ஒரு சமயம் கணேஷ் பீடிக்கட்டு ஒன்றை முழுவதுமாகக் கொடுத்து
என்னைக் (ஞானகுரு) குடிக்கச் சொன்னார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
“சாமி.., இது தாங்காது..,” என்றேன்.
அதற்கு குருநாதர், “கணேசன்டா.., கணங்களுக்கெல்லாம்
ஈசன் கணேசன்டா.., எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்டா..,” என்றார்.
அவர் இப்படிச் சொன்னதும் நான் மற்றவர்கள் எண்ணுவது போல் கோயிலில் காட்டப்பட்டுள்ள
விநாயகரைத்தான் சொல்கிறார் என்றுதான் முதலில் எண்ணினேன்.
பிறகுதான் நமக்குள் உள் நின்று இயக்கும் உயிரைப் பற்றி குருநாதர் உணர்த்துகிறார் என்ற நிலையை அறிய முடிந்தது.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் நுகரும் உணர்வுகளை, அந்த உணர்ச்சிகளை
இயக்குவது உயிரின் வேலை.
எதை நுகர்கின்றாயோ அதை அணுவாக உருவாக்குவது,
அணுவுக்கு அதே இன உணர்வை உணவாகக் கொடுத்து அதை வளர்ப்பது,
வளர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
அடுத்த உடலை உருவாக்குவது உயிரின் வேலை.
ஆகவே, அவன் பார்த்துக் கொள்வான் என்று உயிரின்
இயக்கத்தை குருநாதர் தெளிவாக எமக்கு உணர்த்தினார்.
நாம் துருவ நட்சத்திரம், சப்தரிஷி
மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால், அதை
நுகர்ந்தால் அதை அவன் பார்த்துக் கொள்வான்.
அதாவது அந்த ஒளியான உணர்வுகளை
உருவாக்கி அந்த சப்தரிஷி மண்டலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வான் நமது
உயிர் என்று
காட்டுகின்றார் குருநாதர்.
இவையெல்லாம் குருநாதர் பேருண்மைகளை நாம்
அறிய வெளிப்படுத்தும் பரிபாஷைகள்.
உயிரான
ஈசனை வேண்டி,
(புருவ
மத்தியில்) உயிருடன் ஒன்றி
பொறுப்பை அவனிடம் ஒப்படைக்க
வேண்டும்.
உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின்
உணர்வாக ஆக்க வேண்டும். நம் வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உயிருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று
“அவனுடன்
ஒன்றி
அவனாக
ஆகும்” நிலைக்குத்தான்
குருநாதர் எமக்கு இந்த அனுபவத்தைக்
கொடுத்தார்.
ஆக, நம்மை ஆள்வதும்,
நம்மை உருவாக்குவதும்,
நம்மை இயக்கிக் கொண்டிருப்பதும்
நம்மைக் காப்பதும் நம் உயிரே என்பதை
நினைவில் கொண்டு
பேரருள் பெற்று, பேரொளியாக நீங்கள்
அனைவரும் ஆகவேண்டும்.
நீங்கள் அனைவரும் இந்த உலகுக்கு எடுத்துகாட்டாக
வரவேண்டும்.