ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2020

என்ன வாழ்க்கை இது…? என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்…


காட்டிற்குள் சென்று எத்தனையோ சிரமங்கள் பட்டேன்… துன்பங்களும் பட்டேன்...! அங்கே குருநாதர் இயற்கையின் உண்மைகளை எல்லாம் அறியும்படிச் செய்தார்.

அதை அறிந்து… அந்த உணர்வைப் பதிவு செய்து… அந்த உணர்வை வளர்த்துக் கொண்டேன். அப்படிப் பெற்ற ஞானிகளின் உணர்வுகளைத்தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இதை எல்லாம் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழியில் இப்பொழுது முன்னுக்கு வந்தாலும் “பற்றுள்ளவர்கள்” என்ன செய்கின்றார்கள்…?

இரவு நேரத்திலே சாமி…! எனக்குத் தலை வலிக்கிறேதே… உடல் வலிக்கிறதே… நெஞ்சு வலிக்கிறதே… என்னைக் காப்பாற்ற மாட்டாயா…? என்று தான் நினைக்கின்றார்கள்.

இப்படிச் சாமியைத்தான் (ஞானகுரு) நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெறவேண்டும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களிலே கலக்க வேண்டும்
3.தீமைகளை வென்றிடும் அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.இப்படி எண்ணும்படிப் பல முறை நான் சொன்னாலும் அப்படி எண்ணவே மாட்டேன் என்கிறார்கள்.

நான் தான் பதிவு செய்தேன் என்று சாமியைத்தான் நினைக்கின்றார்கள். இப்படி ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து நினைத்தால் அந்த உணர்வு தாக்கினால் எப்படி இருக்கும்…? அந்த ஆயிரம் உணர்வுகள் என்னைத் தாக்கும் பொழுது
1.அது அத்தனையும் நான் சமாளிக்க வேண்டும்
2.என்னையும் காக்க வேண்டும்.. உங்களுக்கும் அந்த அருள் சக்தி கொடுக்க வேண்டும்.
3.குருநாதர் எனக்குக் கடுமையான வேலையைத்தான் கொடுத்தார்.

ஆக… என்னைப் பாதுகாக்க குருநாதர் அருளைக் கொடுத்தார்… அதை வளர்த்து என்னைக் காத்துக் கொள்கின்றேன்.

அதே மாதிரி உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு என்றைக்குமே உறுதுணையாக வரும். அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெறமுடியும்.
1.குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்\
2.அதைக் கிடைக்கும்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
3.சாமி ஒன்றும் கொடுக்கவில்லை என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால் இந்த வாழ்க்கை என்ன…? என்று அறிந்து கொண்ட பின் நாம் இனி எப்படி வாழ வேண்டும்…? என்று உணர்ந்து.. இந்த உடலுக்குப் பின் “பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்..” என்று அதைத் தான் பெற முயற்சிக்க வேண்டும்.

இன்னொரு பிறவி என்று மீண்டும் இங்கே வந்தாலோ நரகலோகம் தான் செல்கிறோம். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று இருப்பது அந்த நிலை தான்…!

1.மனித உடல் பெற்றாலே “சொர்க்கலோகம்” என்று சொல்வார்கள்.
2.ஆனால் அது பண்டைய காலமாகப் போய்விட்டது (இன்று நரகலோகமாகத்தான் உள்ளது)

நம் உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனையை உருவாக்கும் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலேயும் இன்றூ நமக்குள் போர் முறைகளே வருகின்றது.

நல்ல குணங்களுக்கும் தீமையான குணங்களுக்கும் மற்றவர்கள் செய்யும் உணர்வை நமக்குள் நுகர்ந்த பின் பெரிய போரே நடக்கின்றது.
1.இந்தப் போரினால் மனக்கலக்கங்கள் வருகின்றது.
2.உடல் நோய்கள் வருகின்றது. சிந்திக்கும் திறன் இழக்கின்றது,

அதன் வழியில் நம் உடலுக்குள் இருக்கும் நாம் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி நமக்குள் உணர்வு இயங்கி நம்மை அந்த வழிக்கே அழைத்துச் செல்லும்.

கடைசியில்… “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் இந்த உடலையே அழித்திடும் நிலைக்கும் திருப்பி விடுகின்றது.

இது எல்லாம் நாம் செய்யவில்லை, நாம் நுகரும் உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் எது உணர்வோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குகின்றது… நம் உயிரே தான்…!

ஆனால் அருள் ஒளி பெறவேண்டும் என்றும்… இருளை அகற்ற வேண்டும் என்றும்… அருள் ஞானத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதித்த பின்
1.இதை மீண்டும் மீண்டும் நினைவுக் கொண்டு வந்து
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.இந்த உணர்வின் தன்மை வாழ்க்கையில் வரும் போரினை அடக்கும்.
4.எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலைகளுக்குக் கொண்டு வர முடியும்.

இந்த உணர்வு வலிமை பெற்றுவிட்டால் நாம் எந்த அருள் உணர்வை வலுப் பெற்றோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் நம்மைச் “சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்…!”