Monday, April 20, 2015

நாம் சேர்க்க வேண்டிய சொத்து

ஒரு சமயம் யாம் அஸ்ஸாம் பகுதிக்குச் சென்றிருந்தோம். அப்பொழுது அங்கே வசிக்கக்கூடிய மலைவாழ் மக்கள் எம்மைப் பிடித்துக் கொண்டார்கள்.

மலைப்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் “என்ன நடைபெறுகிறது? என்பதை யாம் அறிந்துகொள்ளும் பொருட்டு நீ அங்கே அவசியம் போய்த்தான் ஆகவேண்டும் என்று குருநாதர் கூறிவிட்டார்.

அந்தக் காடோ யானைகளும் காண்டாமிருகங்களும், மற்றும் பல்வேறு மிருகங்களும் வாழும் அடர்ந்த வனப் பகுதி.

குருநாதர் கொடுத்த உபாயத்தின் பேரில் யாம் அங்கே சென்று மலைவாழ் மக்களிடம் பிடிபட்டு அவர்கள் இழுத்துச் சென்ற பகுதிக்குச் சென்றோம்.

அங்கே அவர்கள் எம்மை ஒரு மரத்தோடு எம்மைக் கட்டிப் போட்டார்கள். உண்பதற்கு ஆகாரமும் கொடுத்தார்கள்.

அங்கே காளி கோவில் மாதிரி ஒரு கோவிலை வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இந்த மலைவாழ் மக்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருந்தார்கள். குருநாதர் இதையெல்லாம் கவனிக்கும்படிக் கூறினார்.

ஆட்டமும் பாட்டுமாக இருந்த அந்தக் கூட்டத்தின் தலைவனான பூசாரி பாடிக் கொண்டே வந்த எம்மைப் பல இடங்களில் ஊசியால் குத்தினார்.

“ஆ” என்று அலறினோம். அந்தச் சமயம் சில மந்திரங்களைச் சொல்கிறார்கள். அவைகளை எமக்குள் பதியும்படி செய்கின்றனர.

இவ்வாறு சில நாட்கள் அதே இடத்தில் எம்மைக் கட்டி வைத்திருந்து மந்திர ஒலிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எமக்குள் பதியச் செய்து குறிப்பிட்ட காலம் வந்ததும் எம்மைப் பலியிடக் காத்திருந்தனர்.

இதையெல்லாம் குருநாதர் எமக்குக் காண்பித்து, குறிப்பிட்ட நாள் வந்ததும் உன்னைப் பலியிடுவார்கள். உன் ஆன்மாவைப் பிரித்தெடுத்து கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

அதோடு அல்லாமல் உன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி தசைகளைத் தாங்கள் வெள்ளாமை செய்யும் பகுதிகளில் வீசிவிடுவார்கள். மேலும் உனது தசைகளைக் கோவிலிலே பொங்கலிடுவார்கள் என்று உண்ர்த்தினார் குருநாதர்.

இவையெல்லாம் யாம் குருநாதர் அருள் துணைகொண்டு அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்ட உண்மைகள்.

மனிதரைப் பலியிட்டு அவர் ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி, மந்திர ஒலிகளின் துணை கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக அந்த ஆன்மாவை எப்படிப் பயன்படுத்துவர் என்பதை அந்த இரவில் யாம் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் நிலையில் குருநாத்ர் உணர்த்தினார்.

இன்று பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம், மலைப்பகுதிக்குச் சென்றால் அமைதியாகத் தனித்து வாழலாம் என்று. ஆனால், சில மலைப்பகுதிகளுக்குச் சென்றால் எவ்வளவு பெரிய ஆபத்து இருக்கிறது? என்றும் குரு உணர்த்துகிறார்.

இறுதியில் யாம் குரு எமக்குக் கொடுத்த சக்தியின் துணைகொண்டு வெளியே வந்தோம். பின், அதே மந்திரத்தின் நிலைகளை நகருக்குள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை குரு தெளிவாக உணர்த்துகிறார்.

இது போன்ற நிலைகள் நம் நாட்டில் மட்டும்தான் என்றில்லாமல் உலக நாடுகள் அனைத்திலுமே இற்ற்ஹன் நிலைகள் தான் இருந்தன. எகிப்து, ஈரான், ஈராக்., மற்றும் ரோமன் நாடுகள் பற்றியும் அங்கு நடைபெறும் நிலைகளையும் குருநாதர் எமக்குக் கூறினார்.

இது மாதிரி மந்திர ஒலிகளின் துணை கொண்டு மனிதனின் ஆசையின் நிலைகள் வளர்ந்து எந்தெந்த நிலைகள் மனிதனுக்குள் விளையுமென்ற உணர்வுகள் பரவப்பட்டு ஆயுதக் காலங்களாக மாறி ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கினான்.

அந்த ஆயுதங்களைக் கொண்டு போர் செய்து அதில் ஒவொருவரும் தனக்கென்ற ஆயுதங்களைத் தயார் செய்து பிற மக்களை இரக்கமற்றுக் கொன்று குவித்தான்.

ஆனால், இந்த மந்திர ஒலிகள்தான் விஞ்ஞான அறிவிற்கு மூலமானது. மனிதனுடைய உணர்வுகளை நேரிடையாகவே செயல்படுத்தும் தன்மைக்கு இன்று விஞ்ஞான அறிவு வளர்ந்திருக்கிறது.

இன்று விஞஞான அறிவு இவ்வளவு தூரம் வளர்ந்திருந்தாலும் நாம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியூருக்கோ சந்தைக்கோ செல்வதென்றால் நாம் அஞ்சிக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

ஏனென்றால் திருடும் நோக்கமுள்ள ஒருவன் மந்திர ஒலிகளைக் கொண்டு நம்மைத் தொட்டு நமது சுயநினைவை இழக்கச் செய்கின்றான். பின் காசை எடு என்றால் எடுத்துக் கொடுத்துவிடுகிறோம்.

இப்படி ஏராளமான நிலைகள் சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

இதைப் போன்று மனிதனுக்குள் விளையவைத்த இந்த உணர்வுகள் மந்திர ஒலியால் உருவாக்கப்பட்ட கருக்கள் போன்றவை இன்று விஞ்ஞான உலகில்கூட பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி மனித சக்திகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை உணர்த்தி இதிலிருந்து மனிதர் எவ்வாறு தப்ப வேண்டும்? எதன் வழிகளில் இந்த விஞ்ஞானத் தீமைகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

நாம் இந்த விஞ்ஞான உலகில் சொத்து சுகம் என்பவைகளைத்தான் அதிகமாக நேசிக்கின்றோம். இந்தச் சொத்து நமக்கு நிலைத்திருக்கின்றதா என்றால் இல்லை. இவைகளெல்லாம் நிலையற்ற தன்மை கொண்டவைகள்.

உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறும் உணர்வாகச் சேர்ப்பதே நமக்குச் சொத்தாக இருந்து நமது உயிரான்மாவைச் சிறப்புறச் செய்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.

நமது ஞானிகள் மற்றும் மகரிஷிகள் அருள் துணை கொண்டு ஒவ்வொரு மனிதரும் அழியாச் சொத்தான பெருவீடு பெருநிலை என்ற சொத்தினைப் பெறவேண்டும் என்று குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இந்த வித்தினைப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்குள் பதிவு செய்யும் இந்த வித்தினை குரு காட்டும் அருள் வழியில் பின்பற்றி மெய் உணர்வுகளை வளர்த்துக்கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.