மூத்த பையன் அவன் நல்ல பையன் தான். ஆனால் வீட்டிலிருக்கும் சொத்தை எல்லாம் செலவழிக்கச் செய்துவிட்டார் குருநாதர். சொத்தெல்லாம் போய் அநாதையாக ஆக்கி விட்டார்.
என் பையன் செய்த அந்தக் குறும்புத்தனத்தால் பணம் எல்லாமே போய்விட்டது. அந்தச் சமயத்தில் குடும்பத்தை வழிநடத்த என் மனைவி மிகவும் அவஸ்தைப்பட்டது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு விஞ்ஞானி அவன் பல சங்கடங்கள் படலாம். தன்னுடைய விடா முயற்சியினால் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான். அதை இயந்திரமாகச் செய்து அதை இயக்கிக் காண்பிக்கின்றான். அதனின் செயலை நாம் அறிகின்றோம்.

அவன் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததை சரியான முறையில் நாம் ஏற்றுக் கொண்டோமென்றால் அந்த விஞ்ஞான அறிவு நமக்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரைச் செய்து கொடுக்கின்றான் என்றால்... முதலில் எவ்வளவு சிரமப்பட்டு அதை அவன் செய்திருப்பான்..! ஆனால் இன்று நாம் அதை விளையாட்டுக்குத் தட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கம்ப்யூட்டர் ஒன்றும் வேலை செய்யாது.

அதைப் போன்று தான் எவ்வளவோ சிரமப்பட்டு விளைய வைத்த ஞானிகளின் உணர்வை உங்களுக்கு இங்கே உபதேசமாக வித்தாகப் பதிவாக்குகின்றேன். அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணக்கூடிய உணர்வை எல்லாம் நம் உயிர் பதிவாக்கிக் கொள்கின்றது. எதன் வழி...? நம் கண்கள் வழி தான்...!

ரேடியோவிற்கும் டி.வி.க்கும் ஆன்டென்னா எப்படி இருக்கின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்திற்கும் இந்தக் கண்ணே ஆன்டென்னாவாக இருக்கின்றது... பதிவாக்குகின்றது.
2.பதிவான பின் அதே நினைவைச் செலுத்தப்படும்போது
3.வெளியில் காற்றிலிருப்பதை இழுத்துக் கொடுப்பதும் நமது கண் தான்.

கண் வழியாகக் கவரப்படும் உணர்வுகள் உயிரிலே படும்போது எண்ணமாக வருகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மைதான் இந்த உடலை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைப் பற்றிக் கோபமான எண்ணங்களைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தப் பதிவு... அவரை நினைத்தவுடனே இங்கே ஆத்திரம் வரும்.

அப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சிகள் வரும்போது அடுப்பில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தால் போதும். தன் நினைவை இழந்து அடுப்பிலே எதாவது பொங்கி வந்தால்...
1.துணியையோ மற்ற உபகரணத்தையோ எடுக்காமல்
2.உடனே அப்படியே கையில் தூக்குவார்கள்... கை சுட்டுப் போகும்... பார்க்கலாம்...!

அதே மாதிரி ஒரு கணக்கை எழுதிக் கொண்டிருந்தோம் என்று சொன்னால் அந்த வெறுப்பான எண்ணங்கள் வரும்போது இங்கே தப்பான கணக்காகப் போட்டு விடுவோம்.

பணத்தையே எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அந்த வெறுப்பான சமயங்களில் எண்ணிக்கை கணக்கில் வித்தியாசம் ஆகிவிடும்.
1.ஏனென்றால் அந்த உணர்வுகள் பதிவான நிலைகள்தான் நம்மை அவ்வாறு இயக்குகின்றது.
2.அந்த மாதிரி இயக்காமல் தடுக்க வேண்டுமல்லவா...!

இதையெல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தி இந்த ஆறாவது அறிவுக்கு உண்டு.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்... அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி முறைகளைத்தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).