இன்று குடும்பத்தில் நம்முடைய பையனோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ நாம் எண்ணியபடி சரியாக வரவில்லை என்றால்
1.நம்மை அறியாமல் ஆவேசமான உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது நமக்குள் பேய் மணமாக மாறுகிறது.
நல்லவர்களாக வளர்க்க முதலிலே நாம் ஆசைப்பட்டோம். ஆனால் “தவறு செய்கின்றார்கள்...” என்ற உணர்ச்சிகளை ஊட்டியபின் பேயைப் போல அவர்களைத் தாக்கவும் அறிவை இழக்கச் செய்யும் நிலைகள் வந்து விடுகிறது.
நாமும் நமக்குள் வளர்ந்த அறிவினை வளர்க்க முடியாதபடி தடைப்படுத்திவிடுகிறது.
உதாரணமாக... சந்திரன் பூரண நிலவாக இருப்பது... அடுத்து சிறுகச் சிறுகத் தேய்ந்து கடைசியில் அது எப்படி மறைந்து விடுகின்றதோ அது போன்று நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றும் சந்தர்ப்பங்கள் ஆகி விடுகிறது.
1.அப்படிச் செயலற்றதாக மாறி விட்டால்
2.மீண்டும் நாம் பிறவிக்குத் தான் வருகின்றோம்.
ஆகவே இந்த முழுமையான உடலை… முழுமையான ஒளியாக மாற்றும் மனிதனின் ஆறாவது அறிவைச் சீராக பயன்படுத்தத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியான பயிற்சியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
உண்மையின் உணர்வுகளை நாம் தெரிந்து... பூரண நிலவு போன்று நமது உயிர் என்றும் பூரண நிலை அடைந்திட வேண்டும். அதுவே கடைசி நிலை.
இதை இப்போது இழந்து விட்டால்…
1.இந்த உடலில் நாம் அனுபவிக்கும் துன்பத்தைக் காட்டிலும்
2.எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்து விடும்.
ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கி... அதை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நமக்குள் வளர்த்து... நமது நல்ல உணர்வுகளை உயர்வாக்கி... இந்த உடலுக்குப் பின் “பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…”
1.அதற்குத்தான் யாம் சொல்லும் இந்தத் தியானமே தவிர…
2.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல…!