ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2020

சாமியையும் குருவையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை…!


இந்த மனித வாழ்க்கையில் எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாவதில்லை.
1.அந்த அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால்
2.இருளை வென்று உணர்வை ஒளியாக்கும் தன்மை பெற முடியும்.
3.அதைத் தான் இந்த மனித வாழ்க்கையில் சொந்தமாக்க வேண்டும்.

ஏனென்றால் எந்த நிலைகளீல் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தமாவதில்லை உடலால் சம்பாரித்த செல்வமும் நின்றதில்லை.

கோடிக் கோடி செல்வம் பெற்றிருந்தாலும்… பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்துச் சுகமாக வாழ்வேன்…! என்றாலும் அப்படிப்பட்ட அரசன் எவனும் இன்று இருந்ததில்லை. அவன் பேய் மனமாகத் தான் சென்றான்.... அவன் உணர்வுகளும் பேய் மனமாக மாறியது…!

அவனைப் போன்ற ஆசையைப் பின்பற்றியவர்கள் அனைவரும் அவன் வழியிலே சென்று மத வெறி கொண்டு மனிதனை மனிதனே அடித்துக் கொன்று… அதைக் கண்டு மகிழும் நிலையே இன்று உருவாகி விட்டது.

அரசன் அவன் எதிரிகளைக் கொன்று குவித்தான். பல வகையிலும் மதம் என்ற பேரால் பேதங்களை அவன் உருவாக்கினான்.

அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனம் என்ற நிலைகள் பல இனங்களாக வளர்ந்து விட்டது. அவன் அவன் “தன் இனமே பெரிது…!” என்று மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான். அதனால் பழி தீர்க்கும் உணர்வுகளே வளர்ந்தது.

மனிதனுக்கு மனிதன் உருக்குலையச் செய்யும் நிலைகளும்… சிந்தித்து வாழும் நிலைகளும் செயல் இழந்து… சிந்தனையற்ற செயலாகவே நாம் இன்று வாழ்ந்து கொண்டுள்ளோம்.

சிந்தனையற்ற செயலை நாம் நுகரும் பொழுது
1.நஞ்சு கொண்ட உணர்வுகள் நமக்குள் வளர்ந்து
2.நஞ்சை உணவாக உட்கொள்ளும் நிலை வளர்ந்து
3.நஞ்சின் செயலாக்கங்களாகச் செயல்படும் நிலையும்
4.நஞ்சு கொண்ட உணர்வையே வளர்த்திடும் நிலையே வளர்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட வேண்டும்…! என்று எமது குரு எனக்குள் பதிவு செய்திருந்தாலும் அவரை நமது குரு என்ற நிலைகளில் எண்ணி ஒவ்வொருவரும் நாம் வாழ்தல் வேண்டும்.

1.முன்பு எமது குருவாக இருந்தார்…
2.இந்த உணர்வின் தன்மை நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் வழி சென்றால்
3.நமது குரு என்ற நிலையில் ஒன்று சேர்ந்து வாழும் நிலை வரும்.
4.சாமியையும் குருவையும் பிரித்து எண்ண வேண்டியதில்லை (இது முக்கியம்)
5.அருள் ஒளியின் தன்மை கொண்டு “நமது குரு…” என்ற நிலைகளில்
6.நாம் எல்லாம் ஒன்று…! என்ற நிலையில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

குரு அருள் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும்… அருள் ஞானம் பெறுதல் வேண்டும்…! என்ற உணர்வை நாம் தியானித்து வளர்த்தல் வேண்டும்.

பகைமை என்ற உணர்வுகள் வந்தாலும் அது நமக்குள் வளராது தடுத்து அருள் ஒளியை நமக்குள் பெற்று
1.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும் என்ற உணர்வை ஓங்கச் செய்து
2.அருள் ஞானத்தை வளர்த்திடும் புவியாக நாம் மாற்ற வேண்டும்.

அருள் ஞானிகள் பிறந்த இந்தப் பூமியில்… அருள் ஒளியின் சுடர்களை எண்ணி…
1.இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம்
2.ஒவ்வொரு மனிதனின் மனமும் மாறி
3.அருள் ஒளிச் சுடராக மாறும் நிலைக்கு வளர வேண்டும்.

நாம் எல்லாம் உலகுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வளர வேண்டும்…!