ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2024

அடுத்தவர்களைப் பற்றி நாம் அறிய முற்பட்டால் வரும் தீங்குகள்

அடுத்தவர்களைப் பற்றி நாம் அறிய முற்பட்டால் வரும் தீங்குகள்

 

என் (ஞானகுரு) கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு மற்ற மனிதர்களை உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர். உதாரணமாக ஒருவர் உடலில் வலியும் வேதனையும் இருக்கின்றது என்றால் அதற்கென்று சில முறைகளை குரு எனக்கு உணர்த்தினார்.
1.அந்த முறைப்படி அந்த உணர்வின் நினைவு கொண்டு அவர் உடலுக்குள் கண்களிலே பார்த்தோம் என்றால்
2.மற்ற எதிரியான அணுக்கள் அந்த உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுடன் போர் செய்து
3.அதைக் கொன்று புசிக்கும் நிலையாக வரும் பொழுது வலி ஏற்படுகின்றது என்பதை உணர முடிந்தது.

ஆரம்ப காலத்தில் நிறைய பேருக்கு இதை எல்லாம் நானும் காண்பித்தேன்.
1.உடலிலே வலி ஏற்படும் இடங்களில் என்ன நடக்கிறது…?
2.உடலுக்குள் என்னென்ன உருவாகின்றது…?
3.வயிற்றில் கேன்சரே இருந்தாலும் அந்தக் கட்டியின் நிலை எப்படி இருக்கிறது…? என்று பார்க்க வைத்தேன்.

அதாவது… நோய்க்குக் காரணமான நிலைகள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று குருநாதர் எனக்குக் காட்டிய அருள் வழியில் மற்றவர்களையும் பார்க்கும்படி வைத்தேன்.

ஆனால் அந்த மாதிரிப் பார்க்கும் பொழுது “அங்கே என்ன…? ஏது…?” என்று பிறருடைய நோய்களை அதிகமாகக் கவர்ந்து விடுகின்றார்கள். பின் அந்த நோயைத் தான் அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள்.

அந்த அருள் ஞானிகள் பெற்ற அருள் ஞானத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள முடியவில்லை. காண்பித்த உடனே தெரிந்ததும் பெரிய அதிசயமாக… பேராச்சரியமாகப் போய் விடுகின்றது.

உன் குடும்பத்தில் இப்படி எல்லாம் சண்டை வந்தது என்று நுகரும் ஆற்றல் வந்ததும்
1.கெட்டதை எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்
2.ஆனால் நல்லதைச் சொல்ல முடியவில்லை.

சாதாரணமாக… எந்தெந்த தெய்வங்களை நாம் வணங்கி வருகின்றோமோ இந்த உணர்வலைகள் உடலில் செல்களாக அமைகின்றது. இறந்து விட்டால் அதே பக்தி கொண்டு இன்னொருவர் ஏங்கப்படும் பொழுது இந்த ஆன்மா அங்கே சென்று காட்சியாகக் கொடுக்கும்.

தெய்வத்தின் காட்சிகள் எல்லாம் எப்படி உருவாகிறது…? என்பதை ஆரம்பத்தில் தெளிவாகக் காட்டி வந்தது தான். ஆனால் கடைசியில் என்ன செய்து விட்டார்கள்…?

எந்தெந்த ஆசை கொண்டு… தெய்வங்களை எப்படி வணங்கினார்களோ அந்த மனிதன் இறந்த பிற்பாடு அதே தெய்வ பக்தி கொண்ட மனிதன் ஏங்கினால் அதே ஆன்மா இங்கே வரும்.

எந்த தெய்வத்தை இவர் வணங்கினாரோ அதை தெய்வத்தினை வணங்கி இறந்த அந்த ஆன்மா வந்துவிடும். ஆஹா… மீனாட்சியைப் பார்த்தேன் காமாட்சியைப் பார்த்தேன். எங்கள் குலதெய்வத்தைப் பார்த்தேன் முருகனைப் பார்த்தேன்.

அவர் வழிபட்ட உணர்வுகள்… அதன் வழியில் பார்ப்பார்கள்.

ஆனால் அடுத்து… அவர் எப்படி வேதனைப்பட்டாரோ அதுவும் இவருக்குள் விளையும்… தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது என்று. எந்தெந்த தெய்வத்தைப் எண்ணி எந்த நோயால் மடிந்தாரோ அந்த மடிந்த உணர்வின் தன்மையே இங்கே வரும் இதைப் பார்க்கலாம்… அவருக்குள் அருளாடும்.
1.முருகன் என்னைச் சோதிக்கின்றான்… காளி என்னைச் சோதிக்கின்றது… குலதெய்வமே என்னைச் சோதிக்கின்றது என்று.
2.இவைகள் எல்லாம் உடலுக்குள் அணுக்களாக விளையப்படும் பொழுது அந்த உணர்வுகள் உடலுக்குள் செல்களாக வளர்கின்றது.
3.இறந்த பின் அது அலைகளாகப் படர்கின்றது அதே எண்ணம் கொண்டு பதிந்தபின் அந்த உருவம் தெரிகின்றது

இப்படித்தான் தெய்வங்கள் காட்சியாகத் தெரிய வரும்.