ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 12, 2024

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

 

நாம் எத்தனையோ கோடித் தவறுகளைப் பார்த்தாலும் அந்தந்த சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் செலுத்தித் தூய்மைப்படுத்தி இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத்தான் இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள். நாம் பல கோடி உடல்களில் மற்றொன்றைக் கொன்று தின்று இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் கோடிக்கரையாக வந்திருக்கின்றோம்… தனுசு கோடி.

தீமை என்று தெரிந்த பின்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் விஷ்ணு தனுசு.
2.உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்குதல் வேண்டும்.
3.எத்தனை கோடி விதமான உணவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கோடிக்கணக்கான (எண்ணிலடங்காத) உணர்வுகளையும் ஒளியாக மாற்றி அமைத்தது அந்தத் துருவ நட்சத்திரம். அதன் உணர்வை அவ்வப்பொழுது நமக்குள் எடுத்துத் தீமைகளை நீக்குதல் வேண்டும்.

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லும் பொழுது ஒருவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்
1.உள்முகமாக இந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.வேதனைப்படும் உணர்வு நமக்குள் வலுவாகச் சேர்வதற்கு முன் அதைத் தடுத்து நிறுத்திவிட்டு
2.வேதனைப்படுபவனுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்க வேண்டும்
3.அவன் அவன் நலமாக வேண்டும் என்று எண்ணிச் சொல்லிவிட வேண்டும்.

அவன் உணர்வு நமக்குள் வராது…!

அதே போன்று இரண்டு பேர் கொடூரமாகத் தவறு செய்கின்றார்கள். சண்டையிடுகின்றார்கள். அதைப் பார்த்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அவர்களுடைய தவறுகள் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்… அந்த உணர்வுகள் உள் புகுவதில்லை.

1.பின் அந்த உணர்வை ஈர்க்காது ஒதுக்கிவிட்டு
2.அவர்கள் இருவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் பண்புடன் வாழும் தன்மையும் பெற வேண்டும் என்று
3.நாம் விலகி விட வேண்டும்… அந்தத் தீமை நமக்குள் விளையாது.

ஏனென்றால் தவறு செய்கின்றார்கள் என்றால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது கேட்காமல் இருக்க முடியாது.

ரோட்டிலே செல்லும் போது ஒரு வாகனம் வேகமாக வருகிறது என்றால் பார்த்தவுடனே “பயம்” என்ற நிலை வந்து விலகுகின்றோம்.

பார்க்கின்றோம்… பஸ் திடீரென்று நம் பக்கமாகத் திரும்புகின்றது. அந்த அதிர்ச்சியின் வேகத்தில் நாம் ஒதுங்கி விடுகின்றோம்.
1.அப்படி அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால்
2.நாம் அங்கிருந்து விலக முடியாது.

அதிர்ச்சியை ஊட்டுவது எது…?

அதன் வேகத் தொடரை நம் கண் நுகர்ந்து உயிரிலே மோதப்படும் போது உணர்ச்சிகள் தெரிய வருகின்றது. ஆனாலும் அடுத்து அதிர்ச்சியின் தன்மை கூட்டி உடலில் பதட்டமாகி வேகமாக விலகிச் செல்ல வைக்கின்றது.

விலகிச் சென்றாலும் அதிர்ச்சியின் உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சேர்ந்து விட்டால் அடிக்கடி பய உணர்வும் மற்ற நிலைகளும் ஏற்பட நேர்கின்றது.

பயம் அதிகமானால் சிந்திக்கும் தன்மை கூட சில நேரங்களில் முடியாது போய் விடுகின்றது. இப்படி…
1.நம் சந்தர்ப்பம் நாம் நுகர்ந்த நிலைகள் நம் இரத்தங்களிலே மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.
2.சந்தர்ப்பத்தில் தப்பினாலும் அடுத்த கணமே… ஈஸ்வரா என்று
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அந்த அதிர்ச்சியின் உணர்வைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இப்படி வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் வரும்…! அதை அதை அவ்வப்பொழுது தடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மாற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அதுதான் “தனுசு கோடி…”

ஆகவே… உயிரின் தன்மை ஒளியாக்கிய அந்த உணர்வை… அந்தந்த நேரத்தில் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் தீமை சேராதபடி தடுத்து நிறுத்துகின்றோம்.

உடலில் விளைந்த அந்த உணர்வுகள் கொண்டு
1.“இந்த உயிர்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டதால் நேராக நம்மை அங்கேயே அழைத்துச் செல்கின்றது.
2.தொக்கிய உணர்வின் அணுக்களை அங்கே தூய்மைப்படுத்தி விடுகிறது

அப்போது ஏகாந்தமாக… எத்தகைய எதிர்ப்பும் இல்லாது என்றும் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்…!