ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 28, 2020

சாமி நன்றாகச் சொல்கிறார்...! என்று தான் நினைக்கின்றார்களே தவிர சாமி சொன்னதைச் செய்தால்... நன்றாக இருப்போம் என்ற நிலை வரவில்லை


“சாமி (ஞானகுரு) நேற்று சொன்னதைத்தான் சொல்கின்றார்...” என்று சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள்.

இப்போது நான் சொல்வது எல்லாம் புதிதாக இருக்கும். ஆனால் சொன்னதையும் சொல்லியிருக்கின்றேன் இடை இடையில் கொஞ்சம் கொஞ்சம் புது உணர்வும் கொடுத்திருக்கின்றேன்.

எல்லாவற்றையும் சொல்லி விட்டால்...
1.சாமி நன்றாகச் சொல்கின்றார்...! என்று இதைப் பாடமாக (போற்றும் நிலை) வைத்துக் கொள்வார்கள்
2.உபதேசிப்பதைத் தான் எடுக்க வேண்டிதை விட்டுவிடுவார்கள்.

அடுத்தாற் போல் யாம் பேச ஆரம்பிக்கும்போதே...
1.நேற்றே இதைச் சாமி சொன்னாரே... சரி சொல்லட்டும்...! என்று கூறி
2.இதை விட்டுவிட்டு... ஞாபகத்தை வேறு பக்கம் வைத்துவிடுவார்கள்.

இது தான் மனிதனுடைய இயற்கையினுடைய நிலைகள் நமக்குள் வருவது.

ஆகையினால் தான் எதையுமே எடுக்கும் பொழுது இந்த “ரசனை வரவேண்டும்...” என்பதற்காக இதை உணர்த்துகின்றோம். ஏனென்றால் நாம் அல்ல.

நமக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ரசனைக்கு எடுக்கப்படும்போது... அது ஏங்கி அதை உணர்ந்து எடுக்கும்.

ஆனால் கொஞ்சம் ஈர்க்கும் தன்மை குறைந்துவிட்டது என்றால் நேற்று சாப்பிட்டது ருசி இல்லை... இன்றைக்குப் புதுப் புது ருசியாகத்தான் சாப்பிட வேண்டும் என்று அது இயக்கும். அதாவது புதிதாக இருந்தால் ருசியாக இருக்கும்.... அந்த உணர்வுகள் அதைத் தேடும்...!

1.ஏனென்றால் நமக்குள் எடுக்கக்கூடிய பல கோடி உணர்வுகள் ஒவ்வொன்றும் இப்படித் தூண்டச் செய்யும்.
2.அப்பொழுது நாம் எடுத்துக்கொண்ட உணர்விற்குத் தக்கவாறு தான் இது பெருகும்.

இதைப் போலத்தான் உங்கள் உடலிற்குள் எடுத்துக் கொண்ட உணர்விற்கு அந்த ஞானியர் உணர்வைப் புதிது புதிதாகச் சேர்க்கச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

ஒவ்வொரு காலத்திலும் உங்கள் உணர்வுகள் ஒவ்வொரு விதமாக அது உங்களுக்குள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
1.வீட்டில் சங்கடமாக இருப்பீர்கள் அந்த நேரத்தில் இங்கே இதைக் கேட்க வந்திருப்பீர்கள்.
2.நண்பனிடத்தில் பாசமாக... உயர்ந்த குணங்கள் கொண்டு இருப்பீர்கள் அதிலே கொஞ்சம் நஞ்சு கலந்திருக்கும். நஞ்சு கலந்தபின் சுவை கெட்டுப்போகி இருக்கும். அந்தச் சமயத்தில் இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மையைப் புகட்டியவுடனே அந்த ருசியின் தன்மையை மாற்றி உங்களுக்குள் சுவை கொண்டதாக மாற்றும்.

1.ஏனென்றால் சுவையற்றதாக ஆக்கும் அந்த உணர்வினை வென்றவன் ஞானி
2.அவனின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும்போது இணைக்கப்பட்டு
3.தீமையான உணர்வின் தன்மையை உங்களுக்குள் குறைக்கச் செய்யும்.

அதைக் குறைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் உபதேசிப்பதும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதியச் செய்வதும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர்... எனக்கு முதுகு வலி... இடுப்பு வலி... என்னால் உட்கார முடியவில்லை...! என்ற நிலைகள் இருந்தாலும் இதைக் கேட்ட பின் அது குறைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் கை கால் குடைச்சல் எல்லாம் குறைந்திருக்கும். கலக்கமாக இருப்பவருக்கும் ஓரளவுக்கு மன பலம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் பெற வேண்டுமென்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். ஒரு நிமிடத்தில் சொன்னால் “சாமி நன்றாகச் சொல்கின்றார்...!” என்கிறார்கள்.

ஆனால் மணிக்கணக்கில் சொன்னாலும் கூட...
1.என்னுடைய கஷ்டங்களெல்லாம் இவ்வாறு இருக்கின்றது அது எல்லாம் நிவர்த்தியாக வேண்டும்
2.மகரிஷிகளின் அருளால் எனக்குள் தெளிவாக வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்க மாட்டேன் என்கின்றீர்கள்.

என்ன செய்கின்றார்கள்...?

ஐயோ... நான் மூன்று வருடங்களாக நோயால் கஷ்டப்பட்டேன். அந்த டாக்டரிடம் சென்றேன்... இந்த டாக்டரிடம் சென்றேன்... எல்லாம் போகின்றேன்
1.என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கின்றது.
2.அதனால் தான் இங்கே வந்தேன் என்கிறார்கள்.

ஆக எதைக் கேட்கின்றார்கள்...? தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று கேட்பதற்காகத்தான் இங்கே வருகின்றார்கள்.

எல்லா இடத்திற்கும் போனேன்... நடக்கவில்லை. ஆனால் அதெல்லாம் நீங்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை.

எனக்கு ஒரே தலைவலி... எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து சிக்கல்... அதனால் ரொம்ப அவஸ்தைப்படுகின்றேன் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கின்றான். கொடுத்த கடனைத் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கின்றார்கள். போனால் சண்டைக்கு வந்துவிடுகின்றார்கள். இப்படித்தான் கேட்கிறார்கள்.

கடன் கொடுத்திருந்தால் அவர்களுக்கு நல்ல வருமானம் வரவேண்டும் என்னிடம் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கேளுங்கள்... கேளுங்கள்...! என்று சொல்கின்றேன்.

எத்தனை முறை சொன்னாலும் அடுத்தாற்படி கேட்டுப் பாருங்கள் மீண்டும் கஷ்டத்தைத் தான் வந்து கேட்பார்கள்.

காரணம் நாம் அல்ல...! நமக்குள் விளைய வைத்த உணர்வுகள் அந்த நினைவலைகளை நமக்குள் ஈர்க்கின்றது. அதை மாற்ற முடியவில்லை.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்காகப் பேசி
1.உங்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரவேண்டும்
2.அந்த மகிழ்ச்சியான நல்ல மூச்சலைகள் இங்கே படர வேண்டும்
3.அதன் மூலம் எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும்...! என்று சொல்கிறேன்.