Tuesday, April 21, 2015

தீயவினைகள், சாபவினைகள், பாவவினைகள், பூர்வ ஜென்மவினைகளிலிருந்து விடுபடுங்கள்

எனது (ஞானகுரு) சிறிய வயதில் எங்கள் கிணற்று மேட்டில் உள்ள ஒரு பொந்தில் வெள்ளை மைனா ஒன்று சில குஞ்சுகளைப் பொரித்திருந்தது. அந்தப் பொந்தின் மறுபக்கத்தில் குஞ்சுகளின் கால்கள் தெரியும்.

அந்தக் குஞ்சுகளின் கால்களில் கயிற்றைக் கட்டிவிட்டு சிறிது நாட்கள் அவைகள் வளர்ந்தபின் அந்தக் குஞ்சுகளை எடுப்பதற்குத் தெரியாமல் ஏற்கனவே கட்டியிருந்த கயிறைப் பொந்தின் மறுபக்கத்திலிருந்து இழுத்தோம்.

இதனால் அந்தக் குஞ்சுகளின் கால்கள் தாமே பிய்த்துக் கொண்டு வந்துவிட்டன.

இதைப் போன்றே எமது சிறிய வயதில் ஒரு குருவியினைப் பிடித்துக் கயிற்றுடன் கட்டி உயிருடன் எரியும் நெருப்பில் வாட்டினேன்.

அப்பொழுது குருவி எப்படியெல்லாம் துடித்திருக்கும்? இப்படி சில தவறுகளை சிறு வயதில் யாம் செய்திருக்கிறோம். குருநாதர் இதை எமக்குக் காட்சியாகக் காண்பித்தார்.

நீ குருவியிலிருந்துதான் மனிதனாக வந்தாய். அதனின் அணுக்களையெல்லாம் எப்படிக் கொன்றாயோ எப்படியெல்லாம் சுட்டுப் பொசுக்கினாயோ,
அதனின் உணர்வுகள் உன்னில் இணைந்து
உனது வளர்ச்சியின் தன்மையைச் சுட்டுப் பொசுக்கி
உன்னிடமுள்ள நல்ல குணங்களையெல்லாம்
சுட்டுப் பொசுக்கிவிடும் என்று உபதேசிததார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோயில் தான் யாம் பிறந்த ஊர். அந்த ஊரில் ஒரு குடும்பமே அவர்கள் செய்த தவறால் சாப வினைகளால் சுக்குநூறாக அழியும் தன்மைக்கு வந்துவிட்டது.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கண்ணும் தெரியாது, வாயும் பேச வராது. கருவிலேயே அந்த நிலை உருவாகிவிட்டது. வெளியில் “பெப்பப்பே” என்றிருப்பார்.

யாராவது கொடுத்தால்தான் சாப்பாடு. ஆனால், அவருடைய குடும்பம் பெரிய குடும்பமாக இருந்தது. வயல்களும் ஏராளமாக இருந்தன. எல்லாம் சாப வினைகளால் அழிந்துவிட்டன.

எமக்கு இதெல்லாம் தெரியாது. சிறு வயதில் எமக்கென்ன தெரியும்? இதையும் குரு காட்சியாகக் காண்பித்து
அவர்கள் குடும்பம் எப்படி இருந்தது?
அவர்கள் செய்த தீயவினை என்ன?
சாபத்தால் அவர்கள் வம்சங்கள் எப்படிச் சிதறுண்டன?
என்பதை எமக்கு உணர்த்தினார்.

அந்த ஊமை அவருடைய தாயின் கருவில் இருக்கும்போது அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெறொருவரை அடித்துக் கழுத்தை நெறிக்கும்போது அடிபடுபவனின் கண்கள் பிதுங்குகிறது. உணர்வுகளின் நிலைகள் ஊமையாகின்றது.

அதனைக் கருவுற்றிருக்கும் அந்தத் தாய் கூர்ந்து கவனிக்கும் பொழுது அதனின் உணர்வுகள் கருவில் விளைந்ததை குருநாதர் காட்சியாகக் காண்பித்தருளினார். ஆனால், ஊமையோ தவறு ஏதும் செய்யவில்லை.

அவனுடைய குடும்பத்தார் செய்த தவறால், சாப வினையால் அவன் குருடன் ஆனான்.

அவன் மீது எங்கள் தெருவிலுள்ள சிறுவர்கள் அனைவரும் கற்களை எறிவோம். அவனும் “இந்தா.., இந்தா..” என்று சப்தம் போடுவான். கண்டபடி திட்டுவான்.

அவனோ சாப்பாட்டிற்கு வழி பார்த்துக் கொண்டிருப்பான். நாங்கள் வேடிக்கையாக அவனை அடித்துக் கொண்டிருப்போம். அவனுடைய வீடும் இடிந்து விழுந்துவிட்டது.

இடிந்து விழுந்த வீட்டின் ஓரத்தில் ஒரு கூரையின் குடிசையின் கீழ்தான் உட்கார்ந்து சாப்பிடுவான்.

இதையெல்லாம் குரு எமக்கு எடுத்துக் கூறி “நீ உனது சிறு வயதில் அவன் மீது கல்லைக் கொண்டு எறிந்தாய், அவன் பிச்சை எடுக்கச் சென்றால் கேலி செய்தாய்”

ஆனால், அவன் குரல் உனக்குள் பதிவாகின்றது. அதன் நினைவாக உன்னில் செயல்படுகின்றது. இந்த உணர்வுகள் உனக்குள் என்னென்ன செய்யும் தெரியுமா?

ஒரு கம்ப்யூட்டரில் எப்படிப் பதிவாகின்றதோ இதைப் போன்று உனக்குள் பதிவான நிலைகள் வேலை செய்யும்.

ஆனால், நீ இதை அறியவில்லை. மற்ற உயிரினங்களைக் கொன்றாய். இவைகள் எல்லாம் எங்கும் போய்விடாது.
அவைகள் உனக்குள்ளே வந்துவிடும்.
நீ அவனை அடித்து வேதனைப்படுத்திய உணர்வெல்லாம் உன்னிடம் வந்து சேரும்.

அந்த உணர்வுகள் உனக்குள் விளையப்படும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடம் ஊழ்வினைகளாக விளையும் என்று குருநாதர் தெளிவாக எமக்குச் சுட்டிக் காண்பித்தார்.

அந்த ஊமை தவறு செய்யவில்லை. ஆனால், அவனுக்கு ஏன் இந்த உணர்வுகள் வந்தது? இதன் நிலைகள் என்ன ஆனது? அது அவனுக்குள் வினையானது; வினைக்கு நாயகனான அது இயங்கத் தொடங்கியது.

இது போன்ற நிலைகளிலிருந்து மனிதர் தம்மை மீட்டுக் கொள்தல் வேண்டும். மனிதர் தம் ஆறாவது அறிவின் துணை கொண்டு தம்முள் அறியாது வந்து சேரும் அழுக்குகளை நீக்க வேண்டும்.

நமக்குத் தெரிந்து நம் மீது அழுக்கு விழுகிறதா? ஆனாலும், நாம் தினசரி குளித்து உடலிலுள்ள அழுக்குகளைப் போக்குகின்றோம்.

இதனைப் போன்றுதான் நம் ஆன்மாவில் சேரும் அழுக்குகளை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் சுவாசிக்க வேண்டும்.

சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை
கண்ணின் நினைவு கொண்டு
உடலுக்குள் உள்முகமாகச் செலுத்தி
நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களுக்கும்
உணவாகக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நம் வாழ்க்கையில் நம்மையறியாது சேர்ந்த தீய வினைகள், சாப வினைகள், பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று அனுபவபூர்வமாக நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தினார்.