Saturday, April 18, 2015

“வித்தைகளைக் கற்றுக் கொள் அனுபூதியினைப் பெற்றுக் கொள்”

பேரண்டத்தின் தத்துவத்தின் உன்னதங்களை உணர்த்தியருளிய எமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இப்பொழுது நமது குருநாதராக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் தாம் இப்புவியில் வாழ்ந்த காலத்தில் மற்றவர்களுக்குப் பித்தரைப் போல தோற்றமயளித்து மற்றவர்கள் வெறுக்கும் செயலைச் செய்து பார்ப்பவர் பைத்தியம் என்று சொல்லும் வண்ணம் காட்சியளித்தார்.

இவ்வாறு பழனியம்பதியில் குருநாதர் பித்தரைப் போன்று சுற்றியலைந்த காலத்தில் யாமும் மற்றவர்களைப் போலவே அவரைப் பைத்தியம் என்று எண்ணினோம்.

ஆனால், அவ்வாறு எண்ணியது எத்தகையை தவறு என்பதை பிற்பாடு உணர்ந்தோம்.

அவர் பித்தரைப் போன்று சுற்றியலைந்த காலத்தில் எம்மை அணுகி
“வித்தைகளைக் கற்றுக் கொள்
அனுபூதியினைப் பெற்றுக் கொள்”
என்று பல முறை அழைப்பார்.

ஆனால் யாமோ அவரைப் பார்த்த்தும் இவர் ஏதோ மந்திர தந்திர வித்தைகளைச் செய்து அது பிழையாகி பைத்தியமாகி இருக்கிறார்.

இப்பொழுது எமக்கு மந்திர தந்திர வித்தைகளைக் கற்றுத் தருகிறேன் என்று கூறி எம்மையும் பைத்தியமாக்கிவிடுவாரோ என்கிற பயமே எமது மனதில் எழுந்த்து.

அதனால் அவரைக் கண்டாலே ஓடி ஒளியும் நிலையே எமக்கு அப்பொழுது உண்டானது. இருப்பினும் அவர் என்னை விட்டபாடில்லை.

ரிஷிகள் ஒருவரை ஆட்கொண்டு அருளவேண்டும் என்று விரும்பிவிட்டாலே அத்தகைய சிஷ்யரிடம் சிறிது விளையாடிப் பார்ப்பதுதானே அவர்கள் பழக்கம்.

அவ்வாறே எம்மையும் தெருவில் கண்டாலே வம்புக்கிழுப்பதும், சண்டைக்கு அழைப்பதுமாக இருப்பார் குருநாதர். யாமும் அவரைக் கண்டாலே அச்சப்படும் நிலைதான் உண்டானது.

இந்த நிலையில் எலும்புருக்கி நோயால் என் மனைவி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு பலவிதமான வைத்தியங்களுக்குப் பிறகு இனி எங்களால் காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர்.

எனது மனைவி திரும்பவும் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார்கள். மனைவியினுடைய கால்கள் செயலிழந்த நிலையில் துன்பப்படுவதைப் பார்க்கும்போது வீட்டிலுள்ள அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனைப்பட்டோம்.

இந்த நிலையில் எம்மை ஆட்கொண்டு அருள வந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமை அணுகி வீட்டிலுள்ள துயர நிலைகளையும் எமது மனதிலுள்ள வேதனை நிலைகளையும் தெளிவாச் சொல்லி எம்மை ஆச்சரியப்பட வைத்தார்.

மேலும் அவர், “உனது மனைவிக்கு நோய் இல்லை நலம் பெறுவார்” என்று ஆசீர்வதித்து அருள் பிராசத்தை வழங்கி இதை உன் மனைவிக்குக் கொடு, நோய் நீங்கி பூரண நலம் பெறுவார் என்று கூறியருளினார்.

குருநாதர் சொல்லியவாறே யாமும் கடைப்பிடித்தோம். மறு நாளே செயலிழந்திருந்த கால்களில் சிறிது அசைவு உண்டானது. 

டாக்டர்கள் இனி குணப்படுத்த முடியாது என்று ஒதுக்கப்பட்ட எனது மனைவி குருநாதருடைய அருளால் ஒரு மாதத்தில் எழுந்து நடக்கும் நிலை உருவானது.

இச்சம்பவத்தினால் அம்மகானின் பேரில் நம்பிக்கையுற்று அவர் காண்பிக்கின்ற வழியைப் பின்பற்ற முடிவு செய்தோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் தம் கருணையினால் எம்மை இயக்குவித்த ஆரம்ப காலங்களை எடுத்துச் சொல்வது உங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்வனவாகவே இருக்கும்.