ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2023

நாடி சாஸ்திரம்

அக்கால ஞானிகள் எல்லாவற்றிற்கும் “காரணப் பெயர்களை வைத்து” நம் வாழ்க்கையில் வரும் தீமை என்ற உணர்வுகளை அறிந்து அதிலிருந்து விடுபட்டு நாம் எவ்வாறு தெளிந்து வாழ வேண்டும் என்பதற்காக சாஸ்திரங்களையும் காவியங்களையும் படைத்துக் கொடுத்தார்கள்..

வியாசகர் பாரதம் என்று சொல்வார்கள்.
1.அதிலே வியாசகர் அவ்வப்போது வருவார்…
2.அதே போன்று அகஸ்தியரும் அவ்வப்போது வருவார்… போவார்…!

வாதாபி என்ற ஒரு அரக்கனையும் அவனுடைய சகோதரனையும் காட்டியிருப்பார்கள். மற்றவர்களைக் கொன்று உணவாக உட்கொள்கிறார்கள் என்றும் காட்டியிருப்பார்கள்.

ஆனால் அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லியிருப்பார்கள்.

வாதாபி ஆடாக மாறுவதும் அதை அடுத்தவன் அறுத்துச் சமைத்து அங்கு வருபவருக்கு உணவாகக் கொடுப்பதும் அவர்களுடைய வழக்கம். சாப்பிட்டு முடிந்த பின் வாடா வாதாபி…! என்று கூப்பிட்டால் வயிற்றைப் பிளந்து அவன் வெளியிலே வருவான்.

இப்படிக் கொன்று விட்டு அவனை இருவரும் சேர்ந்து சாப்பிடுவது அவர்களுடைய வழக்கம். சுருக்கமாக வேட்டையாடும் நிலையாக மீனைப் பிடிக்கத் தூண்டிலில் இரை வைத்துப் போடுவது போன்று அவர்கள் செயல்படும் நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

அகஸ்தியன் அங்கே செல்லப்படும் பொழுது அதே போன்று வாதாபி ஆடாக மாறுவதும் சமைத்து இவன் உணவாக உட்கொண்ட பின் “வாடா வாதாபி…!” என்று இவன் கூப்பிடுகின்றான்.

அவன் வரமாட்டான்… அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டான்…! என்று அப்போது அகஸ்தியன் சொல்கின்றான். வாதாபியைக் கொன்று விட்டான்…! என்று சொன்னதும் இவனுக்குக் கோபம் வருகிறது.

அகஸ்தியனைக் கொல்வதற்கு முயற்சிக்கின்றான். அகஸ்தியனோ அவனை உற்றுப் பார்க்கின்றான்… எரித்து விடுகின்றான்.
1.அகஸ்தியனுடைய சக்தியை அங்கே காட்டுகின்றார்கள்.
2.ஆனால் அவன் கண்டுணர்ந்த வானவியல் புவிஇயல் உயிரியல் தத்துவங்கள் எங்கும் வரவில்லை.
3.ஏதோ வருவார் போவார்… எங்கேயோ காட்டிலே வருவார் போவார்… என்று காட்டிவிட்டார்கள்.

அதே போன்றுதான் வேத வியாசர் என்று பெயரை வைத்திருப்பார்கள். ஆனால் வேதங்களைக் கற்றுணர்ந்தவன் அவன் அல்ல. கண்டுணர்ந்த உணர்வுகளை வேதங்களாக மாற்றிக் கொண்டது பின் வந்தோர்.

அவனை நீசன் என்று வைத்து அவனை ஒதுக்கப்பட்டு அவனின்று வந்த உண்மை உணர்வுகளை மாற்றிவிட்டனர்.

வியாசகர் கண்டதை பிருகு எடுத்தான். அவன் அரசாட்சி நிலையில் வந்தவன். நட்சத்திரங்களின் இயக்கங்கள் எப்படி…? என்று உணர்ந்தான். நட்சத்திரங்களின் சக்திகளைத் தனக்குள் எடுத்து மக்களின் மீது பாய்ச்சி இந்த உலகையே ஆள விரும்பியவன்.

இதே போன்றுதான் அத்திரியும்…! ஒரு அத்தி மரத்தில் இடை இடையிலே கனிகள் எப்படி முளைக்கின்றதோ அதைப் போல் அவன் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் மக்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டு போர் முறை செய்தவன்.

போர் முறைக்குச் சென்று தன் உணர்வுகளை நிறைவேற்றத் தவத்தை அங்கங்கே மேற்கொண்டு அரச சாம்ராஜ்யமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்தான்…! இந்த உடலுக்குத் தான்… விண் செல்லும் முறையே இல்லை.

1.இது போன்ற ஏழு ரிஷிகளைக் காட்டியிருப்பார்கள்
2.ஏழு குணங்களின் உணர்வைத் தனித்துத் தனித்துப் பிரித்து
3.வியாசகன் சொன்னதை எழுத்து வடிவில் கொண்டு வந்து
4.மகாபாரதப் போர் என்று காட்டி அதை அரசனுக்கு உகந்த நிலையாக
5.தன்னுடைய போர் முறைகளுக்காக பல நிலைகளைக் கையாண்டு கொண்டார்கள்.

அதன் வழி தான் இன்றும் நாம் நடந்து கொண்டு வருகின்றோம்…!

உலக ரீதியிலே “சத்திரியன்…” என்று அரசனைக் காட்டி எவனுக்கும் அவன் அடிமை ஆவதில்லை என்றும் மற்றவர்களை அடிமையாக்கி அவன் வாழ்வான் என்றும் அரசன் செய்வதில் தவறில்லை என்று உருவாக்கி இருப்பார்கள்.

அதே போல் “குரு…” என்று உருவாக்கி அந்தக் குருவிற்குத் தவறு செய்யாத நிலையில் அடிபணிதல் வேண்டும் என்றும் சட்டம் இயற்றி இருப்பார்கள்.

“வணிகன்…” அவன் எத்தனை பொய்கள் வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளலாம் அவன் வியாபாரத்தைக் காக்கப் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் உண்மையைச் சொன்னால் வியாபாரம் ஆகாது.

சத்திரிய தர்மத்திலும் வணிகர் தர்மத்திலும் இப்படியெல்லாம் உருவாக்கி உள்ளார்கள். ஆனால் வர்ணாசிரம தர்மத்தில் நாமெல்லாம் (மக்கள்) கீழ் மட்டத்தில் தான் வருகின்றோம்.
1.மக்களை அடிமைப்படுத்தினான் அரசன்
2.அவன் சொன்ன நிலைகளில் அடிமைகளாகத்தான் இன்றும் வாழ்கின்றோம்.

அடிமை என்ற நிலைகள் கொண்டு அரசன் பல உயிர்களைப் பலியிட்ட பின்… பலியிட்ட உணர்வின் தன்மை (ஆவிகளை) கைவல்யப்படுத்தி அவன் சுகபோகமாக வாழும் நிலை தான் அன்று வந்தது.

அதன் வழி எழுதுகின்றான் அந்த அரசன் ஆட்சி புரிந்த நிலையை விஸ்வாமித்திரர் நாடி… அகஸ்தியர் நாடி… போகர் நாடி… அந்த நாடி இந்த நாடி…! என்று அப்படி எழுதி உருவாக்கிய மந்திர ஒலிகளை மனிதனுக்குள் பாய்ச்சி அவன் இறந்த பின் அதைக் கவர்ந்து அவன் சுழற்சி வட்டத்தில் வந்தது தான் (ஆவியின் தன்மை கொண்டு) நாடி சாஸ்திரங்கள்…!

அதிலே அந்தந்தக் காலத்திற்கு ஒப்ப எழுத்துக்கள் மாறும். அதே சமயத்தில் “யட்சிணி…” என்று மாற்றப்பட்டு என்றோ எழுதிய நாடியை இன்றும் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.போன ஜென்மத்தில் நீ இப்படி இருந்தாய்… இங்கெங்கெல்லாம் வந்தாய்
2.இதனுடைய நிலைகள் இப்படி ஆனாய்… இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்
3.இன்னார் மகனுக்கு இந்த திசையில் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லும்.

இப்படி யட்சிணி என்று இந்த உணர்வின் அலைகளைக் கவர்ந்து சொல்லும் பொழுது
1.“தான் என்னமோ மோட்சத்திற்குப் போகின்றோம்…”
2.வாழ்க்கையில் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நாடிகளைத் தேடிச் செல்வார்கள்.
3.காசைக் கொடுத்துவிட்டுத் தேடி அலைவார்கள்

ஞானிகள் சொன்னது அனைத்தையும் இப்படித் தான் தலைகீழாக மாற்றி… காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருளாக மாற்றி விட்டார்கள்.