ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2015

மரண பயத்தின் உணர்வு நல்ல குணங்களை எப்படி அடக்குகிறது – வேதங்கள் கூறுகின்றன

உதாரணமாக ஒரு பாம்பை மனிதன் பார்க்கும்போது பாம்பின் விஷத்தன்மையை அறிந்த மனிதன் பாம்பு தன்னைக் கடித்தால் இறந்துவிடுவோம் என்ற பய உணர்வுகளை நுகர்கின்றான்.

பாம்பு “ரிக்.
பாம்பிலிருந்து வெளிப்படும் உணர்வின் மணம் “சாம

நமது கண் கண்ணன் என்ற கருவிழியான ருக்மணி பாம்பை நம்முள் படமாக்குகின்றது. கருவிழியுடன் இணைந்த காந்தப் புலனான சத்தியபாமா பாம்பின் உணர்வுகளை உயிரில் மோதச் செய்து “பாம்பு உன்னைத் தீண்டினால் நீ இறந்துவிடுவாய் என்ற மரண பயத்தைத்த் தோற்றுவிக்கிறது.

“கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருக்ஷேத்திரப் போர்” எனும் நிலையாக
உயிரில் பாம்பின் உணர்வுகள் மோதும்போது
உயிரானது இந்த உடலில் உணர்ச்ச்சிகளைத் தூண்டுகிறது.
மரண பயத்தை ஊட்டுகிறது.

இந்த விஷத்தின் எண்ணங்கள் உடலிலுள்ள அனைத்து உணர்வுகளிலும் பாய்ச்சப்பட்டு இந்த உடலைப் பாதுகாப்பான நிலைகளுக்கு அழைத்துச் செல்லும் எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது.

அப்பொழுது இந்தக் கண்கள் உடலைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அல்லது பாதுகாப்பான செயல்களைச் செய்விக்கின்றது. ஒரு தடியையோ அல்லது கல்லையோ எடுத்து அடிக்கச் செய்கிறது.

இதைத்தான் சாஸ்திரங்கள் கண்ணன் சங்கநாதம் செய்தபின் “குருக்ஷேத்திரப் போர் என்று தெளிவாக்குகின்றன.

ஒவ்வொரு நொடிக்கும் எவ்வளவு போர்கள் நடக்கின்றது என்றும் அந்த உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகிறது என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றன.

பாம்பின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் “சாம பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் நாம் என்ன செய்வோம்? சோகமான கீதத்தை, “ஐயோ.., வலிக்கின்றதே.., என்ற வேதனையை வெளிப்படுத்துவோம்.

உடல் வலி ஏற்பட்டு அதனின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும்போது நமது நல்ல அணுக்களில் இந்தத் தீமையின் நிலைகள் படர்ந்துவிடுகின்றன. இது “அதர்வண.

இந்த வேதனையின் உணர்வுகள் நமது நல்ல குணங்களில் ஊடுருவிய பின் மரண பயம் என்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கிறது. அதே சமயம் பாம்பு நம்மைத் தீண்டவில்லையென்றாலும் கூட நமது கருவிழி பாம்பின் உணர்வை நம்முள் பதிவாக்கிவிடுகிறது.
நம்முள் மரண பயத்தைத் தூண்டி
விஷத்தின் வித்தாக விளைந்துவிடுகிறது.

விவசாயத்துறையில் பல அணு செல்களை இணைத்துப் புது வித்துகளை உருவாக்குவது போன்று நம்முள் பல உணர்வுகளை சேர்த்து ஒரு வித்தாக விளைந்துவிடுகின்றது.

விஷத்தின் தன்மை கொண்ட உணர்வுகள் நம்முள் வித்தாக விளைந்தபின் ஒரு கயிறைக் கண்டால்கூட போதும், “ஐயோ.., பாம்பு வருகிறது” என்போம். உருண்டையாக இருந்தால் போதும் “பாம்பு வருகிறது..,” என்போம்.

உதாரணமாக ஒரு சமயம் பழனியில் குப்பைத் தொட்டிக்கு அருகில் வாழை நார் ஒன்று நல்ல பாம்பு படமெடுத்தது போன்று இருந்தது. குருநாதர் சொன்ன வேலை இது.

சாயங்காலம், இருட்டான வேளையில் மறைவில் இருந்து கொண்டு “ஐயோ.., நல்ல பாம்பு..,” என்று சொல். மக்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி ஒதுங்குகிறார்கள் பார் என்றார் குருநாதர்.

யாமும் குருநாதர் சொன்னபடி சொல்லிவிட்டு அங்கே நின்று கொண்டு “ஐயோ பாம்பு, தடியை எடுங்கள்..,” என்று சொன்னதும் அங்கே கூட்டம் சூழ்ந்துகொண்டது.

அந்த வாழை நார் காற்றுக்கு இலேசாக ஆடிக் கொண்டிருந்ததால் கூட்டத்தில் உள்ளோர் அதை பாம்பு என்றே கருதினார்கள்.

கூட்டத்தில் இருந்த ஒருவன் தடியை எடுத்து அதை அடித்தான். வாழை நார் மேலே போய்விட்டது. ஆனால், கூட்டத்திலிருந்த அனைவரும் “பாம்பு எங்கே போனது?” என்று தேடுகின்றார்கள்.

விஷத்தின் எண்ணங்கள் அது உணர்வில் படும்போது எந்த நிலையைச் செய்கிறது பார் என்பதை குருநாதர் அங்கே நேரடியாகக் காட்டினார்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்றுரைக்கப்பட்டது.
பாம்பு என்று நினைத்தோம்.
வருகிறவர்களெல்லாம் அது பாம்புதான்.., என்கிறார்கள்.

அதைத் தடி கொண்டு அடித்தவுடன் வாழை மட்டை பறந்து போனது. ஆனால், கூட்டத்தில் “பாம்பு இங்கே வந்துவிட்டது, அங்கே போய்விட்டது” என்று தேடுகின்றார்கள்.

மனிதருடைய எண்ணங்கள் எப்படி இயங்குகிறது பார் என்று உணர்த்தினார் குருநாதர். ஆக, எண்ணங்களின் உணர்ச்சியால் மரண பயம் ஏற்படுகிறது.

மரண பயம் கொண்ட உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அது நமது நல்ல குணங்களை அடக்குகிறது. இது “அதர்வண”.

இந்த உணர்வின் தன்மை அங்கே இணைக்கப்படும்போது “யஜூர்” ஒரு வித்தாக உருவாக்கப்படுகிறது.

அப்பொழுது இவனுடையை நினைவாற்றல் பாம்பைப் பார்த்தாலும் பாம்பு என்ற நிலைகள் கொண்டாலும் அந்த உணர்வின் தன்மைகள் அதனின் உணர்வின் ஒலியலைகள அணுக்களாக மாற்றியமைக்கின்றது.

“ஓம் நமச்சிவாய” நாம் எண்ணிய உணர்வுகளை அணுக்களாக மாற்றுகின்றது. அணுவின் மலம் நம் உடலாகின்றது.

இப்படி நம்மையறியாமலே பயந்த உணர்வுகள் வந்தால், “இதோ.., பாம்பு வருகிறது, வந்துவிட்டது..,” என்று சொன்னால் போதும். அடுத்ததாக ஏதாவது ஒன்று “சுரீர்..,” என்று குத்தினால் “ஐயோ.., பாம்பு கொத்திவிட்டது” என்போம்.

சாதாரணமாக சில நேரங்களில் வேதனை என்ற உணர்வு வந்து உடம்பில் “பளீர்” என்று வலிக்கும். “ஐயோ.. பாம்பு கடித்துவிட்டதே” என்று சத்தம் போடுவார்கள்.

இவையெல்லாம் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒரு குச்சியோ அல்லது ஒரு துணியோ பட்டுவிட்டால் துள்ளிக் குதிப்பார்கள்.
உணர்வின் நினைவாற்றல் பெருகி
அதன் எண்ணமாகவே அவர்களை இயக்குகிறது.

இப்படி வளர்ந்த மனிதனிடத்தில் அந்த உணர்வின் தன்மை “யஜூர்” ஒரு வித்தாகிவிடுகின்றது.

இதே வித்தின் தன்மை அந்த உடலுக்குள் உருவான பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த மனிதன் இறந்தால் இந்த எண்ணங்களானது உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாவைப் பாம்பினத்திற்கே அழைத்துச் செல்கின்றது என்பதை வேதங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

நாம் நுகரும் உணர்வுகள் எப்படி நம்மை இயக்குகிறது?
உயிர் அதை எப்படி அதை உருவாக்குகிறது?
விளைந்த பின் என்ன ஆகிறது?
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

உயிர் அதை நமக்குள் உருவாக்கும். இந்த உடலுக்குப்பின் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து பேரின்ப பெருவாழ்வு வாழமுடியும்.