ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2024

விட்ட குறை

விட்ட குறை

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க… ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே...!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.