
தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை “நமக்கு முன் மலை போல் குவியச் செய்ய வேண்டும்”
அன்று ஞானிகள் எவ்வாறு செயல்பட்டார்கள்…? அவர்கள் வழியில் எந்த வினைகளை
நமக்குள் சேர்க்க வேண்டும்…? என்பதை குருநாதர் காட்டினார்.
1.அன்று அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தீமையை நீக்கும் சக்திகளை
எப்படி எடுத்தாரோ…? அதைப் போல
2.சந்தர்ப்பத்தால் துன்பப்பட்டு வருவோருக்கு மெய் உணர்வுகளை
உணர்த்தி… அருள் ஞானிகள் அருள் வித்துக்களை அவர்களுக்குள்
பதியச் செய்.
3.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்படி செய்… அந்த உணர்வுகளை அங்கே வளரச் செய்
4.அவர்களை அறியாது வந்த இருளை நீங்கச் செய்
5.அவர்களுக்குள் அது வளர்ந்து அதனால் மகிழ்ந்து உறவாடுவதை நீ
பார்
6.அந்த மகிழ்ச்சியான உணர்வை உனக்குள் எடுத்துக் கொள்.
7.அந்த நிலையை நீ உருவாக்கி மகிழ்ச்சியான சொல்களை நுகர்ந்து உன்
உடலுக்குள் செலுத்திவிடு…! என்று குருநாதர் காட்டினார்.
நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். உங்களை அறியாது சேர்ந்த
விஷமான உணர்வுகள் நீங்கி இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று “குருநாதர் காட்டியபடி யாம் செய்து கொண்டிருக்கின்றோம்…”
உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை
சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
ஒவ்வொரு நாளும் எண்ணும் பொழுது அவர்கள் மூலம் சப்தரிஷி மண்டல ஒளிகளை நாம் பெற முடிகின்றது… வாழ்க்கையில் வரும்
இருளைப் போக்க முடிகின்றது.
உங்களுக்குள் அந்த நினைவின் எண்ணங்கள் என்றும்
நிலைத்திருக்க வேண்டும் என்பதற்குத் தான் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்திக்
கொடுத்துள்ளோம்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்கள்
சப்தரிஷி மண்டலம் சென்றடைந்து என்றும் 16 என்ற நிலை அடைந்து ஒளிச் சரீரமாக அவர்கள்
பெற வேண்டும் என்று “நாம்
அனைவரும் ஒன்று சேர்ந்து… உந்தித் தள்ள வேண்டும்…”
அதற்காகத் தான் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் ஆற்றல் ஒவ்வொரு
உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்து அந்த உணர்வின் உணர்ச்சிகளை ஓங்கி வளரச் செய்துள்ளோம். அனைவரும் சேர்ந்து ஒரே
எண்ணத்தில் ஏங்கப்படும் பொழுது தான் “அந்த மகா ஞானிகள்
ஆற்றலைப் பெற முடியும்…”
ஏனென்றால்
1.மகரிஷிகள் எந்த ஒரு மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் சிக்காமல்
தப்பிச் சென்றவர்கள்.
2.அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகளை இழுக்கக்கூடிய வலு
இழந்தவர்கள் தான் சாதாரண மனிதர்கள்.
இருந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போன்று எல்லோருடைய
எண்ணங்களையும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது அது வலுவடைந்து பெரும் வெள்ளமாக அமைகின்றது.
மழையினால் ஏற்படும் வெள்ளம் குப்பை செத்தைகளை அடித்துச்
செல்வது போல
1.நாம் எண்ணக்கூடிய அந்த ஒவ்வொரு ஞானிகளுடைய எண்ணங்களும்
சிறுகச் சிறுகப் பதிவாகி
2.இந்த எண்ணங்கள் அனைத்தையும் அவர்கள் பால் ஓங்கிச் செலுத்தப்படும்
பொழுது இந்த உணர்வலைகள் வளம் பெற்று
3.நமக்கு முன் நிற்கும் அசுத்த உணர்வுகளை… விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை அகற்றச் செய்யும்.
பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பருப்பை எப்படி
நுகர்ந்து எடுக்கின்றதோ அதைப் போல நாம் அனைவரும் சேர்ந்து இந்த உணர்வின்
நினைவாற்றலை விண்ணிலே ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது அந்த மாக ஞானிகளின் உணர்வலைகள்
இங்கே நமக்கு முன் குவிகின்றது. செத்தை குப்பை என்ற விஷத் தன்மைகளைப் பிளந்து
அப்புறப்படுத்துகின்றது.
ஆக…
1.அந்த அருள் ஞானிகளுடைய சக்திகளை அவர்களை ஒத்த நிலைகள் நாம் எண்ணும்
பொழுது அது இங்கே குவிக்கப்பட்டு
2.அவரவர்கள் எண்ணிய அளவுக்குத்தக்க நமக்கும் சிறிதளவு பங்கு
கிடைக்கின்றது.
3.நம் உடலுக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.
4.அதை மீண்டும் எண்ணும் பொழுது எந்த நேரத்திலும் அந்தச் சக்தி
கிடைக்கின்றது.
அதே சமயத்தில் நம் மூதாதையர்கள் அவர்கள் தவம் இருக்கவில்லை
என்றாலும் வரம் வாங்கவில்லை என்றாலும் அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள்
உண்டு.
நாம் அனைவரும் ஒத்த உணர்வு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து
சென்ற அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற
வேண்டும் என்று “இந்த
உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது… அந்த ஒளி அலைகளுடன்
அது மிதந்து அந்த விண்ணின் ஆற்றலில் நம்மால் சுழல வைக்க முடியும்…!”
இப்படித்தான் குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.
நமக்காக வேண்டி பாடுபட்ட அந்த நல்ல உள்ளங்கள் தன்னை அறியாது
சேர்ந்த இருளான நிலைகளில் இருந்து விடுபட இம்முறைகள் தான் கடந்த காலங்களில்
ஞானிகள் காட்டிய நிலைகள். ஆனால் பிற்காலங்களில் இது மறைந்து விட்டது.
இன்று மனிதனுடைய எண்ணங்கள் முழுமையாக அழியும் இத்தருணத்தில்
அது மீண்டும் இங்கே கிளர்ந்து எழுகின்றது. குருநாதர் எம்மிடம் சொன்னது…
1.அந்த ஞானிகளின் அருளாற்றலை உனக்குள் ஓங்கி வளரச் செய்து
2.உன்னை நாடி வருவோர் (எண்ணுவோர்) அனைவருக்கும் மகரிஷியின் அருள் ஒளி படர வேண்டும் என்று ஏக்க உணர்ச்சிகளைச்
தூண்டி
3.அவர்கள் துன்பங்களிலிருந்து விடுபடச் செய்து அந்த மெய்
ஒளியின் மகிழ்ச்சியான நிலைகள் வெளிப்படுவதை
4.நீ நுகர்ந்து அந்த விண்வெளியின் ஆற்றலை நீ பெறு.
5.இதுதான் உனக்கு நான் கொடுக்கின்ற வரம்…!
அதைத்தான் நீ வளர்க்க வேண்டும் என்று குருநாதர் காட்டினார்.
ஆகவே நீங்கள் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்ற இந்த
இச்சையில் நான் எண்ணி ஏங்கிய உணர்வுகள் “என் உடலுக்குள் கிரியை ஆகிச் சொல்லாக
வெளிப்பட்டதும்… என் உடலுக்குள் அந்த உணர்வுகள் கிரியை ஆகி
அது இயங்கியதும்… அந்த ஞானத்தின் வழியிலே தான்…”
குருநாதரை நான் எண்ணும் பொழுதெல்லாம்… குரு வழியிலேயே அவர்
காட்டிய அருள் ஞானம் எனக்குள் நான் எடுத்துக் கொண்ட இச்சையில் “இன்றும் விளைந்து கொண்டிருக்கின்றது…”
1.அந்த ஞானத்தின் சொல் தொடராக வெளிப்படுகின்றது.
2.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போதும் அதைச் சுவாசிக்க
நேர்கின்றது.
3.அருள் வித்தாக அதன் சத்தைப் பெறும் சக்தியாக உங்களுக்குள்
விளைகின்றது.
அதற்காக வேண்டித் தான் பொறுமையுடன் பொறுப்புடன் ஏங்கி… ஒவ்வொரு நாளும் அந்த அருள்
ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். உங்களை
அறியாது வந்த இருள் நீங்க வேண்டும் என்ற ஆசையில் தான் மணிக் கணக்கில் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பச் சொல்வது…”
காரணம்…
1.ஒவ்வொரு நொடியிலும் நல்லதையே எண்ணுவோம்…! ஆனாலும் அடுத்த கணம் சங்கடத்தை எண்ணுவோம்…!
2.இது போன்ற நிலைகள் நமக்குள் சேராத வண்ணம் தடுப்பதற்குத் தான்
3.“திரும்பத் திரும்ப நீங்கள் வளர வேண்டும்” என்று அந்த இச்சையை நான் வெளிப்படுத்துகின்றேன்.
நமது குருநாதர் உபதேசித்து உணர்த்திய அருள் வழிப்படி அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து
உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் வலுக் கொண்டதாகச் சேர்த்துக்
கொள்ளுங்கள்.
உயிருடன் ஒன்றும் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றுங்கள்.