ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2020

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தீமைகளை அகற்றலாம் என்று அறிந்த பின்னும் அதை எடுக்கவில்லை என்றால் அது நம் குற்றம் தான்


சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த ஒரு தீமையான உணர்வின் தன்மை இரத்தத்திலே கருவாகி அணுவாகும் போது அந்த அணுக்கள் உணர்ச்சியைத் தூண்டி தன் உணவுக்காக அது ஏங்குகின்றது.

அப்பொழுது நம்மை இயக்குவது யார்...?

நம்மை அறியாது நுகர்ந்த அத்தகைய உணர்வின் அணுக்கள் விளைந்த பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டி தன் இனமான உணர்வலைகளைக் காற்றிலிருந்து நுகர்கின்ரது. அதுவே நமக்கு மன நோயாகி உடல் நோயாக அதிகமாகப் பெருக்குகின்றது.

இதைப் போன்ற கொடுமையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் தீமைகளை அகற்றிய அகஸ்தியனின் அருள் உணர்வுகளை இங்கே உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

அகஸ்தியன் துருவனான்... திருமணமான பின் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றானார்கள். ஒளியின் சரீரம் பெற்றார்கள். துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

இதை நமது காவியத் தொகுப்புகள் கூறினாலும் காலத்தால் மறைந்து விட்டது. இப்பொழுது நமது குருநாதர் ஈஸ்வரபட்டரால் அறியும் பருவம் பெற்றோம்.

1.குரு வழியில் இதை எல்லாம் அறிந்த பின்னும்
2.நம் வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளைத் துடைக்கத் தவறினால்
3.இது நமது குற்றமே ஆகுமே தவிர வேறு யாருடைய குற்றமாகாது...!.

நல்ல குணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிட அதைக் கேட்டறிந்து நாம் உதவி செய்தாலும்... தெய்வப் பண்போடு நாம் நடந்தாலும்...
1.நாம் நுகர்ந்த தீமை என்ற உணர்வுகளைத் துடைக்காது நாம் சென்றோம் என்றால்
2.சுவை இருக்காது... உணர்வுகள் மாறும்... மனம் மாறும்... நம் நல்ல குணங்கள் வலிமை குறையும்.

நிலக் கடலைப் பருப்பு இருக்கின்றதென்றால் தோடை (தோல்) உறிக்காமல் உட்கொண்டால் அதனின் சுவை மாறும்.

ஆடு மாடுகள் அதை அப்படியே சாப்பிடும். ஆனால் நாம் கடலைப் பருப்பைப் பாதுகாக்கும் அந்தத் தோடுடன் உட்கொண்டால் நம் உடலுக்குள் கடும் தீமையே உருவாகின்றது.

தோலை அகற்ற வேண்டும் என்று தெரிந்தும் தெரியாத நிலைகளில் உட்கொண்டால் என்ன ஆகும்...?

அதைப் போன்று தான் “தீமை வருகிறது” என்று தெரிந்தும்
1.வாழ்க்கையில் அதை (கோபம் வேதனை சலிப்பு சங்கடம்) அகற்றத் தவறினால்
2.நமக்கு நாமே... உயிரான ஈசனை... அந்த உருவாக்குபவனை... அவமதிக்கின்றோம் என்று தான் பொருள்
3.ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலை மதிப்பதில்லை என்று தான் பொருள்
4.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை பாதுகாக்கத்  தவறுகின்றோம்...! என்ற நிலை தான் வரும்.

மனிதனின் வாழ்க்கையில் இப்படி மாறிக் கொண்டே உள்ளது.

உடல் நோயாகி... வேதனைப்பட்டு... மனித உணர்வுகள் சீர்குலைந்தால்... சீர்குலைத்து உணவாக உட்கொள்ளும் மிருக நிலையாக மீண்டும் உயிர் உருவாக்கிவிடும் என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.

ஆனால் இதைப் போன்ற நோய்களை எல்லாம் நீக்கியவன்... உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்... துருவ நட்சத்திரமாக உள்ளான் என்று
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் செவி வழி ஓதப்பட்டு
2.அந்த உணர்ச்சிகளை கண் கொண்டு உற்றுப் பார்க்கச் செய்து
3.தீமைகளை அகற்றும் வல்லமைப் பெற்ற அந்தச் சக்திகளை
4.ஊழ்வினையாக... வித்தாகப் பதிவு செய்கின்றோம்...!

உங்கள் வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமையைப் பார்க்க நேருகின்றதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டுமென்று அடுத்த கணமே உயிரான ஈசனிடம் வேண்டி புருவ மத்தியில் எண்ணி தீமையின் உணர்வுகள் அதிகம் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

உப்பு கைப்பாக இருப்பினும் குழம்புக்குள் அதைச் சிறுக்கப்படும்போது சுவையாகின்றது. காரம் உணர்ச்சியை அதிகமாகத் தூண்டினாலும் “ஆ...” என்று அலறச் செய்தாலும் குழம்புக்குள் அந்த காரத்தின் உணர்வுகளைச் சமப்படுத்தும்போது சுவையாக ஆகின்றது

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் கண்டாலும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உடலில் பெருக்கிக் கொண்டு
1.எந்தத் தீமையான செயலாக்கங்களும் வீரியமாகாது
2.வீரியமான அணுக்களாக உடலுக்குள் மாற்றிடாது
3.அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் மீண்டும் மீண்டும் நுகர்ந்து
4.அந்தத் தீமையான உணர்வுகளை நமக்குள் அடிமையாக்குதல் வேண்டும்.

இதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் கையில் அங்குசத்தைப் போட்டுக் காண்பித்து “அங்குசபாசவா...” என்று காட்டினார்கள் ஞானிகள். எத்தகைய தீமைகள் வந்தாலும் நாம்  அதை அடக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று உணர்த்துகின்றனர்.

உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சினை அடக்கி அந்த நஞ்சினை மலமாக நம் உடல் மாற்றுகின்றது.

இதைத் தான்... நஞ்சு அறிந்த பின் அதை அடக்க வல்லமை பெற்றது மனித ஆறாவது அறிவு என்று தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நமது குரு அருளைப் பெற வந்த நீங்கள் அவர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வைப் பெற அந்த உணர்வினை நுகரச் செய்து அந்த அணுவின் தன்மை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

இந்த உபதேசத்தின் வாயிலாக தீமையென்ற அணுக்களைத் தணியச் செய்து மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டச் செய்கிறோம். தீமையை அகற்றிடும் வல்லவர்களாக நீங்கள் ஆக வேண்டும்.

1.மேலும் மேலும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்று
2.மேலும் மேலும் பேரருள் என்ற நிலைகளைத் தனக்குள் பெற்று
3.மேலும் மேலும் பேரொளி என்ற உணர்வை உருவாக்கி
4.இந்த மனித உடலுக்குப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

அத்தகைய தருணத்தைத் தான் உருவாக்கிக் கொடுக்கின்றோம். இதை வளர்த்துக் கொள்ளும் பொறுப்பு உங்களுடையது...!