ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2023

மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?

கோடிச் செல்வம் சம்பாதித்து வைத்திருப்போருக்கும்
1.இன்று அவர்களுக்கு நிம்மதி இருக்கின்றதா…? என்றால் இல்லை..!
2.தேடி வைத்த செல்வத்தைச் சீராக அனுபவிக்கின்றார்களா…? என்றால் அதுவும் இல்லை.

செல்வத்தைக் கண்டு அதனால் வெறுப்பும் வேதனையும் அதிகமாக வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர இந்த உடலில் அமைதி பெரும் உணர்வைப் பெறும் சக்தியினை இழந்து விடுகின்றார்கள்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிற பொழுது நாம் தேடும் செல்வம் நமக்கு எப்படிச் சொந்தமாகும்…?

ஏனென்றால் கோடிக்கணக்கில் செல்வத்தைத் தேடி வைத்திருப்பினும்
1.நமக்குப் பின் குழந்தைகள் அதைச் சீராகப் பயன்படுத்த முடியாதபடி
2.வேறு யார் யாருக்கோ சென்று விடுகின்றது.

சேலத்தில் இது நடந்த நிகழ்ச்சி…! கணவன் மனைவி ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு வயது 80 க்கு மேல் இருக்கும்… செல்வங்கள் இருக்கின்றது… அவர்களுக்குக் குழந்தை இல்லை கடைசி நேரம்… ஆனால் மன நிம்மதி இல்லை.

கையில் 10 லட்சம் பணம் இருக்கின்றது. யாரிடமாவது கொடுத்தால் அதைக் கொண்டு சென்று விடுவார்களோ…? அல்லது ஏமாற்றிவிடுவார்களோ…? என்று இதே சந்தேக நிலையில் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னைப் பற்றி விசாரித்து இதற்குண்டான வழி வேண்டும் என்று எம்மிடம் கேட்டார்கள்.

அதே சமயத்தில் ஒரு சொந்த வீடும் அவர்களுக்கு இருந்தது. 25 லட்ச ரூபாய் பெருமானம் உள்ளது. முக்கியமான ரோட்டிலே அந்த வீடு இருக்கின்றது.

அதை விற்கச் செல்லும் பொழுது ஒருவர் அந்த வீட்டை வாங்க மூன்று லட்சம் ரூபாய் முன் பணம் கொடுக்கிறார். ஆனால் மொத்தத்தையும் கொடுத்து வீட்டை உடனே வாங்கவில்லை… நாளாகிவிட்டது…!

இதையும் என்னிடம் சொல்லிக் கேட்டார்கள்… ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள். பின் வீட்டை விற்று அந்தப் பணம் எப்படியோ அது வந்து சேர்ந்தது.

குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள். ஒரு சிறு ஆசிரமத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏழைக் குழந்தைகளை அதில் வளர்ப்பதற்குக் கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். பண வசதி இல்லாத குழந்தைகளுக்குக் கல்வியும் ஞானமும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்… என்று சொன்னேன்.

சரி… சரி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு டிரஸ்ட் போன்று அமைத்து ஆசிரமத்தை ஏற்பாடு செய்து அதற்கென்று ஒரு ஆசிரியரை வைத்துக் குழந்தைகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்களும் அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருங்கள் என்று சொன்னேன்.

சரிங்க சாமி… சரிங்க சாமி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மொத்தம் 35 லட்சம் ரூபாய் கையிலே வந்த பின் அவர்களாகவே ஆலோசனை செய்து நான் சொன்னபடி செய்வதற்குப் பதிலாக ஒரு “கல்யாண மண்டபத்தைக் கட்டலாம்…” என்ற முடிவுக்கு வந்தார்கள்.

தன் பெயரைப் போட்டு மண்டபத்தைத் தொடங்கலாம் அதில் நிறையத் திருமணங்கள் நடக்கும் என்று அப்படிச் செய்து விட்டார்கள்.

அதற்குண்டான முயற்சிகளை மற்றவர்களிடம் சொல்லி எடுக்கும் போது உங்கள் பேரை வைத்து டிரஸ்ட் என்று அமைத்தால் சரியாக இருக்காது என்று சொல்லி விட்டார்கள்.

பணத்தைக் கையில் வாங்கும் வரை இவர்களைச் சமாதானப்படுத்தி வைத்துவிட்டு அவர்கள் கைக்குப் பணம் வந்தபின்
1.நீங்கள் இங்கே வேலை செய்து சாப்பிட்டு கொள்ள வேண்டியது தான்.
2.பொதுவாகத்தானே இதைச் செய்திருக்கின்றீர்கள்
3.நாங்கள் டிரஸ்ட் அமைத்து எத்தனையோ பேரைச் சேர்த்து இருக்கின்றோம்
4.பணத்தை வசூல் செய்திருக்கின்றோம் என்று சொல்லி இவர்களை “அம்போ…” என்று ஆக்கிவிட்டார்கள்.

நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். உன் மனைவி பேரில் ஒரு லட்சம் ரூபாயாவது பத்திரப்படுத்தி வை…! என்று சொல்லி இருந்தேன்… ஒரு பாதுகாப்புக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.

அது எல்லாம் வேண்டியதில்லை… சாப்பாடு போடுவார்கள்… நாங்கள் பிழைத்துக் கொள்வோம்…! என்று நான் சொன்னதைக் கேட்காமல் செய்தார்கள்.

கடைசியில் மண்டபம் முடிந்தபின் சோற்றுக்கு வழியில்லாமல் போய்விட்டது இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின் “இப்படி ஆகிவிட்டதே…!” என்று மனது விரக்தி ஆகி இறந்து விட்டார்கள்.

சம்பாதித்த பணம் யாருக்குச் சென்றது…? இத்தனையும் இறுக்கிப் பிடித்து வேதனையைத் தான் வளர்க்க முடிந்தது. கோடிக்கணக்கில் இவ்வாறு செல்வத்தைச் சேர்த்தாலும் இந்த நிலை தான் ஆகின்றது.

உடலே நம்முடன் வருவதில்லை… செல்வம் நம்முடன் வருமா…? ஆனாலும் பணத்தின் மீது நமக்கு ஆசை விட்டபாடில்லை...!

இப்படி… செல்வத்தைத் தேடும் எண்ணத்திலேயே தான் நாம் மனித வாழ்க்கையை வாழ்கின்றோமே தவிர வேறும் ஒன்றும் இல்லை. இருந்தாலும்
1.செல்வத்தைக் காக்கும் நிலைக்கு நமக்கு ஞானம் தேவை
2.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது.

செல்வத்தை வைத்து ஞானத்தைப் பெற வேண்டும் என்றால்
1.செல்வம் இருக்கும் பொழுது செருக்கின் தன்மை தான் வரும்.
2.ஞானத்தின் நிலைகள் வருவது கொஞ்சம் சிரமம் தான்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆட்டிப் படைக்கும் சில உணர்வுகளில் இருந்து நம்மை நாம் காக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நுகர்ந்து அவைகளைத் தணித்துப் பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்தால் தான் எத்தகைய நிலையையும் சீராக்க முடியும். நம்மைக் காக்கும் சக்தி அது தான்…!