ஒரு முறை யாம் (ஞானகுரு) கொல்லூரில் ஆற்றங்கரையில் தியானம்
செய்து கொண்டிருந்தோம்.
அந்த ஆறு குடசாஸ்திரி மலை மேல் உருவாகி பல பச்சிலை மூலிகைகளின் சத்தினைக் கவர்ந்து கொல்லூர் மூகாம்பிகையை அணுகி வருகிறது.
அங்கே குருநாதர் எம்மைத் தியானத்தில் அமரும்படிச்
செய்திருந்தார். அந்த ஆற்றங்கரை ஓரம் கருநாகப் பாம்பு போன்ற காளிங்கராயன்
பாம்புகள் சில இருந்தன.
யாம் குருநாதர் ஆணைப்படி காலை தியானத்திற்குச் சென்று
கொண்டிருந்தோம். அப்பொழுது செடி புதருக்குள் மறைந்திருந்த காளிங்கராயன் பாம்பினை
அறியாமல் மிதித்துவிட்டோம்.
உடனே அந்தப் பாம்பு 6 அல்லது 7 அடி உயரத்திற்கு எமது
தலைக்கு மேலாக நேராக நின்று கொண்டு “சிர்” என்று சீறியது.
அந்தப் பாம்பு படம் எடுத்ததைப் பார்த்தால் ஒரு முறம் போன்று
இருந்தது. அப்பொழுது, குருநாதர் எமக்குச் சில உண்மைகளை உணர்த்தினார்.
“நீ அந்தப் பாம்பை இடறினாய், ஆனாலும் அது உன்னைத்
தாக்கவில்லை”. காரணம் உன்னை அறியாது மிதித்துவிட்டார் என்று அறிந்தது, ஆகையால் அது
தாக்கவில்லை.
ஏனெனில், இப்பகுதியில் பல மகரிஷிகள் வாழ்ந்திருந்தனர்,
தவமிருந்துள்ளனர். அவர்களுடைய உணர்வுகளை இந்தப் பாம்புகள் நுகர்ந்துள்ளன. இது சில
பரிணாமங்களில் விஷத்தை நீக்கவும் செய்கின்றது.
அன்று கோலமாமகரிஷி இங்கே தான் தவம் செய்தார்.
அவருடைய உணர்வுகள் படர்ந்து பரவியுள்ளது.
இந்தப் பாம்புகள் இங்கே வாழ் நாளை எப்படிக் கழிக்கிறது? மற்றவர்
கண்களுக்குச் சிக்குவதில்லை. சிலருடைய கண்களுக்கே தென்படுகிறது. அவ்வாறு
தென்பட்டாலும் அதன் உணர்வுகள் மறையவும் செய்கின்றது.
யாருக்கும் தீங்கு செய்வதில்லை, ஆகவே நீ அஞ்ச வேண்டியதில்லை
என்று அருள் உணர்வை ஊட்டினார் குருநாதர்.
இதுபோன்றே கொல்லூரில் இன்னொரு இடத்தில் தியானத்தில்
அமர்ந்திருந்தோம். அப்பொழுது அட்டைகள் கடித்து உடலெல்லாம் இரத்தமாக ஒழுகிறது.
அது சமயம் மனித இரத்த வாசனை கண்டு யாம் தியானம் செய்யும் இடத்தருகே
புலி வந்தது.
யாம் எந்த மகரிஷியின் அருள் உணர்வை எடுக்கின்றோமோ
அந்த அருள் உணர்வின் மணங்களை நுகர்ந்தபின்
இரத்தத்தின் வாசனை வந்தாலும் கூட
புலி அங்கே அருகில் அமர்ந்து கொண்டு
எம்மைப் பார்த்துக் கொண்டு இருந்தது
ஆனால், எம்மைத் தாக்கவில்லை.
நமது குருநாதர் எமக்கு உண்மையின் உணர்வுகளை உணர்த்தும்
நிலையாக காடு மேடெல்லாம் எம்மைய அலையச் செய்து இயற்கையின் இயக்கத்தின் உண்மையும் மகரிஷிகள் பெற்ற ஆற்றல்களையும்
உணரும்படி செய்தார்.
அதன் உணர்வுகளை எமக்குள் பதியும்படிச் செய்தார். அவர்
காண்பித்த அருள் வழியில் யாம் எமக்குள் பதிந்த உணர்வை நினைவு கொள்கிறோம்.
அவ்வாறு நினைவுகொண்டு குருநாதர் நுகர்ந்த உணர்வை யாம்
எடுக்கும் பொழுது
குருநாதர் தம்முள் அறிந்த உணர்வுகளையும்
தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்ற உணர்வுகளையும்
எம்மிடத்திலும் பெறும் திறனைக் காண்பித்தார்.