ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் - April 2015

30.04.2015
நம் எண்ணங்கள் கோபுரத்தைப் போல எந்த அளவிற்கு உயர்ந்திருக்கின்றதோ அதே போல மெய் ஒளியின் தன்மைகளை நாம் ஏங்கும்போது அதன்வழிகளில் நாம் போகமுடியும்.
அந்த மெய் ஒளியை நாம் காணவேண்டும் என்றால் குரு அருளை நாடி குருவின் வழிகளில் சென்று நாம் மெய் ஒளியைப் பெறவேண்டும்.
29.04.2015
கணவன் மனைவி இந்த முறைப்படி தியானித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பதிவு செய்துகொண்டால் உடலைவிட்டுச் சென்றபின் இரு சரீரமும் ஒரு சரீரமாக இயங்கும். இதுதான் சிவசக்தியின் ஸ்வரூபம். ரிஷியின் தன்மை சிருஷ்டிக்கும் தன்மை.
கணவனும் மனைவியும் சேர்ந்து எண்ணத்தால் கருவாகி ஒரு உணர்வின் சக்தியை ஒரு உருவை உருவாக்குவது போன்று இரு சரீரமும் இந்தச் சரீரத்தை விட்டுச் சென்றபின் ரிஷியின் தன்மையைப் பெறுகின்றனர்.
அத்தகையை தன்மையில் விண் செல்பவர்கள்தான் விண் செல்ல முடியும். தனித்து எவரும் விண் செல்ல முடியாது.
28.04.2015
ஒவ்வொரு நாளும் சட்டை போடுவது போன்று, அழுக்கைத் துடைப்பது போன்று எண்ணத்திற்குள் வரும் அழுக்கைத் துடைக்கவேண்டும்.
துடைக்கவில்லை என்றால் சிறுகச் சிறுகச் சேர்ந்து நமது நற்குணங்களை மாய்த்துவிடும். துன்பமும் நோயும் சிந்தனையற்ற நிலையும் நமக்குள் உருவாகிவிடும்.
ஆகவே, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். 
27.04.2015
விஞ்ஞானத்தில் எல்லாம் சொல்லியுள்ளார்கள் என்பார்கள் சிலர். ஏட்டிலே படித்துக்கொள்வோம். அதை மனதில் கொள்வோம், சிதற விட்டுவிடுவோம்.
மெய்பொருளை அறியமாட்டோம்.
ஆனால், வியாக்ஞானப்படுத்துவோம்.
உட்பொருளைச் சுவாசிக்கும் நிலையை இழந்துவிடுவோம்.
இவைகள்தான் இன்றைய பாடநிலைகள்.
26.04.2015
தன்னையறிந்தவருக்கு ஒரு துக்கமுமில்லை.
தன்னையறியாதவருக்கு வாழ்வு தணலில் விழுந்த புழு போல் அமைந்துவிடும்.
25.04.2015
நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் இருந்தாலும் உதறித் தள்ளிவிட்டு “நாம் பெறும் மெய் வழியே பெரிது” என்ற இந்த எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடங்குங்கள்.
24.04.2015
தாய் தந்தையைரின் உடலைவிட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று ஏங்கி உடனடியாக குழந்தைகள் விண் செலுத்த வேண்டும்.
எந்தச் சாமியாரும் விண் செலுத்த முடியாது, எந்த ஜோதிட ஜாதகமும் அனுப்பாது. எந்த வேள்விகளும் நம்மை விண்ணுக்கு அனுப்பாது.
எந்த உடலின் சரீரமாக இருகின்றார்களோ அந்தக் குழந்தைகள் தான் விண் செலுத்த முடியும்.
23.04.2015
கலியின் கடைசியில் நாம் இருப்பதனாலே நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி நாம் அனைவருமே அந்த ஆற்றலின் துணைகொண்டு இந்தப் பூவுலகின் பெரும்படைப்பான நிலைகளை நாம் படைப்பதற்கே இந்தத் தியானத்தின் வழி - அருள் வழி.
22.04.2015
ஒவ்வொரு மெய்ஞானியும் பிறர் நலம் பெற அவர்களுக்கு உபதேசித்து அந்த உணர்வின் ஆற்றல் பெருக வேண்டும் என்று அவர்பால் அந்த ஜெபத்தைக் கூட்டி தவத்தில் இருந்துதான் உயர்ந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றார்கள்.
நான் கடவுளுடன் நேராகச் சென்று அவன் அருளைப் பெறுவேன் என்றால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான். 
ஏனென்றால் நம் உயிர் நாம் எதை எவ்வாறு எண்ணுகிறோமோ அந்த எண்ணத்தின் தன்மையை நமக்குள் உணர்த்தி அதை அணுவாக (உடலாக) உருவாக்குகிறது.
21.04.2015
நம் நண்பர் கஷ்டத்தைச் சொன்னால் நாம் உடனே ஆத்மசுத்தி செய்து நம்மைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்பொழுது அவர் பேசிய உணர்வின் ஆற்றலை நாம் வலுவிழக்கச் செய்கின்றோம்.
அடுத்து நாம் சொல்லவேண்டியது, “இனி உங்களுக்குத் துன்பமில்லை, மகரிஷிகளின் அருளால் நன்றாக இருப்பீரகள்” என்று உங்கள வாக்கைச் சொல்லுங்கள்.
20.04.2015
நாட்டுக்கு நாடு அரசனுக்கு அரசன் தன்னைத் தற்காத்துக்கொள்ள மாற்று அரச நிலைகளை வீழ்த்தி அவன் உணர்ந்துவிட்டால் தன்னை வீழ்த்திவிடுவான் என்று அழிக்கும் உணர்வுகள் போர் முறை கொண்டு இன்று உலகத்தையே அழிக்கக்கூடிய நிலைகள் துரித நிலைகளில் உருவாக்கி மனிதன் கூடிய சீக்கிரம் மனித இனமே இல்லாத நிலைகளுக்கு ஆகப் போகின்றது.
19.04.2015
மெய்ஞானிகள் பெற்ற அரும்பெரும் ச்க்திகளை யாம் உங்களுக்குள் பதியச் செய்யும்போது அதை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கவனித்து அந்த மெய் ஒளியைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குத்தக்கதான் பதிவாகும்.
சாமி நன்றாகக் கதை சொல்கிறார் என்று இரசித்துக் கொண்டிருந்தால் அந்த ரசிப்பு வீண் விரயம் தான். யாம் இதைப் பதிவு செய்த பின்பு இதை வளர்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.
18.04.2015
மெய்ஞானிகள் தங்களுக்குள் விளையவைத்த ஆற்றல்மிக்க சக்திகள் சப்தரிஷி மண்டலங்களிலே சுழன்று கொண்டுள்ளது. சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலைகளை நாம் சுலபத்தில் பெறமுடியும்.

அதைப்பெற கடும் தவமோ யாகமோ செய்யவேண்டியதில்லை, முழுமையான எண்ணம்தான் தேவை.
17.04.2015
இன்று விஞ்ஞானி ஒரு அணுவிற்குள் தன் உணர்வின் அலையை காந்த அலைகளையோ கெமிக்கல் கலந்த அலைகளையோ ஊடுருவிப் பாய்ச்சி இயந்திரத்தின் துணை கொண்டு அறிகிறான்.
இதைப் போல நமது குருநாதர் நமக்குள் எண்ணத்தைப் பாய்ச்சி அணுவுக்குள் ஊடுருவிச் செயல்படும் நிலையை அறிந்துணர்ந்து அதை ஆட்டிப்படைக்கும் நிலைகளிலிருந்து மீட்டுக்கொள்ள நீ எவ்வாறு பெறவேண்டும் என்று உணர்த்தினார். அந்த உணர்வின் அலைகளைத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
16.04.2015
வேதனை என்பது மனிதரைக் கொல்லும் நஞ்சு.
மகரிஷிகளின் அருள் மனிதருக்கு மகத்துவம் சேர்க்கும் மருந்து.
15.04.2015
மெய்ஞானிகள் எவ்வழியில் தன் உணர்வைக் கண்டுணர்ந்து மெய்வ்ழியில் விண் சென்றார்களோ, அதைப் போன்று மெய் ஒளியின் தன்மையை நம் எண்ணத்தில் தோற்றுவித்து அந்த உணர்வுகளைச் சுவாசித்து நாம் அந்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறுகின்றோம்.
அந்த ஆற்றலைப் பெறுவதற்காகத்தான் நாம் இந்தத் தியானத்தைச் செய்கிறோம். ஆக, இதையெல்லாம் நாம் செய்ய முடியுமா? பெறமுடியுமா? என்று சந்தேகித்தால் அதை உயிரான ஈசன் நமக்குள் படைத்துவிடுவான்.
14.04.2015
இனி நாட்டில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் யுத்தங்கள் நடக்கலாம். நாம் இரவில் படுத்து உறங்கும்பொழுது அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று இருந்தால்தான் விஞ்ஞானிகள் அலைவரிசை என்ற நிலைகளில் நம்மைத் தாக்கும் நிலைகளிலிருந்து நம்மைப் பாதிக்காதவண்ணம் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.
13.04.2015
கார்த்திகேயா என்கிற பொழுது ஒரு பொருளை அறிந்து கொள்ளும் திறன் பெற்றது ஆறாவது அறிவு. அவ்வாறு அறிந்துகொண்ட நிலைகள் வளர்ச்சி பெற்றது விஞ்ஞானம். அதைக் காட்டிலும் உயர்ந்தது மெய்ஞானம்.
மெய்ஞானிகள் ஒவ்வொரு உணர்வின் செயலிலும் இயற்கையின் தன்மையை அறிந்து மனித உறுப்பு அழிந்திடாது உறுப்புக்குள் ஏற்படும் உணர்வின் அணுக்களை உடலுக்குள் உறுப்பின் சத்தினை உணர்வின் அணுவை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்கள்.
12.04.2015
நாம் எந்தக் குணத்தை எண்ணுகிறோமோ அந்த குணத்தின் தன்மை நமக்குள் சிவமாக மாறுகின்றது. ஓம் நமசிவாய.
சிவமாக உடலாக மாறியபின் மீண்டும் அது ஏகப்படும் பொழுது கேட்போர் உள்ளங்களில் “ஓ” என்று ஜீவனாகி “ம்” என்று அடங்குகின்றது. சிவாய நம ஓம்.
11.04.2015
யாம் வெறும் வார்த்தையில் சொல்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள். ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்து, வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்கு உங்களுக்குள் பதிவு செய்திருக்கிறோம்.
சிரமப்பட்டு வளர்த்த இந்தச் சத்தின் நிலைகளை நீங்கள் அலட்சியப்படுத்திவிட வேண்டாம். ஆக அந்த ஆயுதத்தை தியானத்தின் நிலைகளில் எடுத்து ஒவ்வொரு நிமிடமும் வரக்கூடிய துன்பத்தை நீங்கள்தான் போக்கிக் கொள்ள வேண்டுமே தவிர சாமி செய்வார் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
உங்களுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வை உங்கள் உயிரான ஈசன் தான் செயல்படுத்துவானே தவிர வேறு யாரும் இல்லை.
10.04.2015
நாம் எத்தகைய நல்லதைச் செய்யவேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து நம் உயிரான ஈசனிடம் அது படும்போது நாம் கோவிலுக்குள் செல்வது போன்று நம் உயிரான ஈசனுக்கு அர்ச்சனையாகிறது என்பதை உணர்தல் வேண்டும்.
09.04.2015
உருவாக்கும் சக்தியான வெப்பம், இயக்கச் சக்தியான நஞ்சு, இணைக்கும் சக்தியான காந்தம், மணம் இந்த நான்கும் ஒரு அணுவிற்குள் இயக்கச் சக்தியாக மாறும் போது ஐந்தாவது நிலையான உணர்வு என்ற இயக்கம் என்ற நிலை அடைகின்றது. இதுவே காயத்ரி எனப்படுகிறது.
08.04.2015
யாரும் இறப்பதில்லை
உடல்தான் இறக்கின்றது
உணர்வுகள் அழிவதில்லை
உணர்வுகள் மாறுகின்றது
உணர்வுகள் மாறிக் கொண்டேயிருக்கும்
உணர்வுக்குத்தக்கவாறு உடல்கள் மாறும்
ஒளியின் சரீரமான உணர்வாக மாற்றச் செய்வதுதான்
மகரிஷிகள் உணர்த்திய தியானம்
07.04.2015
காளியின் சிலை கோபத்தின் சொரூபமாக இருக்கின்றது. காளியின் வாகனமோ புலி.
புலி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுத் தாக்கிக் கொன்று புசிப்பது போன்று நமது கோபத்தின் உணர்வுகள் நம் உடலிலுள்ள மனிதனாக உருவாக்கிய நல் உணர்வின் அணுக்களை இரக்கமற்றுத் தாக்கிக் கொன்று அடுத்து மனித சரீரத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.
06.04.2015
மெய்ஞானியரின் அருள் சக்தியைச் சுவாசித்து உயிரில் மோதி உடலிலுள்ள ஒவொரு அணுக்களிலும் கலக்கச் செய்தாலொழிய நாம் விதியை மதியால் வெல்ல முடியாது.
05.04.2015
மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பது விஞ்ஞானிகள் கருத்து. ஆனால், உணர்வின் இயக்கத்தின் வழித் தொடர் கொண்டு பரிணாம வளர்ச்சியில் பன்றியின் உயிராத்மாதான் அடுத்து மனித சரீரம் பெறுகின்றது.
பன்றியின் உயிராத்மா நஞ்சான உணர்வுகளைப் பிளந்து நல்லுணர்வினைத் தன்னுள் இணைக்கும் நிலையாகத் தன் உணர்வினை வளர்த்து தனது மறுபிறவியில் மனித சரீரத்தைப் பெறுகிறது என்பது மெய்ஞானிகள் நமக்குக் கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரமாகக் காண்பித்த பேருண்மை.
04.04.2015
எதனின் உணர்வை நம்முள் இணைத்து வளர்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் நம் உடலில் இணைந்து ஊழ்வினையாகின்றது.
இந்த ஊழ்வினையே நம் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகின்றது
03.04.2015
நாம் எதை எண்ணுகிறோமோ அந்த உணர்வின் அலைகள் நம்மைச் சுற்றி கவசமாக இருக்கும்.
ஆக, அது தான் முன்னாடி இருந்து நம்மைச் சுவாசிக்கச் செய்து எந்த குணத்தில் நாம் இருந்தோமோ அந்த குணத்தைப் பாதுகாக்க அதன் வழி ஞானத்தைக் கொடுக்கும்.
02.04.2015
நமது உடலுக்குள் எண்ணிலடங்காத எண்ண வித்துக்கள் உண்டு. அதனில் எந்த உணர்வின் தன்மை அதிகமோ அதனின் செயலாக்கமாக நமது ஆன்மா மாறுகின்றது.
01.04.2015
பேருண்மையின் நிலைகள் அனைத்தையும் சொல்லிவிட்டால் நாம் தெரிந்து கொண்டோம் என்ற அலட்சியம் வரும்.

தெரிந்து கொண்டோம் என்ற நிலைகளில் வாய்ச் சொல்லில்தான் பேச முடியுமே தவிர அந்த உணர்வின் ஆற்றல்களை நாம் அறிய முடியாமல் போய்விடும்.