ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2020

புருவ மத்தி தான் மனிதனுக்குச் சொர்க்கவாசல்


மனிதன் ஒரு மிருகத்தைச் சுட்டுக் கொல்கின்றான் என்றால் அந்த மிருகன் சுட்டவனின் நினைவு கொண்டு அந்த மனிதன் உடலுக்குள் வந்து  மிருகம் மனிதனாகப் பிறக்கின்றது.

அதே போல் பாம்பை ஒரு மனிதன் அடித்துக் கொல்கின்றான் என்றால் அந்தப் பாம்பின் உயிரான்மா மனித உடலுக்குள் வந்து பாம்பு மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

ஆனால் பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் மனித நினைவுகள் இழந்து விடுகின்றது. பாம்பின் நினைவு உயிராத்மாவில் அதிகமாகச் சேரும் நிலையில் அடுத்து பாம்பாகத் தான் பிறக்க முடியும். இந்த நிலைகளில் தான் வளர முடியும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அதே சமயத்தில் மாமிச உணவுகளை அதிகமாக உண்டு பழகி இருந்தால் அந்தந்த மணங்கள் உயிராத்மாவில் சேர்ந்த நிலைக்கொப்ப இன்று மனிதனாக இருந்தாலும் அடுத்து அந்த உடல்களிலே தான் உயிர் நம்மைக் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.

1.இதைப் போல் உடலை விட்டுப் பிரியும் சமயம் மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று
2.அத்தகைய சரீரங்களை மனிதன் பெறத் துவங்கி விட்டால்
3.மீண்டும் நரகலோகத்தைத் தான் சந்திக்க நேரும்.
4.ஆகவே இன்று மனித உடலில் வாழும் நிலைகள் சொர்க்கலோகம் என்ற உண்மையை உணர்தல் வேண்டும்.  

நம் உயிர் சொர்க்கவாசலாக இருக்கின்றது. “புருவ மத்தியிலிருந்து எண்ணி” விண்ணுலகம் செல்லும்போது சொர்க்கத்தைப் போய் அடைகின்றோம்.

அதாவது... கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து... உயிரின் நினைவு கொண்டு நாம் விண்ணின் ஆற்றலைப் பெறப்படும் போதுதான்
1.இது சொர்க்கவாசலாக அமைகின்றது
2.மனிதனின் உடலில் - புருவ மத்தியில்...!

ஆகவே இந்த உணர்வின் துணை கொண்டு நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டால் அங்கே சொர்க்கலோகத்தை அடைகின்றோம்... பிறவியில்லா நிலைகள் அடைகின்றோம்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இதைச் செயல்படுத்த வேண்டுமென்று பிரார்த்தித்து நீங்கள் அனைவரும் இதைப் பெற வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

இரண்டாவது... நாம் இந்த உடலில் நீடித்த நாள் வாழ்வதில்லை. ஆனால் இந்த உடலில் வாழும் காலத்திற்குள் அந்த அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அந்த அருள் ஞானத்தைப் பெருக்கித்தான் நாம் சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும்.

இந்த உடலைச் சொந்தமாக்கி... எந்த செல்வத்தையும் வைத்தோர் எவரும் இல்லை. செல்வத்தை வளர்த்துக் கொண்டோரும் செல்வத்துடன் பேயாகத்தான் காத்திருக்க முடிகின்றது.

இந்த உடலை விட்டு சென்ற பின்னும் அதன் மேல் ஆசை கொண்டு
1.இன்னொரு உடலுக்குள் சென்று
2.அதே செல்வத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்ற உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதன் வழியில் அந்த உடலையும் வீழ்த்தத்தான் முடியும்
4.தேடிய அந்தச் செல்வம் எவரையும் காப்பதில்லை.

ஆனால் அருள் செல்வத்தை வளர்த்து அருள் வழியைத் தனக்குள் பெற்று அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்கவாசல் என்ற நிலையை இந்த மனித உடலிலிருந்துதான் செல்ல முடியும்.

ஏனென்றால் நம் உயிரே கடவுளாக இருக்கின்றது. நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கும் தெய்வமாகவும் இருக்கின்றது. இதை எல்லாம் அறிந்து கொண்ட பின்  அருள் உணர்வின் தன்மையை விளைய வைத்து எந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றோமோ உயிர் அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

எனவே இதை எல்லாம் நாம் பெறுவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு)