ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2015

அருள் ஞானிகளின் உணர்வை எடுத்துத் தீமைகளைச் சலிக்க வேண்டும்

ஒரு வித்தை மண்ணிலே ஊன்றினால்
அந்த வித்து தன் சத்தை எடுத்து விளையத் தொடங்கும்.
அதே மாதிரி, உங்களை அறியாமலே நீங்கள் நுகர்ந்த கஷ்டமான உணர்வுகள் அந்தக் கஷ்டத்தைத்தான் பேச வைக்கின்றது.

கஷ்டமாக இருக்கிறது, என் பிள்ளைக்கு இப்படியே வரன் வந்து போய்க் கொண்டேயிருக்கின்றது. வியாபாரத்தில் கொடுத்தது வரமாட்டேன் என்கிறது என்ற சொல்களத்தான் சொல்ல வைக்கிறது.

இதற்கு என்ன செய்யவேண்டும்?

யாம் பல கஷ்டப்பட்டு அனுபவித்துத் தெரிந்து வந்தோம். அந்த அனுபவத்தைத் தெரிந்து கொண்டபின் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்காக அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம்.

அந்த வாக்கின் வித்தின் நிலைகள் கொண்டு அது பெறவேண்டும் என்றால் அது உறுதுணையாகும்.
ஆத்ம சுத்தியை அடிக்கடி செய்யுங்கள்.
கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளுங்கள்.
குடும்பத்திலும் கூட்டு தியானமிருங்கள்.

தியானமிருந்தபின், வியாபாரத்தில் கொடுத்ததெல்லாம் வரவேண்டும். எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அந்தச் சக்தி எங்களுக்கு வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணுங்கள்.

என்னிடம் சரக்கு வாங்கிச் செல்வோர் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும். நான் கொடுத்த பாக்கிக்காரர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், பாக்கி திரும்ப வரவேண்டும் என்று எண்ணுங்கள்.

இதை இப்படிக் கேட்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? இப்படிச் செய்தால் உங்களுக்குள் இந்த உணர்வுகள் ஒரு வித்தாக மாறுகின்றது.

அந்த வித்தினைத்தான் யாம் உங்களுக்குக் கொடுக்கிறோம். மீண்டும் நீங்கள் இதை எண்ணினால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். அந்த நிலையை உருவாக்குவதற்குத்தான் யாம் இந்த உபதேசமே செய்கிறோம்.

ஆகவே, குறைகளைச் சொல்லாதீர்கள்.

ஏனென்றால் குறைகள் உங்களுக்குத் தெரிகின்றது. அதை நிறைவுபடுத்தவேண்டும்.

இப்பொழுது மேடு பள்ளங்கள் இருக்கின்றது. பள்ளமாக இருக்கின்றதே, பள்ளமாக இருக்கின்றதே.., பள்ளமாக இருக்கின்றதே.. என்று சொல்லிக் கொண்டு நினைத்தீர்கள் என்றால் பள்ளத்தை நிரவ வேண்டும்.

பள்ளமாக இருக்கின்றது. அதிலே சாக்கடை போய்த் தங்குகிறது. சாக்கடையாக இருக்கிறது, சாக்கடையாக இருக்கிறதுஎன்று இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்?

அதை மூடவேண்டும் என்ற எண்ணம் வந்தால் தானே சரியாகும். மண்ணைப் போட்டு நிரவிவிட்டால் சாக்கடை வராது.

அதே மாதிரி உங்கள் கஷ்டம் நீங்கவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்தான் அங்கே குறைகளை நீக்குகிறீர்கள் என்று அர்த்தம். அப்பொழுது அசுத்தம் என்ற நிலைகள் நீங்குகிறது.

சாதாரணமாக வீட்டில் வடை சுடுகின்றீர்கள். கீழே சல்லடை இல்லை என்றால் என்ன ஆகும்?

சல்லடை இல்லாத கரண்டியில் எடுத்தால் எண்ணையுடன் தான் வடையும் சேர்ந்து வரும். மீண்டும் இதில் விட்டால் எண்ணையை அள்ளிக் கொண்டே போகும். சட்டியில் எவ்வளவு நேரம் எண்ணைய் இருக்கும்?

இல்லாமல் போனால் நீங்கள் ஒவ்வொன்றாக எடுத்துத் தட்டி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அடுத்து இந்தப் பாத்திரத்தோடு போகும் பொழுது எண்னை எப்படியும் சிந்தத்தான் செய்யும், குறையத்தான் செய்யும்.

அதற்காகத்தான் சல்லடையை வைத்து நாம் எடுக்கிறோம்.

அதைப் போல  அந்த அருள்ஞானிகளின் உணர்வை நீங்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஆக, அந்த அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து நீங்கள் தீமைகளைச் சலிக்க வேண்டும். இந்த மாதிரி செய்து பாருங்கள்.

அந்த அருள்ஞானிகளின் உணர்வைப் பெறும் நிலையாகத்தான் ஞானவித்துகளை உபதேச வாயிலாக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இந்த எண்ணத்தை நீங்கள் பதிவு செய்தீர்கள் என்றால்
கஷ்டம் என்ற வார்த்தை வராது.
யாம் கொடுத்த வாக்கும் சரியாக வரும்.