ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2015

எதிலே நம் அவசரத்தைக் காட்ட வேண்டும்...?

அம்மா என்று உங்கள் தாயை வேண்டுங்கள்
தாய் தந்தையர்தான் நம்முடைய முதல் தெய்வங்கள். நம்மை மனிதனாக உருவாக்கிய சக்தி, அந்தத் தெய்வம் - நம் அன்னை தந்தையர்தான்.

ஆனால், இன்று தாயை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எப்படி மதிக்கின்றார்கள்? எத்தனை பேர் மதிக்கின்றார்கள்? சற்று யோசித்துப் பாருங்கள்.

பெரியவர்களையோ சாமியார்களையோ நாம் மதிக்கின்றோம். ஆனால் தன் தாயை மதிப்பதில்லை.
விஞ்ஞானியாக இருந்தாலும் சரி,
சாமியாராக இருந்தாலும் சரி, தாயை மதிப்பதில்லை.

ஆனால், தாய் தனக்குள் விளைய வைத்துள்ள தன் குழந்தையைக் காத்திடும் சக்தி வாய்ந்த உணர்வுகள் இங்கே உண்டு. தாயை எண்ணி ஏங்கினால் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

காட்டுக்குள் சென்றால் புலியோ, பாம்போ எத்தகைய கொடுமையான நிலைகள் வந்தாலும் "அம்மா...," என்று சப்தம் போட்டுப் பாருங்கள். காது இல்லாத அந்தப் பாம்பு நீங்கள் எழுப்பும் அந்தத் தாயின் உணர்வின் அதிர்வினால் விலகிச் செல்லும்.

புலியே வரட்டும், “அம்மா.., என்று கூப்பிடுங்கள். அந்த சப்தம் கேட்டு புலி பாய்ந்து தப்பி ஓடும். தாயைக் காட்டிலும் சிறந்த தெய்வம் இல்லை.

இதைப் போன்று உங்கள் தொழிலில் நஷ்டமோ, பகைமை ஊட்டும் நிலைகளோ வந்தாலும் “அம்மா.., என்று எண்ணி எங்கள் தாயின் அருள் பெறவேண்டும் என்று ஏங்கினால் அந்த உபாயங்கள் கிடைக்கும்.

தீமைகளிலிருந்தோ கஷ்டங்களிலிருந்தோ நிச்சயம் நீங்கள் விடுபட முடியும். எதிர்பாராத நிலைகள் விபத்தோ மற்ற நிலைகளோ வந்தாலும் கடவுள் பேரைச் சொல்வதைக் காட்டிலும் “அம்மா.., உங்கள் அருள் வேண்டும் என்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.

உங்கள் அனுபவத்தில் செய்து பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்.
X ----------------------------------- X

எதிலே நம் அவசரத்தைக் காட்ட வேண்டும்?
நம் வாழ்க்கையில் எத்தகையை குறைகளைக் காண நேர்ந்தாலும், எத்தகையை தீமைகளைக் காண நேர்ந்தாலும் அவசரப்பட்டு அந்த உணர்வுகளைக் கவர்ந்து விடக் கூடாது. உணர்ச்சிவசப்பட (TENSION ஆக) வேண்டியதில்லை.

ஆனால், நாம் எதிலே அந்த அவசரத்தைக் காட்ட வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உடனடியாக நாங்கள் பெறவேண்டும்
என்று அதைக் கவர்ந்து, நுகர்ந்து, பின் சுவாசித்து
கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
தீமைகள் புகாது தடைப்படுத்த வேண்டும்.

பின், குறைகளை எங்கே கண்டோமோ அங்கேயும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று இந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி
அவர்களையும் அதிலிருந்து உடனடியாக மீட்டிட
நாம் தியானிக்க வேண்டும். 

பிறருடைய உணர்வுகள் உங்களுக்குள் சிறிதளவு கூட இயக்கச் சக்தியாக மாறாது. மாறாக நீங்கள் எடுக்கும் இந்த அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக மாறும்.

ஆக, இதை சிறிது நாள் பழகி இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கக்கூடியதாக வரும். அதற்குத்தான் “உங்களை நீங்கள் நம்புங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.