ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2024

நம் ஆன்மாவில் நடக்கும் “சில விசித்திரங்கள்”

நம் ஆன்மாவில் நடக்கும் “சில விசித்திரங்கள்”

 

துன்பப்படும் உணர்வுகளை ஒருவர் பேசுகின்றார் என்று கேட்டறிகின்றோம். அப்போது அவர்கள் வேதனைப்படும் சொல் உணர்வுகளாக நமக்குள் படர்ந்துவிடும்.
1.வேடிக்கையாகத் தானே கேட்டோம்… அவர் சொன்னதைக் கேட்டறிந்தோம் என்று நீங்கள் நினைக்கலாம்.
2.ஆனால் அவர்கள் பட்ட வேதனையான உணர்வுகள் நமக்குள் கலந்து
3.அந்த உணர்வின் மணம் ஆன்மாவில் சுழன்று கொண்டு தான் இருக்கும்.

உதாரணமாக அந்த நேரம் ரோட்டிலே நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். முன் பார்வையில் வரக்கூடியதை எல்லாம் நம் கண் காட்டும். அதை இழுத்து நமக்குள் நுகர்ந்து அந்த உண்மையான பாதையில் நம்மை வழி நடத்துகின்றது கண்கள்.

இருந்தாலும் துன்பப்டுவோர் சொன்ன அந்தச் சம்பவத்தைக் கேட்டு… நுகர்ந்து எடுத்த அந்த மணமும் நம் உடலில் இருக்கக்கூடிய இந்த மணமும் கலந்து செல்லும்.

முதலில் கேட்டறிந்த வேதனையான உணர்வுகள் கலந்து ரோட்டில் செல்லும் பொழுது…
1.கண்ணுக்கு நேராகத் தெரியக்கூடியதைப் பார்க்க முடியாதபடி
2.அந்த சமயத்தில் சிந்திக்கும் திறன் இழந்து விடுகிறது.

ஒரு பாலிற்குள் அறியாது ஒரு நஞ்சு பட்டால் அதைச் சாப்பிட்டால் எப்படி மயக்கம் வருகின்றதோ அதைப் போல கேட்டறிந்த இந்த உணர்வுகள் நம் உடலில் ஆன்மாவாக… வாசனையாக இருக்கப்படும் பொழுது… கண் முன்னாடி வரக்கூடிய பொருளைக் காண்பித்து இதனுடன் இணைந்து போன உடனே “சிந்திக்கும் திறன் இழந்து விடுவோம்…”

அந்த சமயத்தில் முன்னாடி வண்டி வரும்… சீக்கிரம் விலகி விடலாம் என்ற எண்ணம் வராது. பஸ் வரும்… தெரியாது…!

சில பேரை நீங்கள் பார்க்கலாம் வண்டி வந்து கொண்டிருக்கும்… அது தெரியாது முன்னாடி போய்க் கொண்டே இருப்பார்கள். பஸ்ஸிலையோ காரிலேயே போகும் பொழுது இது போன்று நாம் பார்க்கலாம்.

முன்னாடி பார்ப்பார்கள்… ஆனால் நடந்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் முதலில் பார்த்தது வேடிக்கையானதாக… வேதனையான உணர்வுகளைக் கேட்டறிந்தாலும் அந்த மணம் இங்கே வந்துவிடுகிறது.
1.பஸ் மிகவும் அருகிலே வந்த பின் தான் ஆ…! என்று பயந்து துள்ளிக் குதித்து ஓடுவார்கள்… பார்க்கலாம்
2.சில நேரங்களில் கவலை தோய்ந்த நிலையோ வேதனைப்படும் நிலையோ கேட்டறிந்தால் நாமும் இப்படித்தான் நடப்போம்.

நாம் தவறு செய்யவில்லை… அவர்… தான் பட்ட கஷ்டத்தைச் சொன்னார் அதைக் கேட்டோம். நம்மை அறியாமலே ஒரு நொடி ஏமாந்தால் விபத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

மற்ற கோள்கள் சந்திரனை மறைக்கப்படும் பொழுது அங்கே எப்படி ஒளி மங்குகின்றதோ இதைப் போல
1.நமக்குள் இருக்கும் தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை
2.ஒவ்வொரு எண்ணத்திலும் “சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது” இப்படி மறைத்து விடுகின்றது.

அதனால் தப்பித்துக் கொள்ளும் நிலை இல்லாதபடி இதிலே சிக்கி எத்தனையோ பேர் வேதனைப்படுவரையும் பார்க்கலாம்.

நமக்குள் “1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு” அவை தான் மனிதனை… மனிதனாக உருவாக்கச் செய்தது மனித வாழ்க்கையில் தன்னைக் காத்திடும் நிலையும்… மனிதனாக ஆன பின் இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி பிறவா நிலையை உருவாக்கும் “மனித உடல் - கடைசி…”

உதாரணமாக சூரியன் பிரகாசமான நிலையில் ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் பூமிக்குள் இங்கே மேகங்கள் படர்ந்து விட்டால் அந்த ஒளி மறைந்து விடுகின்றது.

அது போல் நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும்
1.பிற மனிதனுடைய எண்ணங்கள் அதை மறைத்து
2.நம் எண்ணங்களைப் பிறர் கேட்க விடாதபடி குற்றவாளியாக்கச் செய்வதும்
3.துன்ப உணர்வுகளைக் கேட்டுணர்ந்ததால் நம் நல்ல எண்ணங்களை அங்கே பிரதிபலிக்க முடியாதபடியும் செய்து விடுகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

பிறிதொரு மனிதன் வேதனைப்படும் சொல்லோ… அல்லது மற்ற குறைபாடுகளோ… அதை அவர்கள் நமக்குச் செய்ய வேண்டாம்…! அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்… நாம் வேடிக்கை பார்த்தால் போதும்.
1.”அவருடைய செயலை” நம் கண் இழுத்துக் கவர்ந்து நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.சுவாசித்த பின் நம் உயிரிலே படுகின்றது அதை உணர முடிகின்றது தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் தெரிந்து கொண்டது… அவன் உடலில் தவறான நிலையில் செய்தது… அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அன்றைக்கு “ஒரு நான்கு மணி நேரத்திற்காவது”
2.நம் உடல் இழுத்து ஆன்மாவாகப் பெருக்கிக் கொள்ளும்.

அதன் பின் வேறு எந்த எண்ணங்கள் எண்ணினாலும் அதனுடன் கலந்து கலந்து… அன்றைய வாழ்க்கையில் வெறுப்பு சலிப்பு சஞ்சலம்… என்று அடைந்து
1.இது என்ன வாழ்க்கை…? இந்த மாதிரி நடந்து கொண்டிருக்கின்றது…! என்று நாம் சொல்லிக் கொண்டே இருப்போம்.
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஆழமாக அதனின் வித்தின் தன்மையாக அடைந்து விடுகிறது.

நம் உடலில் 1008 குணங்களாக வளர்ச்சி பெற்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தப்பித்துத் தப்பித்து வந்தோம். இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் தீமையின் விளைவுகளுக்கே நம்மை அழைத்துச் சென்று விடும்.

ஆகையினால் தான் உங்களை "அடிக்கடி... அடிக்கடி" ஆத்ம சுத்தி செய்து கொள்ளும்படி சொல்கிறோம்.