ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2015

தெய்வீகக் குடும்பமாக உருவாகுங்கள்

ஒரு குடும்பத்தில் கர்ப்பமாகிவிட்டால் ஒரு புனித நாள் என்று வைத்து அருள் ஒளி பெறக் கூடிய அந்த ஞானக் குழந்தை வளரவேண்டும், உலகைக் காத்திடும் அருள்ஞானி வளரவேண்டும் என்று கூட்டுத் தியானம் அவசியம் இருக்க வேண்டும்.

கர்ப்பமான அந்தத் தாய் அருள் உணர்வு பெறவேண்டும்.
உலக ஞானம் பெறும் தகுதி கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும்,
நஞ்சை வென்றிடும் அருளாற்றல் பெறவேண்டும்,
அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் அனைத்தும் குழந்தை பெறவேண்டும்,
அகஸ்தியன் கண்ட உண்மைகளை உலகுக்கு அவன் எடுத்துக் காட்டிட வேண்டும் என்று நாம் அனைவரும் சேர்ந்து தியானித்திடல் வேண்டும்.

இப்படித் தியானித்து அருள்ஞானக் குழந்தைகளை நீங்கள் உருவாக்கிடல் வேண்டும்.

குழந்தை பிறந்தபின் தாய் தந்தையர் எப்படித் தியானிக்க வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படரவேண்டும். உலக ஞானம் பெறவேண்டும், கல்வியில் உயர்ந்த தரமும் சிறந்த ஞானமும் பெறவேண்டும், கருத்தறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகவேண்டும்.

அதே மாதிரி குழந்தைகள் எப்படித் தியானிக்க வேண்டும்?

உயிரை எண்ணி அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் தாயின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவது மிகவும் எளிதாக இருக்கும்.

ஏனென்றால், நம் அம்மா அப்பா தான் கடவுள்.
நம்மை தெய்வமாக இருந்து காப்பாற்றினார்கள்,
குருவாக இருந்து நல்ல வழிகளைச் சொன்னார்கள்.

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் அம்மா அப்பா உடல் முழுவதும் படரவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எங்களுக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மாறவேண்டும்.

மலரைப் போல மணம் பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி எங்கள் தாய் தந்தை பெறவேண்டும். அவர்களுடைய அருளாசி என்றென்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று குழந்தைகள் இப்படித் தியானிக்க வேண்டும்.

ஒரு குடும்பம் என்கிறபோது நம் உடலுக்குள் பலருடைய உணர்வுகள் உண்டு. எவரிடத்திலும் நாம் பிரிந்து வாழவில்லை. ஒருவன் திட்டினான் என்றால் அவனை எண்ணும்போது அவன் உணர்வு இணைந்தால் நமக்குள் போர் செய்யும் உணர்வுகள் இணைந்து உடலில் வலியாக வருகிறது.

அதே சமயத்தில் நண்பன் என்று வரும்போது நல்ல நேரத்தில் உதவி செய்தான் என்று எண்ணும்போது நமக்குள் இணைந்து வாழும் தன்மை வருகிறது.

ஆகவே, நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வு ஒத்துவரவில்லை என்றால்தான் இங்கே சண்டை வருகிறது.

கோப்பப்படும் உணர்வு அதிகமானால் நமக்குள் இரத்தக் கொதிப்பாகும். இடுப்பு வலி, தலை வலி, மேல் வலி இதெல்லாம் நம் உணர்வுகள் எதிர் நிலையாகும் பொழுதுதான் வரும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்த்து இணக்கமான நிலையில் கூட்டுக் குடுமப தியானம் இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தாய் தந்தையர் தன் குழந்தைகள் பெறவேண்டும் என்றும் அதே போன்று குழந்தைகள் தன் தாய் தந்தையருக்கு அந்தச் சக்தி பெறவேண்டும் என்று  தியானிக்க வேண்டும்.

இப்படி செய்தால் குடும்பப் பற்று அதிகமாக வரும். பகைமை உணர்வை மாற்றும் சக்தியும் கிடைக்கும். தெய்வீகக் குடும்பமாக வாழ்ந்திட வளர்ந்திட முடியும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். இதில் ஒன்றும் கஷ்டம் இல்லை.