நாம் பெறும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… “உணரும் (காணும்) வழி”
பாலிற்குள் பல சத்துள்ள பொருட்களை இட்டிருந்தாலும் அதிலே அறியாது ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்தப் பால் செயலிழந்து விடுகிறது அதைக் குடிப்போரையும் மடியச் செய்து விடுகின்றது.
இது போன்று தான் நாம் நல்ல பண்புகளுடன் இருந்தாலும் சந்தர்ப்பத்தில் சில கடுமையான தீமைகளைச் சந்திக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் எல்லாம் நம் நல்ல குணங்கள் கெட்டுவிடுகிறது.
அதை எப்படி மாற்றுவது…?
மனித வாழ்க்கையில் வரும் இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவர்கள்… நஞ்சினை ஒளியாக மாற்றியவர்கள் அருள் மகரிஷிகள்.
அவர்கள் உணர்வுகளை நமக்குள் இணைத்தால்…
1.அறிவின் ஞானமாக மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும்
2.மெய் ஞானிகளுடன் ஒன்றிடும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது.
3.அதைப் பெறச் செய்வதற்கே யாம் (ஞானகுரு) இதை உபதேசிப்பது
ஆகவே… உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.
இந்த உடல் உங்களுடையது அல்ல…! உயிரால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல். தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் அறியாது வரும் தீமைகளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தீமைகள் அகற்றும் போது நம்மை இயக்கிய… நம்மை உருவாக்கிய… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலை அடையலாம்.
சங்கடங்களோ சலிப்போ மற்ற நிலைகளோ வரப்படும் பொழுது ஒவ்வொரு நொடியிலும்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணை நோக்கி ஏக்க உணர்வைச் செலுத்துங்கள்.
2.தலை நிமிர்ந்து (இலேசாக) உயர்வாக நினைவைச் செலுத்துங்கள்
3.இப்போது உங்கள் ஆன்மாவைக் கடந்து இந்த உணர்வுகள் செல்கின்றது
அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது
1.நீரிலே கல்லைப் போட்டால் எப்படி அதற்குள் அலை அலையாக மாறுகின்றதோ இதைப் போன்று
2.துருவ நட்சத்திரத்தின் அலைகள் உங்களுக்குள் (அலை அலையாக) வருவதை “அந்த ஒளிக் கதிர்களை” உங்களால் உணர அல்லது காண முடியும்.
உங்கள் ஆன்மாவில் பட்ட தீமைகளை இது அகற்றும்… உங்கள் உடலுக்குள் ஊடுருவி அதனின் ஆற்றல் பெருகும்.
இருந்தாலும்… அதிகமான காட்சிகளைக் கொடுத்து விட்டால் அதைப் பார்த்துப் பயப்படுவோர் நிறைய உண்டு.
1.திடீரென்று இந்த மாதிரித் தெரிந்தால் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ…! என்று எண்ணிவிடுவார்கள்
2.கிடைத்ததைப் பற்றி சந்தோஷப்பட்டு மீண்டும் அந்த சக்தியை எண்ணிப் பெறுவோர் “ஒரு சிலரே” உள்ளார்கள்.
3.ஆனால் “பலர்” “இப்படி எல்லாம் தெரிகின்றதே… இது ரைட்டா… தப்பா…?” என்று இந்தக் கணக்குகளைத்தான் போட ஆரம்பித்து விடுகின்றார்கள்
4.இதனால் ஏதாவது நல்லதாகுமா அல்லது கெட்டதாகுமா…? என்று கிடைத்ததையும் இழக்கும் நிலை தான் இருக்கின்றது.
இந்த மனிதனுடைய வாழ்க்கை அவ்வாறு தான் உள்ளது.
ஆனால் மந்திரஜாலங்களையோ அல்லது ஆவிகளை வைத்து அமானுஷ்யமான விசித்திரங்களைக் காட்டினால் அதைக் கண்டு ஆசைப்படுகின்றோம்… அதைப் பெருமையாகவும் பேசுகின்றோம்.
ஆனால் அத்தகைய மந்திர ஒலிகளைப் பதிவாக்கினால்… பின் இறந்தால் நம் உயிரான்மா அவர்கள் கையிலே தான் சிக்கும்… அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானம் பெறுவோம்
2.அதை நமக்குள் வலுவான நிலைகள் கொண்டு வளர்ப்போம்
3.மெய் ஞானிகள் கண்ட பெருண்மைகளை நாமும் கண்டுணரும் சக்தி பெறுவோம்.