தீமையை நீக்கிடும் அருள் சக்தி நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்பதற்குத்தான்
திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம். என்னடா.., சாமி சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று நினைக்கலாம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
நிலையை ஆழமாகப் பதிவு செய்துவிட்டால் மற்ற
நட்சத்திரங்களில் இருந்து வெளி வரும் உணர்வினை எளிதில் நுகர்ந்து நம் உடலுக்குள் தீமை வராது தடுக்க முடியும்.
நம் உடலுக்குள் அந்த ஒளிக்கற்றைகள் வரும்போது
தீமைகள் நமக்குள் உட்புகாது தடுக்கவும் இது உதவும்.
நாம் எடுக்கும் உண்மையான அந்த வலுவான உணர்வுகளை நமக்குள் உருவாக்கிவிட்டால்
அது மீண்டும் தன்னிச்சையாக நறுமணங்களைக் கொண்டு வருவதும், தீமையிலிருந்து நம்மை
விடுபடுவதுமாக நம்மைச் செயலாக்கும்.
நாம் நல்ல குணங்கள் கொண்ட் பிறருடைய வேதனையைக் கேட்டறிகின்றோம். கேட்டறிந்த
உணர்வை நாம் நுகர்ந்தபின் நம் உயிர் அதே வேதனை என்ற உணர்வின் அணுக்களை
உருவாக்கிவிடுகின்றது.
பின், உணவுக்காக அந்த உணர்ச்சிகள் உந்தும் போது வேதனையை உருவாக்கும் அணுக்கள்
நமக்குள் விளையத் தொடங்குகிறது. நல்ல எண்ணங்களுக்கு நாம் செல்ல முடிவதில்லை.
அந்த நேரத்தில் நீங்கள் தியானத்தில் உட்கார்ந்திருந்தால் இந்த மாதிரித்தான்
இருக்கும்.
ஆகவே, இத்தகையை உணர்வுகள் நமக்குள் வராதபடி அதாவது பிறிதொன்று நம்
உடலுக்குள் வந்து அந்தத் தீமையை விளைவிக்கும் சக்தியாக
இயங்கிவிடக்கூடாது.
அப்படியென்றால் அதற்கு என்ன செய்யவேண்டும்?
எது எப்படி இருந்தாலும் காலையில் விழித்தவுடன் “ஓம் ஈஸ்வரா.., குருதேவா” என்று
உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச்
செலுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல்
முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று
ஏங்கிவிட்டு அந்த உணர்வுகளுக்கு சக்தி ஊட்ட வேண்டும்.
அப்பொழுது அந்த உணர்வுகள் வலுப் பெறும்போது நம் உடலுக்குள் தீமைகள் புகாது பாதுகாத்துக்
கொள்ளும் சக்தி வருகின்றது.
யாம் சொல்வது லேசாக இருக்கலாம்.
அனுபவத்திற்கு வருவதற்குக் கடினமாக இருக்கும்.
இதை நீங்கள் தொடர்ந்து செய்தீர்கள் என்றால் அது எளிதாகிவிடும்.
ஒருவர் தையல் மிஷினில் உட்கார்ந்தால் துணியை வைத்தால் கோணல் மாணலாகப் போகும். ஆனால்,
பழக்கப்பட்டவர்கள் நம்முடன் பேசிக் கொண்டே நேராகச் சீராகத் துணியைத் தைத்துவிடுவார்கள்.
காரணம் அந்தக் கைப்பழக்கம்.
ஆகவே சிறிது நாள் துருவ நட்சத்திரத்தை எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்
கொண்ட உணர்வின் தன்மைகள் தன்னிச்சையாக இயக்கும். நல் வழியையும் காட்டும்.
நமக்குள் இதைச் சக்திவாய்ந்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கண்ணின் பார்வையில்
தீமைகளின் சக்தி ஒடுங்க வேண்டும். எமது அருளாசிகள்.