துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் சேமித்துக் கொண்டே வந்தால் நம் சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும்
நஞ்சினை நீக்கிடும் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலில்… இப்போது அன்றாட வாழ்க்கையில் வரும் விஷத்தன்மைகளை நீக்கத் தவறினால்… மீண்டும் அந்த விஷத்தினையே சிறுகச் சிறுகச் சேர்த்து விஷம் கொண்ட உயிரணுக்களாக நம்மை அது மாற்றிவிடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே அந்த விஷத்தை அவ்வப்போது நீக்க வேண்டும் என்றால்
1.விஷத்தை அகற்றி இன்றும் ஒளியின் சுடராக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும்
2.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் அடிக்கடி “துருவ நட்சத்திரத்தைப் பற்றி” உங்களுக்கு யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.
துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அகஸ்தியன் தன் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிய உணர்வுகளும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது
அகஸ்தியன் துருவனான பின் வளர்ச்சியில் திருமணமாகி… திருமணமான பின் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாகி… நஞ்சினை அகற்றிடும் அணுக்களைத் தனக்குள் உருவாக்கி… இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாக அமைந்துள்ளார்கள்.
நம் பூமிக்குள் வரும் அல்லது இந்த பிரபஞ்சத்திற்குள் படர்ந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் ஏகாந்தமாக நிலை கொண்டு இருக்கின்றார்கள்.
1.எந்த விஷத் தன்மையும் அவர்களைத் தாக்குவதில்லை…
2.விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…
3.அதை நாம் அனைவரும் பெற வேண்டும்.
வைரம்… அதில் விஷத்தன்மை அதிகரிக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் கொண்டு தான் அதனின் (வைரத்தின்) வீரிய சக்தியை வெளிப்படுத்துகின்றது.
வைரத்தைப் போல் விஷத்தை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் அணுக்களை உருவாக்குவது தான் நாம் செய்யும் காலை துருவ தியானத்தின் முக்கிய நோக்கம்.
ஏனென்றால் இந்த மனிதனுக்குப் பின் அடுத்த நிலை… பிறவி இல்லா நிலை தான்…!
இந்த மனித வாழ்க்கையில் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம்…! என்றால் வாழலாம். ஆனாலும் நாம் நுகர்ந்தறிந்த விஷத்தின் தன்மை நம் உடல் அணுக்களில் சேர்க்கச் சேர்க்க… இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.
நாம் எடுத்துக் கொண்ட குணங்களின் தன்மை எதுவோ அதுவாக உயிர் மாற்றிவிடும். இதிலிருந்து நாம் மீள வேண்டும்.
இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிக் கொண்டே இருப்பதும்
2.உங்களுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டுவதும்
3.பகைமை உணர்வுகள் வராது தடுப்பதும்
4.தீமை தனக்குள் வராதபடி தடுக்கும் சக்தியையும் நீங்கள் பெறுவீர்கள்
5.அதன் உணர்வு கொண்டு சிந்தித்துச் செயல்படும் திறனும் நீங்கள் பெறுவீர்கள்.
ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
எத்தகைய துயரமோ கஷ்டமோ மற்ற நிலைகளைக் கேட்டு உணர்ந்து வாழ்க்கையை வழிப்படுத்தி நடத்த அவைகளை நாம் உபயோகப்படுத்தினாலும்… அப்படி நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் விஷம் கொண்டதாக மாறிவிடுகிறது.
அத்தகைய விஷத்தினை மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு வேண்டும். அதற்கு நாம் நுகரும் உணர்வுகள் விஷத்தை முறித்திடும் சக்தியாக வர வேண்டும்.
நமது உடல் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினைப் பிரிக்கின்றது. ஆனால் நஞ்சின் தன்மை நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து விட்டால்… நஞ்சையே நுகரும் நிலையாகி அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
ஆகவே அதைத் தடுக்க
1.நஞ்சினை வென்று ஒளியாக நிலை கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் நிலையும்
2.அதன் தொடர் கொண்ட நஞ்சினை வென்ற உணர்வுகளையும் நாம் நுகர்ந்து
3.நம் இரத்த நாளங்களில்… நம் உடலில்… சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதே சமயத்தில் இன்றைய காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருக்கப்படும் போது நம் உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் நஞ்சினை ஈர்க்கும் சக்தி வருகின்றது.
1.ஏனென்றால் ஆடைகளில் விஷம் கலந்த கலர்களைத்தான் இணைத்துள்ளார்கள்.
2.அது நம் உடல் வெப்பத்தினால் அதில் இருக்கும் விஷம் எத்தன்மையோ அதன் உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து
3.நமது ஆன்மாவிற்குள் கொண்டு வருகிறது… அந்த விஷத்தன்மையையே நாம் நுகர்கின்றோம்.
4.நம் உடலில் உள்ள அணுக்களுக்கும் சிறுகச் சிறுக விஷத்தின் தன்மையே சேர்கின்றது.
விஷத்தை வென்றிடும் சக்தியைச் சேர்ப்பதகு மாறாக விஷத்தின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… விஷத்தையே உணவாக உட்கொள்ளும்… விஷத்தின் துணை கொண்டு வாழ்ந்திடும் நிலையே… இன்றைய காலங்களில் வளர்ந்து கொண்டுள்ளது.
விஷத்தை அடக்கி வைரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போன்று நாம் ஆக வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கணவன் மனைவி இருவருமே… அந்த சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் எண்ணுதல் வேண்டும்.
சர்வ நஞ்சுகளிலிருந்தும் நாங்கள் விடுபட வேண்டும் என்று இருவருமே சேர்ந்து
1.குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.அமைதி கொண்டு வாழும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
இதை வளர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் விஷத்தின் தன்மை சேராது தடுத்துக் கொள்ள முடியும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்த நாளங்களிலே அதிகமாகச் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.
வெளியில் எங்கே சென்றாலும் இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.