ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2024

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பதிவாக்க வேண்டிய இடம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பதிவாக்க வேண்டிய இடம்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது “வெறுமனே சொல்வதல்ல…”
1.ஓ…ம் என்பது நமது உயிர் உடலுக்குள் என்று இயங்கிக் கொண்டுள்ளது. அதற்குப் பெயர் ஓ…!
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ம்… என்று நம் உடலுடன் ஐக்கியமாகின்றது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை
1.உடலுக்குள் இருக்கும் எலும்பு - மேக்னட்
2.அதற்குள் இருக்கும் ஊன் ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது.

அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்தக் குணங்களும் நம் உடலிலேயே இயக்கப்பட்டு அது ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருப்பது நமது உயிர். அதற்கு குருவாக இருப்பதும் நமது உயிர் தான்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும் அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி அந்த ஏக்க உணர்வு கொண்டே சொல்ல வேண்டும்.

ஒரு மைக்… நாம் பேசுவதை இழுத்துக் கவர்ந்து நாடாக்களில் பதிவாக்கப்படும் பொழுது
1.அதில் உள்ள முலாம்…
2.அதற்குள் மறைந்துள்ள காந்தம் எப்படி அது கவர்ந்து பதிவு செய்து கொள்கின்றதோ அதே போல
3.நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளிலிருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயத்தில் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அது கிளர்ந்து எழுகின்றது. அப்பொழுது காற்றிலிருந்து அந்த உணர்வுகளை உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது.

அப்படித் தனது ஆன்மாவாக ஆக வேண்டுமென்றால்…
1.நாம் எண்ணும் எண்ணம் ஊழ்வினையாகப் பதிவாக வேண்டும்
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊனாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டியது வரும்.

நாம் எண்ணிய உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும் பொழுது சுவாசித்த உணர்வுக்கொப்ப உயிரின் தன்மை அது இயங்குகின்றது. அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது.

இப்பொழுது எதை உபதேசிக்கின்றேனோ… கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ்வினையாக… வித்தாகப் பதிவாகின்றது. அப்படிப் பதிவாகி மீண்டும் நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

எந்த மகரிஷிகளின் சக்திகளையோ அல்லது சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல் மிக்க உணர்வலைகளையோ…
1.குருநாதர் கூறிய அருள் வழிப்படி நான் எண்ணிச் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாக எனக்குள் பதிவு செய்ததை மீண்டும் நான் நினைவுக்குக் கொண்டு வந்து
3.விண்ணின் ஆற்றலை எனக்குள் பெருக்கி அதைச் சுவாசித்து
4.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக வெளிப்படுத்துவதை இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால்
5.அந்த உணர்வின் சத்து ஊழ்வினையாக உங்களுக்குள்ளும் பதிவாகிறது.

அந்த ஞானிகள் மனிதர்களாக இங்கே வாழ்ந்த காலங்களில் அவர்களுக்குள் அறியாது வந்த தீய வினைகளை… சில தீய விளைவுகளை… அவர்கள் மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.

அவர்கள் எப்படி அருள் வழியில் வாழ்ந்தார்களோ அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும் அதைப் பெறச் செய்வதற்குத் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).