இப்பொழுது தியான வழிகளில் வளர்ந்த நீங்கள் நன்மையைத்தான் தேடுகின்றீர்கள். ஆனால்,
கூட்டாக தியானிக்கும் நிலையில் மற்றவர்கள் தொடர்ந்து வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
நல்லதைச் சொல்கிறோம் ஆனால் அவர்கள்
வரவில்லை என்று வேதனைப்படுவீர்கள். இத்தனை நாள் செய்தோம் என்ற நிலைகளை இதற்கு மாறாக வேதனையைத்தான் வளர்க்க முடிகின்றது.
அப்பொழுது எப்படிச் செய்யவேண்டும்?
பாலிலே பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைப் போட்டால் என்ன செய்யும்? குடிப்பவர்களுக்கு
மயக்கம் வரத்தான் செய்யும். அதைப் போல நல்ல மனதில் வேதனையை நுகர நேர்ந்தால் அடுத்தவர்களிடம்
சொன்னால் என்ன ஆகும்?
உங்கள் மேல் வெறுப்புதான் வருமே தவிர அன்பின் தன்மை வராது. ஆகவே, நாம் போகும்
(அருள்ஞான) பாதையில் அனைவரையும் அரவணைக்கும்
தன்மை தான் வரவேண்டும்.
நல்லதை எண்ணுகிறோம், மற்றவர்களுக்கு இதைச் சொல்கிறோம், “மற்றவர்கள்
இதைப் பின்பற்றவில்லையே.., இப்படி ஆகிவிட்டதே..,” என்ற வேதனையுடன் அவர்களிடம்
சொல்லும்போது ஏற்க மறுக்கும்.
“இவர் என்ன..? சும்மா இப்படியே
சொல்லிக் கொண்டிருக்கிறார்..,” என்று உங்கள் மேல் வெறுப்புதான் வரும். அவர்களும் தியானத்தில்
கலந்து கொள்ள வேண்டும், ஒன்று சேர்த்து வரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.
சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியாது.
ஆன்மீகம் என்பது நாம் வலிமை கொண்ட உணர்வுகளைப் பாய்ச்சி அவர்கள்
உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும்.
இதைத்தான் நாம் செய்ய வேண்டுமே தவிர, உதாரணமாக நேருக்கு நேர் உங்கள் பையனிடம்
இந்த மாதிரித் தப்பு செய்தாய் என்று சொன்னால் என்ன ஆகும்?
அவன் கேட்க மாட்டான்.
அதற்குப் பதில் பையன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவன் நன்கு தெளிந்து
வாழும் நிலை பெறவேண்டும், அருள்ஞானம் அவன் பெறவேண்டும் என்று கூட்டிக் கொண்டால் “தம்பி இதைப்
பார்த்துச் செய்..,” என்று சொல்லத் தோன்றும்.
இல்லை என்றால் என்ன செய்வோம்? “டேய்.., என்னடா செய்தாய்?
இப்படியே நீ தப்புப் பண்ணிக் கொண்டேதான் வருகிறாய்” என்று சொல்லச் செய்யும்.
அப்பொழுது அதனுடைய அர்த்தம் என்ன ஆகிறது?
இதைப் போல வரப்படும்போது, ஏன்? இத்தனை பேர் இருக்கும்போது நீங்கள் இப்படியே
போய்க் கொண்டிருக்கின்றீர்கள், சாமி (ஞானகுரு) என்ன சொன்னார்? அப்படி என்று இதையும் நாம் கலந்துவிடுகின்றோம்.
நல்ல சக்தியாக இருக்கின்றதே, இந்த மாதிரிச் செய்கின்றார்கள். நாங்கள் ஐம்பது
பேர் தியானம் இருந்தோம், இப்படிப் போய்விட்டார்களே என்ற இந்த எண்ணத்தை எண்ணினால் என்ன
செய்யும்?
இப்படி எடுக்கும் இந்த உணர்வுகள் விஷத்தின் தன்மை அதிகமாகும்போது நாம் எடுக்கும்
மார்க்கங்களைத் தவறவிட்டுப் பெற முடியாத நிலை ஆகிவிடும்.
உயர்ந்த பண்புகளில் வேதனை என்ற உணர்வுகள் கலக்கும்போது நம் உடலும் பலவீனம் அடைகின்றது.
கண்ணாடி நன்றாகத் தான் தெரிகின்றது. ஆனால், மேலே தூசி படிந்துவிட்டால் என்ன
ஆகும்? சரியாகத் தெரியாது. அப்பொழுது அதில் படிந்திருக்கும் அழுக்கைத் துடைக்க வேண்டுமல்லவா.
மற்றவர்கள் தியானத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற எண்ணத்திற்கே
நாம் போக வேண்டியதில்லை.
தியானத்தில் கலந்து கொள்ளதாவர்களுக்கு
ஞானம் வரவேண்டும்,
ஒன்றுபட்டு வாழும் தன்மை வரவேண்டும்,
குரு வழியில் வாழவேண்டும்,
குரு வழியில் வரவேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
அந்த வேதனை உங்களுக்கு வராது.
அறியாத நிலைகளில் அவர்கள் இருந்தாலும் நாம் இந்த அருள் சக்திகளை எடுத்து அவர்களும்
அறியும் பருவம் வரவேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்ச வேண்டும். நிச்சயம் அவர்களும் வருவார்கள்.