ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2015

உங்கள் பார்வையாலேயே தீமைகளை அகற்றிடும் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்

தியான வழியில் உள்ள நாம் ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது நமக்கு உணர்த்துகின்றது. அப்பொழுது தீமை என்று தெரிந்தால் அதை நீக்குவதற்கு வழி என்ன? என்ற நிலைகளை நாம் எடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நமக்குள் தீமைகள் சேராது தடுக்கும். அவர்களைத் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.

அந்தச் சொல்லினை அவர்கள் கேட்டுணர்ந்து பதிவு செய்தால் அதைத் திருப்பி எண்ணினார்கள் என்றால் அவர்களின் தீமையை அவர்கள் போக்கிக கொள்ள முடியும்.

இப்பொழுது நம் அருகிலே வரும் ஒருவர் ஏதாவது சொல்ல ஆரம்பித்தார் என்றாலே போதும். இப்படித்தான் என்று நமக்குத் தெரியும். அப்படித் தெரிந்தவுடனே நாம் ஆத்ம சுத்தி செய்யவேண்டும்.

அந்தத் தெரிந்ததை அவரிடம் நாம் சொல்லக் கூடாது. ஆனால், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற அந்த நினைவுடன் கண்ணால் அவர்களை உற்றுப் பாருங்கள்.

அந்த மகரிஷியின் உண்ர்வின் அலைகளைக் கண் வழி விட்டுவிடுங்கள். சொல்லவே வேண்டியதில்லை.

அவர் தீமையான உணர்வைச் சொல்லும்போது நமக்குக் கோபம் வரும். அந்த நேரத்தில் அப்படியா.., என்று சொல்லிவிட்டு
அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து
அதை நீங்கள் நுகர்ந்து
பின் அந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள்.

தப்பு செய்பவர்கள் யாரையாவது நேரடியாக சொல்லி திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லவே முடியாது. ஆனால், நீங்கள் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள், அங்கே பிரேக் ஆகும்.

இந்த உணர்வுகள் அங்கே சென்று இடைமறிக்கும், குறைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது அங்கே தடையாகும். ஆனால், அவர்கள் உணர்வு உங்களுக்குள் வராது.

உங்கள் உணர்வு அவர்களை என்ன செய்யும்? தப்பை அடக்கும், நீங்கள் பார்க்கலாம்.

ஏனென்றால், குறைகளை நீங்கள் கண்டாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும், அங்கே குறைகள் வளரக்கூடாது, அந்த மெய்ப்பொருள் காணும் திறன் அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வுடன் உங்கள் பார்வையைச் செலுத்தினால் மட்டும் போதும்.

அதற்குப் பதில் இப்படிப் பேசுகிறார்கள் என்று குற்றமாகச் சொல்லிக் கொண்டு வந்தால் அப்புறம் எது உங்களுக்குள் வளரும்? அவரிடம் உள்ளதையும் உங்களுக்குள் சேர்த்துக் கொண்டு இரண்டு பேருக்கும் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று சண்டை வரும்.

ஆக, இந்தத் தியானவழிக்கு வருபவர்கள் இந்த முறைகளைப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் பேசக்கூடிய உணர்வுகள் அனைத்துமே சூரியனின் காந்தப்புலனறிவால் கவரப்பட்டு அலைகளாக பரவிவிடுகிறது.

யாம் இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் அருள் ஞான வித்துகளை டி.வி. ரேடியோவில் எப்படிப் பதிவு செய்துள்ளார்களோ அது போல பதிவு செய்துவிடுகிறோம்.

நீங்கள் அவ்வப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும்போது இந்த உணர்வுகள் உங்களுக்குள் பெருகி உங்கள் ஆன்மா வலுப் பெறுகிறது.

ஆக, நீங்கள் தீமைகளை உணர முடிகிறது. அதே சமயத்தில் தீமைகள் உள்ளுக்குள் புகாது தடைப்படுத்தப்படுகிறது. இதை நீங்கள் செய்து பாருங்கள்.

உங்கள் கண்களால் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சிப் பாருங்கள். அங்கே குறைகள் குறையும்.
அவரின் குறையான உணர்வுகள் இங்கே வராது,
அவர்களின் உணர்ச்சிகள் நம்மை இயக்காது.

அப்பொழுது நம் உணர்ச்சிகள் அவர்களை ஒதுங்கச் செய்யும் அல்லது அவர்களை யோசிக்கச் செய்யும். இல்லையென்றால் விட்டுவிட்டு ஓடிப் போய்விடுவார்கள்.

பார்க்கலாம் நீங்கள்.