ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2015

குருநாதர் எமக்குக் கொடுத்த முக்கியமான உபதேசம்...!

யாம் எனது வேலைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது பித்தரைப் போன்று இருந்த குருதேவர் ரோட்டின் ஓரமாக சாக்கடையின் அருகிலிருந்த நிலையில் என்னைப் பார்த்துவிட்டார்.

என்னைப் பார்த்ததும், “அடே தெலுங்கு ராஜ்யம்” என்று எம்மை வழக்கமாகக் கூப்பிடும் பாஷையில் கூப்பிட்டார்.

யாம் அவர் அருகில் சென்றோம். நீ இப்பொழுது எங்கே செல்கிறாய் என்றார்.

நான் வேலைக்குச் செல்கிறேன் என்றேன்.

உடனே அவர் கோபத்துடன், இங்கே இவ்வளவு வேலை இருக்கிறது. இதைச் செய்யாமல் எங்கே போய் வேலை செய்யப் போகிறாய் என்று கேட்டுவிட்டு அந்த வேலைக்கு நீ போகவேண்டாம். நான் சொல்லும் வேலைகளைச் செய் என்றார் குருநாதர்.

சரி என்று சொல்லிவிட்டு வேலைக்குப் போகாமல் நின்றோம்.

நீ கொண்டு வந்த சாப்பாட்டையும், சைக்கிளையும் வீட்டில் வைத்துவிட்டு உனக்கு காப்பியும், எனக்கு டீயும் வரும்போது கடையில் வாங்கிக் கொண்டு வா என்று ஐந்து ரூபாயைக் கொடுத்தனுப்பினார்.

குருதேவர் சொன்னபடி டீயும் எனக்குக் காப்பியும் கடையில் வட்டா செட்டில் வாங்கி வந்தோம். காப்பியையும், டீயையும் கீழே வைக்கச் சொல்லிவிட்டு என்னை அந்தச் சாக்கடை அருகில் அமரும்படி சொன்னார்.

யாம் திகைத்துப் போய் மற்றவர்கள் கேவலமாக எண்ணுவார்களே என்று மனம் சோர்ந்த நிலையில் நின்று கொண்டிருந்தோம்.

என்னைப் பார்த்த குருநாதர், “என் அருகில் உட்கார், உன்னை யாரும் கேவலமாக எண்ணமாட்டார்கள்” என்று சிறிது கோபமாகச் சொன்னார்.

உடனே அமர்ந்தோம்.

வாங்கி வந்திருந்த காப்பியில் சாக்கடை அருகிலுள்ள அசுத்தமான மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு “இதைக் குடி” என்றார்.

உடனே, என் உடல் முழுவதும் புல்லரித்த நிலையில் வாந்தி வந்துவிட்டது. மற்றவர்கள் இதைப் பார்த்து என்னைக் கேவலமாக எண்ணுவார்களே என்ற உணர்வுகள் உறுத்திக் கொண்டேயிருந்தது.

எனது நிலையைப் பார்த்துணர்ந்த குருநாதர் வட்டா செட்டைக் கடையில் கொடுத்துவிட்டு நிலக்கடலை, பொட்டுக்கடலை, முருக்கு மூன்றையும் வாங்கிவரச் சொன்னார்.

கடையில் போய் வட்டா செட்டைக் கொடுத்தால் அவர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்ததால் வாங்க மறுத்துவிட்டார். புது வட்டா செட் வேண்டும் என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு குருதேவர் சொன்ன அந்த மூன்றையும் வாங்கினேன். வாங்கி வந்த நிலக்கடலை, பொட்டுக்கடலை, முருக்கு மூன்றையும் குருநாதரிடம் கொடுத்தேன்.

சாக்கடைக்குள் இரண்டு அடிக்கு ஒரு கோடு வீதம் நான்கு கோடுகள் போடச் சொன்னார்.

அவர் சொன்ன மாதிரி நான்கு கோடுகள் போட்டேன்.

எதற்காக இந்தக் கொடுகள் போட்டாய்..,? என்றார் குருநாதர் கோபமாக.

தெரியாது என்றேன்.

தெரியாமல ஏன் கோடு போட்டாய்..,? என்றார்.

நீங்கள் சொன்னீர்கள், நான் போட்டேன். அடுத்து விபரம் சொல்வீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நான் ஒன்று விபரம் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு முதல் இரண்டு கோடுகளுக்கு இடையில் பொட்டுக்கடலையும், அடுத்து நிலக்கடலையும் கடைசி இரண்டு கோடுகளுக்கிடையில் முருக்கை நொறுக்கியும் போடச் சொன்னார்.

போட்டேன்.

அடுத்த கேள்வியாக.., இதையெல்லாம் என்ன செய்யப்போகிறாய்? என்று குருநாதர் கேட்டவுடன் எனக்கு மனதில் பதட்டமும், பயமும் வந்துவிட்டது.

அதையெல்லாம் எடுத்துச் சாப்பிடு என்று சொல்லப் போகிறாரோ என்று எண்ணி மனதில் என்னையறியாது வேதனையும் கலக்கமும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

அது சமயம், “அதோ அங்கே பார், என்ன வருகிறது பார்” என்றார் குருநாதர்.

பார்த்தால்.., பன்றி ஒன்று சாக்கடையை நுகர்ந்து பார்த்தவாறே வந்துகொண்டிருந்தது.

பொட்டுக்கடலை போட்டிருந்த இடத்திற்கு வந்து அதை விட்டுவிட்டு நிலக்கடலை போட்டிருந்த இடத்திற்கு வந்து அதை நுகர்ந்து நிலக்கடலைப் பருப்பு  முழுவதையும் சாப்பிட்டது.

அடுத்து முருக்கை நுகர்ந்து அது அனைத்தையும் சாப்பிட்டது. கடைசியாகப் பொட்டுக்கடலையை நுகர்ந்து அதைச் சாப்பிடத் தொடங்கியது.

குருநாதர் பன்றியைச் சுட்டிக் காட்டி, சாக்கடையின் நாற்றத்தை நுகராது சாக்கடை நாற்றத்துக்குள் மறைந்துள்ள வாசனையுள்ள பருப்பை கெட்ட வாசனையை நீக்கி எப்படி நுகர்கின்றது? என்று எனக்கு உணர்த்தினார்.

பன்றியின் உடல் பெறுவதற்கு முன் பரிணாம வளர்ச்சியில்,
பற்பல உடல்களில் கெட்டதை நீக்கி
நல்ல மணங்களை நுகரும் ஆற்றல் வளர்ந்து
அதன் வழியில் நல்ல மணங்களின் உணர்வுகளின் ஆற்றல் கொண்ட
பன்றியின் உடலாக உருப்பெற்றது என்று உபதேசித்தார்.

பன்றியின் உடலில் கெட்டதை நீக்கி நல்லதை வளர்த்துக் கொள்ளும் உணர்வுகள் வளர்ந்து பன்றியின் உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா பின், நல்ல மணங்களை மட்டும் பிரித்து நுகரும் உணர்வு பெற்ற மனிதனாக உருப்பெறுகிறது என்று உணர்த்தினார் குருநாதர்.

மனிதனாகப் பிறந்தபின் மனிதன் சுவைமிக்க நல்ல வாசனை கொண்ட நல்ல உணவுகளைச் சாப்பிட்டாலும் சாப்பிட்ட அந்த உணவிற்குள் மறைந்திருக்கும் விஷத்தன்மைகளை கெட்ட உணர்வுகளை மனித உடல் மலமாகக் கழித்துவிடுகிறது.

ஆக கெட்டதை நீக்கிடும் உணர்வுகள் மனித உடலில் வளர்ச்சி பெற்று நல்ல உணர்வுகளை நுகரும் ஆற்றலாக மனித உடலில் வளர்ச்சி பெறுகின்றது என்று உபதேசித்தருளினார் குருநாதர்.

ஆனால், மனித உடலில் அனைத்தையும் அறிந்துணர்ந்து செயல்படுத்தும் உணர்வுகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும் சற்று முன் சாக்கடை கலந்த காப்பியை உன்னைக் குடிக்கச் சொல்லும் போது நீ என்ன செய்தாய்?

நீ அசுத்தமான சாக்கடையைப் பார்த்துக் கொண்டிருந்ததால், நீ சுவாசித்த அசுத்த உணர்வுகள் உன் உடலுக்குள் சென்று
நீ சாப்பிட்ட நல்ல ஆகாரத்தை எப்படி வாந்தியாக வெளியேற்றியது
என்று பார்த்தாய் அல்லவா என்றார்.

இது போன்றே உன் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் உன் உடலுக்குள்ளும் பதிவாகி விடுகிறது. காற்றுடனும் கலந்துவிடுகிறது.

ஆகவே, பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல பருப்பினை நுகர்ந்து நல்ல உணர்வினைத் தனக்குள் வளர்த்துக் கொள்கிறது.

அதைப் போன்றே, காற்று மண்டலமான சாக்கடைக்குள் மறைந்துள்ள மகரிஷிகள் வெளிப்படுத்திய விஷ உணர்வை நீக்கிடும் ஆற்றல்மிக்க உணர்வுகளை நீ சுவாசிக்கக் கற்றுக் கொள்.

மகரிஷிகளின் அருள் வழியில் நீ சென்று
அந்த உணர்வுகளைச் சுவாசித்து
உன் வாழ்க்கையில் உன்னையறியாது உட்புகுந்த
நல்ல உணர்வுகளை இருளடையச் செய்யும்
விஷ உணர்வுகளை நீக்கி
நீ பார்ப்பவர்கள் அனைவரையும் நலம் பெறச் செய்
என்று உபதேசித்தார் குருநாதர்.

நான் சொன்னது அனைத்தும் உன் வேலை என்று கருதி உன் கடமை என்று கருதி இந்த வேலையைச் செய்து மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவாயாக என்று ஆசீர்வதித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.