ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2024

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் தகுதியாக அதைத் தாங்கும் ஆற்றலைப் பெற வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் தகுதியாக அதைத் தாங்கும் ஆற்றலைப் பெற வேண்டும்

 

காலை துருவ தியானத்தின் மூலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடல் முழுவதும் படரச் செய்து நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களில் இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பெருக்கிக் கொண்டால்… விண்ணிலே பரவிக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெறும் தகுதியும்… இந்த மனித வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியும் பெறுகின்றோம்.

1.உங்கள் நினைவினை விண்ணிலே செலுத்தும்படி செய்து
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் “கதிர்பொறிகளை” உங்கள் உடலுக்குள் பரவச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அதைப் பெறும்படி செய்வதுதான் குரு காட்டிய அருள் வழி.
4.துருவ தியான நேரங்களில் உங்களுக்குள் ஒரு புது உணர்வு பரவும்.
5.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் ஒளிக் கதிர்கள் அலை அலையாகச் சுழன்று கொண்டிருப்பதையும் உங்களால் காண முடியும்.

எவர் எவர் இதைப் பெறுகின்றனரோ அவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் அறியாது சேரும் தீமைகளை அகற்றி ஆன்மாவைத் தூய்மையாக்கிடும் சக்தியாக வளரும்.

நீங்கள் சுவாசிக்கும் அந்த உணர்வுகள் தெளிந்த மனதுடன் வாழ்ந்திடச் செய்யும். வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் நுகர்ந்தறியும் உணர்வுக்குள் தீமைகளைப் பிளந்து தீமையற்ற உணர்வை அறியும் ஆற்றலாக உங்கள் நினைவுகள் வளரும். அதே சமயத்தில்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு நொடியிலேயும்
2.அந்த விண்ணின் ஆற்றலை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெற்று பெரும் சக்தி பெறுவீர்கள்.

இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியான நேரத்தில் மறவாது செயல்படுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வந்தால்…
1.நினைவை விண்ணிலே செலுத்தி எண்ணி ஏங்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாகும்.
2.உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்குச் செல்லும்.

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ இன்னல்களிளிலிருந்து விடுபடும் நிலையாக உணர்வுகள் வலுப்பெற்று வலுப் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கிய உயிரால்… உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை தான் கார்த்திகேயா (ஆறாவது அறிவு) என்பது.

எதனையுமே அறிந்திடும் ஆற்றலும் தெளிந்திடும் மனமும் கொண்டவர்கள் தான் நாம். இருளைப் பிளந்து பொருளைக் காணும் நிலை பெற்றுள்ளோம்.

ஒரு தீபத்தில் ஒளியை ஏற்றினோம் என்றால் இருளை மாய்த்து விட்டுப் பொருளைக் காண முடிகின்றது. இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிர்கள் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் சிறுகச் சிறுகச் சேர்க்கப்பட்டு வருகின்றது.
2.அதிகமாகச் சேர்த்தால் உங்களால் தாங்க முடியாது… உடலிலே சூடாகிவிடும்
3.அதே சமயத்தில் அதனுடைய வேகத்தடிப்புகளைத் தாங்கக்கூடிய சக்தி நம்மிடம் இல்லை.

அதைத் தாங்கக்கூடிய நிலைக்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியான நேரங்களில் உங்கள் ஈர்ப்புக்குள் சிறுகச் சிறுக அதைப் பெறக்கூடிய தகுதியை உங்கள் உடலுக்குள் பரவச் செய்து ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்கச் செய்கின்றோம்.

காரணம்… எத்தனையோ விதமான குணங்களை எண்ணி எடுத்துள்ளோம். அதற்குத்தக்க அணுக்கள் விளைகின்றது.

அந்த அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கதிர்களை இணைக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக அதற்குள் விளைந்துள்ள தீமைகள் குறையும். உங்கள் நினைவின் ஆற்றல் விண் செல்லும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.

இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.நீங்கள் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எந்த விண்ணிலே உருப்பெற்றதோ
2.அண்டத்திலிருந்து வரும் எதனையுமே ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் அது எவ்வாறு இருக்கின்றதோ
3.அதனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக எவ்வாறு பேரின்ப பெரு வாழ்வாக வாழ்கின்றார்களோ
4.என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.