ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 22, 2020

நம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி


பிறருடைய வேதனையான உணர்வை நாம் சுவாசித்தால்  உடலுக்குள் வளராதபடி அதைப் பிரித்திடல் வேண்டும். பிரிக்கக்கூடிய சக்தி அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உணர்வினைச் செலுத்த வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். இப்படி நுகர்வது அனைத்துமே முதலில் நம் இரத்த நாளங்களுக்குள் தான் சேர்கின்றது.

தீமையான உணர்வின் வளர்ச்சி கொண்ட நிலையில் உறுப்புகள் செயலிழந்திருந்தாலும் இதைக் கண்ட பின் அந்த உணர்வுக்குள் கிளர்ந்து எழுகின்றது.

அறியாத நிலைகளில் நமக்குள் அப்படிப் பதிவான தீமைகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
1.அப்பொழுது காற்றிலிருக்கும் தீமைகளை அதிகமாக நுகர நேருகின்றது.
2.அந்த உணர்ச்சிகளை நாம் எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ உடலும் மாறுபடுகின்றது… சொல்லும் செயலும் மாறுபடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால் மண்ணிலே ஒரு நல்ல பொருள் விழுந்தால் உடனே நீரை விட்டு அதைக் கழுவிக் கொள்கின்றோம். இதைப் போல் பிறருடைய தீமையின் உணர்வுகள் நம் உடலில் இரத்தங்களில் கலந்தால் அதன் வீரியத்தைத் தணிக்க “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இங்கே உபதேசிக்கும் பொழுது
1.உங்கள் கண்கள் என்னை (ஞானகுரு) உற்றுப் பார்க்கின்றது.
2.உபதேசிக்கும் சொல்லின் உணர்வுகள் அந்தச் செவியிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவலைகளைப் பதிவாக்குகின்றது.
4.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிடும் அலைகளை ஆன்மாவாக மாற்றுகின்றது.
5.மாற்றிய உணர்வுகள் உயிரிலே படுகின்றது… இந்த உணர்ச்சிகளை உடலிலே பரவச் செய்கின்றது…. இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இந்த உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… இரத்த நாளங்களில் கலக்கக் கலக்க…
1.உங்கள் உடலில் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு
2.இந்த இரத்தநாளங்களின் வழியாக உயர்ந்த உணர்வுகள் போகும் பொழுது அதனுடைய தணிவுகள் ஏற்படுகின்றது.

நல்ல குணங்கள் இருக்கப்படும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அது இரத்தத்தில் சுழலப்படும் பொழுது நல்ல அணுக்களுடைய நிலைகள் அதை நுகர மறுக்கின்றது.

அப்பொழுது இயக்கச் சக்தி குறைகின்றது…. உடல் சோர்வடைகின்றது. இப்படிச் சோர்வடையப்படும் பொழுது நல்லதை நினைக்கும் திறன் இழக்கப்படுகின்றது,

இப்படிச் சோர்வடையும் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் உணர்வின் தன்மை நாளடைவில் அதிலே பழகி விட்டால் எது எடுத்தாலும் அந்தச் சோர்வு தான் வரும்.

மட்டன் சாப்பிடாதவர்கள் இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் பிறகு “கொஞ்சம் மட்டும் சாப்பிடலாம்…” என்ற உணர்வு தோன்றும். ஒரு காயை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வார்கள். பின் அதைச் சுவையாக்கி விட்டால் சரி… இப்பொழுது சாப்பிடலாம்…! என்பார்கள்.

இதைப் போன்று இந்த உணர்வுகள்…
1.எதனின் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உனர்வின் தன்மை
2.அங்கே அந்த உணர்ச்சிகளைத் தூண்டத்தான் செய்யும்.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை அதை அடக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் பலவித கோணங்களில் உங்களுக்கு இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.

தீமைகள் எப்படிச் சாடுகின்றது..? தீமைகளை அகற்றும் வழி என்ன…? என்பதைத் தான் கலவையாக்கி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துப் பதிவாக்குகின்றோம்.

1.தீமைகளை அகற்றிய உணர்வைக் கலந்தே உங்களுக்குள் கொடுத்திருப்பதனால்
2.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது
3.உங்களுக்குள் எத்தகைய பகைமையும் தீமையும் துன்பமும் வளராது தடுக்க இது உதவும்.